ஐரோப்பாவில் அஜித் நடிப்பில் உருவாகும் ‘வலிமை’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு!

240

சென்னை.

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘வலிமை’. எச்.வினோத் இயக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர்.

‘வலிமை’ அப்டேட்டுக்காக ஓராண்டுக்கு மேலாக காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை அண்மையில் வெளியிட்டனர்.

அஜித்தின் ஸ்டைலிஷ் லுக், யுவன் சங்கர் ராஜாவின் மாஸான பின்னணி இசை என ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் அமைந்திருந்த இந்த மோஷன் போஸ்டர், தற்போது புதிய சாதனை படைத்துள்ளது.இந்தியளவில் அதிக லைக்குகளை பெற்ற மோஷன் போஸ்டராக, அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் மோஷன் போஸ்டர் இருந்து வந்த நிலையில், தற்போது ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் அந்த சாதனையை 14 மணிநேரத்தில் முறியடித்துள்ளது. இதுவரை ‘வலிமை’  மோஷன் போஸ்டருக்கு யூடியூபில் 5.8 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளது.

அஜித் நடிப்பில் உருவாகும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது,  இன்னும் ஒரு சண்டைக் காட்சி மட்டுமே எஞ்சி உள்ளது. இப்படத்தின் முக்கியமான சண்டைக் காட்சியை கடந்த ஏப்ரல் மாதம் ஐரோப்பாவில் படமாக்க திட்டமிட்டிருந்தனர். அந்த சமயத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வந்ததால், திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்த முடியாமல் போனது.இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால், இந்த மாத இறுதியில், ‘வலிமை’ படக்குழு ஐரோப்பா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு 10 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார் களாம். இதையடுத்து ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது.