தமிழகத்திற்கு ஒரு கோடி கொரோனா தடுப்பூசி தேவை- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

222

சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமாக குறைந்து வருகிறது. முதல் அலையை விட 2-வது அலையில் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகம் ஏற்பட்டன. கடந்த மே மாதம் நோய் தாக்கம் உச்சத்தில் இருந்தது. தமிழகம் முழுவதும் மே 12-ந்தேதி அதிகபட்சமாக 36,184 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அந்த மாதம் முழுவதுமே நோய் பாதிப்பு குறையாமலேயே இருந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் முதல் நோய் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.  ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் ஆகியவற்றால் கொரோனாவின் தாக்கம் வேகமாக குறைந்தது.

இப்படி குறைய தொடங்கிய வைரஸ் தொற்று அதன் பிறகு பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. இந்த மாதமும் நோய் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. தினசரி பாதிப்பு மே மாதம் 30 ஆயிரத்துக்கும் மேல் பதிவான நிலையில் தற்போது அது வெகுவாக குறைந்து இருக்கிறது. நேற்று 2,652 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இதில் 8 மாவட்டங்களில் மட்டுமே 3 இலக்க எண்களில் தினசரி பாதிப்பு பதிவாகி உள்ளது.

இந்நிலையில்கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரி செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகத்திற்கு சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும். தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்துக்கு மிகக்குறைவாகவே தடுப்பூசி ஒதுக்கப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரி செய்ய வேண்டும். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தடுப்பூசிக்கான தேவையை பூர்த்தி செய்வது மிகவும் கடினமாக உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு சரியான அளவில் தடுப்பூசிகள் வழங்க வேண்டும்.

இவ்வாறு பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.