‘தளபதி 65’ முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றதால் ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பிய விஜய்!

215

சென்னை.

நடிகர் விஜய் தற்போது ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். நெல்சன் இயக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. இதற்காக விஜய் உள்பட சில நடிகர்-நடிகைகள் மற்றும் முக்கிய தொழில்நுட்ப கலைஞர்கள் மட்டும் ஜார்ஜியாவுக்கு அழைத்து செல்லப்பட்டிருந்தார்கள்.  அங்கு 3 நாட்கள் அடைமழை பெய்ததால், அந்த மூன்று நாட்களும் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. மழை நின்றபின், படப்பிடிப்பை தொடங்கி, தொடர்ந்து நடத்தினார்கள். ஏற்கனவே திட்டமிட்டபடி, 2 வாரத்தில் ஜார்ஜியா சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டன. இதையடுத்து விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் இன்று சென்னை திரும்பினார்கள். தளபதி 65 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் தொடங்க உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

இதற்கிடையே, சென்னையில் நடைபெற இருக்கும் படப்பிடிப்புக்காக மிக பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் செட் ஒன்று அமைக்கப்பட உள்ளதாம். இந்த செட்டில் தான் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்த இருக்கிறார்களாம். 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்படும் ஷாப்பிங் மால் படத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பதோடு, ஷாப்பிங் மாலை மையப்படுத்தி தான் கதையை எழுதப்பட்டிருக்கிறதாம். எனவே, ரியல் ஷாப்பிங் மாலில் படப்பிடிப்பு நடத்தினால் நினைத்தது போல காட்சிகளை படமாக்குவதில் சிக்கல்கள் ஏற்படும் என்பதால் தான் ஷாப்பிங் மாலையே செட் போட முடிவு செய்திருக்கிறார்களாம்.

கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் சென்னையில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தாலும், சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்தால், படப்பிடிப்பில் மாற்றம் செய்யவும் முடிவு செய்திருக்கிறார்களாம்.