மும்பை 2021 ஜுலை 9 :
தமிழில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், ஒன்பது பாக “நவரசா” ஆந்தாலஜி திரைப்படத்தின் டீஸரை வெளியிட்டு, படத்தின் வெளியீட்டு தேதியையும் அறிவித்துள்ளது Netflix நிறுவனம். தமிழின் புகழ்மிகு ஆளுமை இயக்குநர் மணிரத்னம் அவர்கள், இத்திரைப்படத்தினை உருவாக்கியுள்ளார். மணிரத்னம் மற்றும் எழுத்தாளர், புகழ்மிகு படைப்பாளி ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து, மனித உணர்வுகளின் ஒன்பது ரசங்களின் அடிப்படையில் இப்படத்தினை உருவாக்கியுள்ளார்கள்.
மனித உணர்வுகள் – கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை மையமாக கொண்டு ஒன்பது கதைகள் ஆந்தாலஜி திரைப்படமாக Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று 190 நாடுகளில் வெளியாகிறது. தமிழின் பல முன்னனி, திரை ஆளுமைகள் இணைந்து உருவாகியிருக்கும் இத்திரைப்படம் தமிழ் திரைக்கு பெருமை சேர்க்கும் படைப்பாக ஒரு உன்னத தருணமாக நிகழவிருக்கிறது. தமிழ் திரையுலகில் பெரும் புகழையும் பிரபல்யத்தையும் குவித்திருக்கும் முன்னணி நட்சத்திரங்கள், இயக்குநர்கள், இசை ஆளுமைகள், தொழில் நுட்ப வல்லுநர்கள் இணைந்து இந்த கனவு படைப்பினை நிகழ்த்தியிருக்கிறார்கள். தமிழின் உன்னத படைப்பாளிகள் ஒன்றினைந்து உருவாக்கியிருக்கும் இப்படைப்பில் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள், கொடிய நோய்தொற்று பரவலால் முடங்கியிருக்கும் திரைத்துறை தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் இப்படத்தில் எந்த ஊதியமும் இல்லாமல், சுய விருப்பத்தின்பேரில் பணிபுரிந்துள்ளார்கள்.
தமிழ் திரைத்துறையில் தங்களின் தரமான படைப்புகள் வழியே உலக அளவில் சாதனை புரிந்த முன்னணி படைப்பாளிகளான அர்விந்த் சுவாமி, பெஜோய் நம்பியார், கௌதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், ப்ரியதர்ஷன், ரதீந்திரன் பிரசாத், சர்ஜூன் மற்றும் வசந்த் சாய் ஆகிய 9 படைப்பாளிகள் ஒன்றிணைந்து தங்களின் மாறுப்பட்ட பார்வையில் மனித உணர்வுகளின் ஒன்பது ரசத்தை படைப்புகளாக தந்துள்ளனர்.
“நவரசா” ஆந்தாலஜி படைப்பு குறித்து மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் கூறியதாவது..,
ஒரு நல்ல விசயத்துக்காக நிதி திரட்டும் பணிகளை நாங்கள் பல்லாண்டுகளாக செய்து வருகிறோம். ஆனால் இந்த உலக பொது முடக்கம் எங்கள் முகத்தில் அறையும் உண்மையை எடுத்து சொல்லியது. நோய் தொற்றால் ஏற்பட்ட இந்த பொது முடக்கத்தினால் திரைத்துறை தான் மிகப்பெரும் பாதிப்பை பெற்றுள்ளது என்கிற உண்மையை உணர்ந்தோம். சக திரை தொழிலாளர்களுக்காக, ஏதாவது செய்தே தீரவேண்டும் என்று தோன்றியது. திரைதுறை தொழிலாளர்களுக்கு ஆதரவு தரும் வகையில், உதவும் எண்ணத்தில் பிறந்தது தான் “நவரசா” ஆந்தாலஜி படைப்பு.
இந்த ஐடியாவை எங்களது சக, முன்னணி படைப்பாளிகள், நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்களிடம் எடுத்து சொல்லியபோது, அவர்களின் ஆதரவு பிரமிப்பு தருவதாக இருந்தது. அனைவரும் வெகு உற்காசத்துடன் பணிபுரிய சம்மதித்தார்கள். இந்த ஒன்பது படங்களும் மிகப்பெரும் முன்னணி ஆளுமை நிறைந்த குழுக்களுடன், மிக கடினமான சிக்கலான நோய்தொற்று காலத்தில் திட்டமிடப்பட்டது. ஆனால் நோய் தாக்காதவாறு அனைத்து முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளும் கடைப்பிடிக்கப்பட்டு முழுப் பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, இப்போது படம் நிறைவடைந்துள்ளது. தங்கள் சக தோழர்களுக்காக திரை ஆளுமைகள் மிகப்பெரும் அர்ப்பணிப்புடன், ஒன்றிணைந்து உருவாக்கியிருக்கும் அற்புதமான படைப்பை உலகம் முழுதும் 190 நாடுகளில் கண்டுகளிக்கலாம்.
தங்கள் திரைத்துறை நண்பர்களுக்கு, தொழிலாளர்களுக்கு ஆதரவு கரம் தரும் பொருட்டு, முன்னணி கலைஞர்கள் எந்த ஊதியமும் பெறாமல், முழு அர்ப்பணிப்பை தந்து, உருவாக்கியிருக்கும் இந்த உன்னத படைப்பினை உங்கள் பார்வைக்கு வைப்பதில் பெருமை கொள்கிறோம். நம் திரைத்துறை கலைஞர்கள் மற்றும் வல்லுநர்களின் திறமையை எடுத்து காட்டும், இந்த அற்புத ஆந்தாலஜி திரைப்படம் 12000 திரைத்துறை தொழிலாளர்களுக்கு இந்த பொதுமுடக்கத்தில் ஆதரவை தந்துள்ளது. திரைத்துறை முழுதிலிருந்தும் கிடைத்து வரும் ஆதரவுகள் Bhoomika Trust மூலம் ஒருங்கிணைத்து வழங்கப்பட்டு வருகிறது. உணர்ச்சிபூர்வமான இந்த திரைப்பயணத்தில் எங்களுடன் இணைந்ததற்காக Netflix நிறுவனத்திற்கு நன்றி. பெருமை மிகு படைப்பாளி பரத்பாலா அவர்களின் எண்ணத்தில் வடிவமைக்கப்பட்ட, மனித உணர்வுகளின் ஒன்பது ரசங்களை வித்தியாசமான பார்வையில், ஒன்பது கதைகளாக சொல்லும், இப்படத்தின் டீஸர், இன்று ரசிகர்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
படத்தின் விபரங்கள் :
தயாரிப்பாளர்கள் – மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன்
1. தலைப்பு – எதிரி (கருணை)
இயக்குநர் – பெஜோய் நம்பியார்
நடிகர்கள் – விஜய் சேதுபதி , பிரகாஷ் ராஜ், ரேவதி
2. தலைப்பு – சம்மர் ஆஃப் 92 ( நகைச்சுவை )
இயக்குநர் – ப்ரியதர்ஷன்
நடிகர்கள் – யோகி பாபு, ரம்யா நம்பீசன் நெடுமுடி வேணு
3. தலைப்பு -புராஜக்ட் அக்னி (ஆச்சர்யம்)
இயக்குநர் – கார்த்திக் நரேன்
நடிகர்கள் – அர்விந்த் சுவாமி, பிரசன்னா, பூர்ணா
4. தலைப்பு – பாயாசம் ( அருவருப்பு )
இயக்குநர் – வசந்த் S சாய்
நடிகர்கள் – டெல்லி கணேஷ், ரோகிணி, அதிதி பாலன், செல்ஃபி கார்த்திக்
5. தலைப்பு – அமைதி ( அமைதி )
இயக்குநர் – கார்த்திக் சுப்புராஜ்
நடிகர்கள் – சிம்ஹா, கௌதம் வாசுதேவ் மேனன், மாஸ்டர் தருண்
6. தலைப்பு – ரௌத்திரம் ( கோபம் )
இயக்குநர் – அர்விந்த் சுவாமி
நடிகர்கள் – ரித்விகா ஸ்ரீராம், அபிநய ஸ்ரீ, ரமேஷ் திலக், கீதா கைலாசம்
7. தலைப்பு – இண்மை ( பயம் )
இயக்குநர் – ரதீந்திரன் R பிரசாத்
நடிகர்கள் – சித்தார்த், பார்வதி திருவோர்து
8. தலைப்பு – துணிந்த பின் (தைரியம்)
இயக்குநர் – சர்ஜூன்
நடிகர்கள் – அதர்வா, அஞ்சலி, கிஷோர்
9. தலைப்பு – கிடார் கம்பியின் மேலே நின்று ( காதல் )
இயக்குநர் – கௌதம் வாசுதேவ் மேனன்
நடிகர்கள் – சூர்யா, ப்ரயகா ரோஸ் மார்டின்
Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்
Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமானது உலகில் முன்ணனி இணைய ஸ்ட்ரீமிங்க் தளமாகும். 208 மில்லியன் சந்தாதாரர்களுடன் உலகின் 190 நாடுகளில், பல்வேறு மொழிகளில், பலவிதமான வகைகளில் திரைப்படங்கள் இணைய தொடர்கள், டாக்குமென்ட்ரிகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது. இதன் சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், இணைய இணைப்பு இருந்தால் எவ்வளவு கதைகளை வேண்டுமானாலும் பார்க்க முடியும். சந்தாதாரர்கள் படததை நிறுத்தி, ஃபார்வேட் செய்து, எந்த விளம்பரங்கள் இல்லாமல் தங்கள் விருப்பப்படி பார்க்க முடியும். சமீபத்திய தகவல்கள், புதிய செய்திகளுக்கு IG @Netflix_IN, TW @NetflixIndia and FB @NetflixIndia சமூக வலைதளங்களில் இணைந்திருங்கள்.
Justickets குறித்து :
நவரசா ஆந்தாலஜி திரைப்படத்தை மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள். ஜெயேந்திரா பஞ்சாபகேசன் ( இணை நிறுவனர் Qube Cinema ) கோவிட் 19 நோய் தொற்று பரவலால் முடங்கியிருக்கும் திரைத்துறை தொழிலாளர்களுக்கு ஆதரவு தரும் பொருட்டு இத்திரைப்படத்தினை உருவாக்கியுள்ளார். இத்திரைப்படம் Justickets நிறுவனத்தின் கீழ் AP International மற்றும் Wide Angle Creations எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர்களாக இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையின் முன்னணி திரைத்துறை நிறுவனங்கள் தங்கள் சேவைகளை, திரைத்துறையின் நன்மைக்காக, நல்ல நோக்கத்தின் அடிப்படையில் முழுக்கவே இலவசமாக வழங்கியுள்ளன.