சென்னை.
ஆரம்பத்தில் துணை நடிகராக சினிமா வாழ்க்கையை தொடங்கிய விஜய்சேதுபதி ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் கதாநாயகனாகி, முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். ‘பீட்சா’, ‘சூதுகவ்வும்’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’, ‘சேதுபதி’, ‘நானும் ரவுடிதான்’, ‘தர்மதுரை’, ‘விக்ரம் வேதா’, ‘96’ என்று பல படங்கள் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தன.
விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது ‘லாபம்’ திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம் ரம்ஜான் பண்டிகை நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘லாபம்’ படத்தின் பாடல் தற்போது புதிய சாதனை படைத்துள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
இப்படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ‘யாழா யாழா’ என்ற முதல் சிங்கிள் பாடலும் டிரெண்டிங்கில் இடம்பெற்றது. இதையடுத்து ‘யாமிலி யாமிலியா’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இப்பாடல் வெளியான 24 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.