சென்னை:
சமீபத்தில் கர்நாடகா, கோவா, அரியானா, மிசோரம், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், திரிபுரா, ஜார்க்கண்ட் ஆகிய 8 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நடிகையும், பா.ஜ.க. பிரமுகருமான குஷ்பூ நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், குடியரசுத் தலைவரிடம் ஒரு கேள்வியை மட்டும் கேட்க விரும்புகிறேன். எந்த ஒரு மாநிலத்திலும் ஆளுநர் பதவியில் அமரத் தகுதியான ஒரு பெண்ணைக்கூட நீங்கள் காணவில்லையா? ஏன் இந்த பாகுபாடு? இந்த செயல் வேதனை அளிக்கிறது. நான் உங்களை புண்படுத்தவில்லை என்று நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.
குஷ்பூவின் இந்த கருத்து கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுவாக குஷ்பு எந்த பிரச்சினையிலும் தனது கருத்தை துணிந்து சொல்லக்கூடியவர். அந்த வகையில் இப்போதும் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது கூறியதாவது:-
இந்தியாவிலேயே பெண்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் தரும் கட்சி பா.ஜனதா. அடிமட்ட பூத் கமிட்டியில் கூட பெண் நிர்வாகிகளை கட்டாயம் நியமிக்க வேண்டும். நேற்று நடைபெற்ற மத்திய மந்திரிசபை விரிவாக்கத்திலும் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் கவர்னர்கள் நியமனத்திலும் வழங்கி இருக்க வேண்டும் என்ற எனது கருத்துதான் அது. இதில் எந்த அரசியலும் இல்லை.
தமிழக தலைவர் எல்.முருகன் மற்றும் கிஷன்ரெட்டி ஆகியோர் மந்திரிகள் ஆகி இருக்கிறார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.