சென்னை.
திருமதி ராதிகா சரத்குமார் அவர்களுடைய ராடன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம், கடந்த பல வருடங்களாக தமிழக பொழுதுபோக்கு துறையில், பல அரிய சாதனைகளை பல்வேறு தளங்களில் நிகழ்த்தி காட்டியிருக்கிறது. குடும்ப பெண்கள் கொண்டாடும் தொலைக்காட்சி சீரியல்களில் தொடங்கி, டெலிஃபிலிம் மற்றும் முழு நீள திரைப்படங்கள் வரை பல வெற்றிகரமான படைப்புகளை தயாரித்து வழங்கியுள்ளது. பல வெற்றிகளை தொடர்ச்சியாக சாத்தியமாக்கிய இந்நிறுவனம் தற்போது OTT தளத்தில் “இரை” எனும் இணைய தொடர் மூலம் தன் புதிய பயணத்தை துவக்கியுள்ளது. இந்த இணைய தொடரில் நடிகர் சரத்குமார் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இன்று ( ஜூலை 5,2021), படக்குழுவினர் கலந்துகொள்ள, மிக எளிமையான பூஜையுடன் துவங்கியது. “தூங்காவனம், கடாரம் கொண்டான்” திரைப்படப் புகழ் இயக்குநர் ராஜேஷ் M செல்வா இந்த இணைய தொடரினை இயக்குகிறார். ரசிகர்களை இருக்கையின் முனையில் கட்டிப்போடும், பரபர திருப்பங்கள் நிறைந்த க்ரைம் திரில்லராக இந்த இணைய தொடர் உருவாகவுள்ளது.
ராடன் மீடியா ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவனர் திருமதி ராதிகா சரத்குமார் அவர்கள் இது குறித்து பகிர்ந்து கொண்டதாவது…
எங்கள் ராடன் மீடியா ஒர்க்ஸ் குடும்ப ரசிகர்களின் ரசனையை முதன்மையாக கொண்டு இயங்கும் நிறுவனம் ஆகும். கடந்த பல வருடங்களாக பொழுதுபோக்கு உலகின், பல்வேறு துறைகளில் குடும்பங்கள் இணைந்து கொண்டாடும், பல கதைகளை வழங்கி பல அற்புதமான வெற்றிகளை பெற்றுள்ளது இந்நிறுவனம். பல வித்தியாசமான படைப்புகளை இந்த தலைமுறையிலும் வழங்க, இந்த வெற்றிகள் பெரும் ஊக்கமாக இருந்து வருகிறது. OTT தளத்தில் எங்களது அறிமுக தயாரிப்பான “இரை” இணைய தொடர், எப்போதும் போல் குடும்ப ரசிகர்கள் அனைவரும் ரசிக்கும் படியான அனைத்து அம்சங்களும் பொருந்திய அற்புதமான கதையாகும். இந்த இணைய தொடர் க்ரைம் திரில்லர் வகையில் உருவானாலும், உறவுகள் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் அம்சங்களும் நிறைந்ததாக இருக்கும். திரு சரத்குமார் அவர்கள் டிஜிட்டல் தளத்தில் எங்கள் நிறுவனம் மூலம் அறிமுகமாவது மிகவும் மகிழ்ச்சி. திரில்லர் வகை படங்களில் தன் திறமையை பெரிய அளவில் நிரூபித்து காட்டிய, இயக்குநர் ராஜேஷ் M செல்வா இந்த இணைய தொடரையும் மிக அற்புதமான படைப்பாக மாற்றுவார் என்றார்.
திருமதி சரத்குமார் மேலும் ஒரு மிக முக்கிய காரணத்தால் மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார் அது குறித்து அவர் கூறுகையில்..
நான் எப்போதும் திரைத்துறையை எனது மற்றொரு குடும்பமாகவே தான் கருதி வந்திருக்கிறேன். இந்த கொரோனா கொடிய காலத்தை கடந்து, தற்போது தொழில்நுட்ப கலைஞர்களும், நடிகர்களும் ஒன்றினைந்து படப்பிடிப்பில் கலந்துகொள்வது மிகப்பெரும் உற்சாகத்தையும் மனதிற்கு பெரும் சந்தோசத்தையும் அளிக்கிறது என்றார்.
இந்த இணைய தொடரில் அனைது வகை மருத்துவ சோதனைகள் செய்யப்பட்டு 75 துணை நடிகர்கள், அரசு வழிகாட்டியுள்ள அனைத்து சுகாதார முன்னெடுப்புகளையும் கடைப்பிடித்து, இன்றைய படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். “இரை” இணைய தொடருக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். யுவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். சசி கலை இயக்கம் செய்கிறார். சில்வா மாஸ்டர் சண்டைப்பயிற்சிகளை கவனிக்க, ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார்.