‘மாநாடு’ படத்திற்காக ஆறு நிமிட காட்சியை ஒரே நேரத்தில் நடித்து அசத்திய சிலம்பரசன்!

173

சென்னை.

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்துவரும் படம் ‘மாநாடு’.  சிலம்பரசன் கதாநாயகனாக நடித்துவரும் இந்தப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், ஒய்.ஜி. மகேந்திரன், வாகை சந்திர சேகர், எஸ் ஏ சந்திர சேகர், அஞ்சனா கீர்த்தி, உதயா, மனோஜ் கே. பாரதி, பிரேம்ஜி, கருணாகரன், மகத்,  டேனியல் போப்,  உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். உமேஷ் ஜே குமார் கலையை கவனிக்க ஸ்டண்ட் சில்வா சண்டைப் பயிற்சி கையாள மதன் கார்க்கி பாடல்கள் எழுத நடனம் அமைக்கிறார் ராஜூ சுந்தரம். வாசுகி பாஸ்கர் ஆடை  வடிவமைப்பு ஏரியாவை கவனித்துக் கொள்கிறார்.

அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்தப்படத்தில் அப்துல் காலிக் என்கிற கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  நேற்றைய படப்பிடிப்பின்போது, சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்கும் காட்சியை படமாக்கினார் வெங்கட் பிரபு. படத்தின் மிக முக்கியமான, கிட்டத்தட்ட ஆறு நிமிடம் கொண்ட இந்த காட்சியில், ஒரே டேக்கில் நடித்து அசத்தினார் சிலம்பரசன்.

சிலம்பரசன் சிங்கிள் டேக் நடிகர் என்பது அனைவரும் அறிந்தது தான்.. ஆனால் ஆறு நிமிட காட்சியை கூட, ஒரே டேக்கில் அவர் நடித்து முடித்ததை கண்டு அசந்துபோன படக்குழுவினர், காட்சி படமாக்கப்பட்டு முடிந்ததும் உடனே கைதட்டல் மூலமாக சிலம்பரசனுக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.