‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு அஜித்குமார் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்த கட்டமாக வெளிநாடுகளில் படமாக்க வேண்டிய சண்டை காட்சிகள் மட்டுமே பாக்கி உள்ளது. மோட்டார் சைக்கிளில் சேஸிங் காட்சிகளும் எடுத்து விட்டு ‘டப்பிங், எடிட்டிங், ரீ ரிக்கார்டிங், கிராபிக்ஸ்’ உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளை தொடங்க இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு படத்தை முடக்கி உள்ளது. இதனால் திட்டமிட்டபடி படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக்கை மே 1-ந் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்த படக்குழு, பின்னர் அதனை கொரோனாவால் தள்ளிவைத்துவிட்டனர். ஆகஸ்டு மாதம் வலிமை படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்து இருந்தனர். தற்போதைய நிலையில் அதற்கு வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. ஆதலால் ‘வலிமை’ படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு வருகிறார்களாம். ரஜினியின் ‘அண்ணாத்த’ படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ‘வலிமை’ படமும் அந்த ரேஸில் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.