சென்னை.
சினிமாத்துறையில் பல சங்கங்கள், சினிமாத் தொழிலாளர்களின் நலனுக்காக இயங்கி வந்தாலும், சில சங்கங்களில் சில போலியான நிர்வாகிகளினால், பல தொழிலாளர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இவற்றை எதிர்த்து குரல் கொடுப்பதோடு, சினிமா தொழிலாளர்களுக்காவும், தொழில் நுட்ப கலைஞர்களுக்காகவும் தன்னலம் பாராமல் குரல் கொடுக்கும் சில பிரபலங்கள் இவர்களுடைய அரசியல் சூழ்ச்சியினால் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்ள நேருடுகிறது. அந்த வகையில், பிரபல திரைப்பட கலை இயக்குநரும், நடிகருமான வீரசமர், தனது கலை இயக்குநர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலுனுக்காக குரல் கொடுக்க, அவருக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
அதன்படி, சினிமா சங்கங்களில் முக்கியமான சங்கமான தென்னிந்திய டிவி மற்றும் திரைப்பட கலை இயக்கநர்கள் சங்கமும், சங்க உறுப்பினர்களும், போலியான நிர்வாகிகள் மூலம் பெரும் சிக்கல்களை எதிர்கொள்ள, அவர்களை எதிர்த்து குரல் கொடுத்த பிரபல கலை இயக்குநரும், நடிகருமான வீரசமர், தனக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது இன்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
நான் கடந்த 15 ஆண்டுகளாக தென்னிந்திய திரைப்படம் மற்றும் கலை இயக்குநர் சங்கத்தில் உறுப்பினராக இருந்து வருகிறேன். மேற்கண்ட கலை இயக்குநர்கள் சங்கம் மிகப்பெரிய பாரம்பரிய பெருமைக்குரிய பின்னணியைக் கொண்ட சங்கம் ஆகும். மேற்கண்ட சங்கத்தில் 2018, 2019-ம் ஆண்டில் நான் பொதுச் செயலாளராக பதவி வகித்தேன். நான் திரைப்பட துறையில் 15 ஆண்டுகளாக கலை இயக்குநராகவும், ஒரு சில படங்களில் நடிகராகவும் பணிபுரிந்துள்ளேன்.
நம்ம வீட்டுப்பிள்ளை, கடைக்குட்டி சிங்கம், கொம்பன், மருது, ஜாக்பாட், பூ, வெயில், காதல் போன்ற நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படங்களில் கலை இயக்குநராக பணிபுரிந்துள்ளேன். நான் கலை இயக்குநர்கள் சங்கத்தில் பொதுச் செயலாளராக இருந்த பொழுது சங்கத்திற்குள் நடந்த பல முறைகேடுகளையும்,
ஊழல்களையும் கண்டுபிடித்து நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்காததால் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டு முறைகேடு சம்பந்தப்பட கே.உமாசங்கர் மற்றும் சம்மந்தப்பட்ட நிர்வாகிகளை விசாரித்த பொழுது அவர்கள் அனைவரும் தாங்கள் செய்த குற்ற செயலை ஒத்துக்கொண்டனர். சங்க தலைவர் இவர்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கிறேன் என்று காவல் நிலையத்தில் கூறி விட்ட வந்த நிலையில் இது போன்ற பிரச்சனையால் நிர்வாகம் கலைக்கப்பட்டு தற்போது ஒன்றரை ஆண்டுகளாக நிர்வாகம் நடைபெறாமல் செயல் இழந்து இருந்து கொண்டு இருக்கிறது.
தற்பொழுது பொய்யாக நிர்வாகி என்று சொல்லி கொண்டு மீண்டும் மேற்கண்ட குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் கே.உமாசங்கர் மற்றும் அவரது கூட்டாளிகளான எஸ்.சுரேஷ், கதிரேசன், ரெமியன் ஆகியோர் சங்கத்தின் நலனுக்கு எதிராகவும், சங்க உறுப்பினர் நலனுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்றனர். இதுபற்றி நான் கலை இயக்குநர் சங்கத்தின் தலைமையான பெப்சி தலைவர் திரு. ஆர்.கே.செல்வமணி அவர்களிடம் 100 பேர் உறுப்பினர்கள் கையொப்பமிட்டு கடிதம் கொடுத்துள்ளோம்.
மேற்குரிய பிரச்சனையினால் தற்பொழுது கலை இயக்குநர்கள் சங்கம் செயல்படாமல் இருந்து கொண்டு இருக்கின்றது. இந்நிலை யில் கலை இயக்குநர்கள் சங்கத்தின் நலனுக்காக போராடி வரும் என்னைப்பற்றி தவறான அவதூறான தகவல்களை பரப்பி பொய்யான புகார்களை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்துள்ளனர்.
இது சம்பந்ந்தமாக மேற்கண்ட விருகம்பாக்கம் காவல் ஆய்வாளர் திரு.முகமது பரகத்துல்லா அவர்கள் கடந்த மாதம் என்னை விசாரணைக்கு அழைத்து தீர விசாரித்ததில் கே.உமாசங்கர் என்பவர் என் மீது கொடுத்த புகார் பொய்யானது என்று அறிந்து கொண்டார். தேவைப்படும் பொழுது உங்களை அழைக்கின்றேன் என்று என்னையும், சக சங்க உறுப்பினர்களையும் அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் கலை இயக்குநர் சங்கத்தில் தலைவர் திரு.அங்கமுத்து சண்முகம் அவர்கள் உடல் நல குறைவால் கடந்த 27.6.2021 அன்று காலமாகி விட்டார். அவரது மறைவிற்கு பிறகு நானும் சங்க சக உறுப்பினர்களும் பெப்சி தலைவர் திரு. ஆர்.கே.செல்வமணியை சந்தித்து கலை இயக்குநர் சங்கத்திற்கு பொதுக்குழு கூட்டி பிரச்சனைகளை பெசி சங்கத்திற்கு தேர்தல் தேதி அறிவிக்குமாறு கடிதம் கொடுத்தோம். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து விட்டார்.
இந்த நிலையில் மேற்கூறிய கே.உமாசங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் வருகின்ற தேர்தலில் நான் போட்டியிட முடியாத அளவிற்கு வேண்டும் என்றே என் மீது தவறான, பொய்யான, அவதூறு செய்திகளை உறுப்பினர்கள் மத்தியில் பரப்பியும், சங்க போலி லெட்டர் பேடு தயார் செய்தும், நிர்வாகிகளின் கையெப்பங்களை போலியாக தயார் செய்தும் என்னை சங்கத்திலிருந்து நீங்கியதாக உறுப்பினர் மத்தியில் வாட்சப் மூலம் பரப்பி உள்ளனர்.
இது சம்பந்தமாக நான் அவர்களிடம் கேட்டபோது, “நீ தேர்தலில் போட்டியிட கூடாது. மேலும் போட்டியிட்டால் உன்னுடைய கை, கால்களை உடைத்து விடுவோம்”, என்று மிரட்டுகிறார்கள். மேலும் சங்கத்தின் பக்கம் உன்னை பார்த்தால் நீ ஆளே இருக்க மட்டாய் என்று மிரட்டுகிறார்கள். மேலும் என்னை வேறு வழியில் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று வாட்சப் மூலம் என்னை மிரட்டுகிறார்கள்.
இதனால் எனக்கு பல பட வாய்ப்புகள் இழக்க நேரிட்டது. எனக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். ஆகையால் என் மீது தவறான, அவதூறான, பொய்யான புகார்களை பரப்பியும் என்னை மிரட்டியும் மேலும் கலை இயக்குநர்கள் சங்கத்தின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வரும் சம்பந்தப்பட்ட நபர்களான
கே.உமாசங்கர் – 9884097997
ரெமியன் – 9841073748
எஸ்.சுரேஷ் – 9841081988
கதிரேசன் – 9444575078
ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறும், எனக்கு தகுந்த பாதுகாப்பை வழங்குமாறும் தங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கலை இயக்குநரும், நடிகருமான வீரசமர் தெரிவித்துள்ளார்.