ஈழத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் ஒற்றைப் பனைமரம் 40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 17 விருதுகளையும் குவித்திருக்கிறது.
சிறந்த இயக்குனர் விருது பெற்ற ‘மண்’ பட இயக்குனர் புதியவன் ராசையாவின் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. ஈழத்தில் போர் முடிவுறும் இறுதிநாட்களில் ஆரம்பிக்கும் இக்கதை, சமகால சூழலில் முன்னாள் போராளிகளும் மக்களும் சந்தித்துக் கொண்டிருக்கும் சொல்லத் துணியாத கருவை தெள்ளத் தெளிவாக நகர்த்தும் கதையாக ‘ஒற்றைப் பனைமரம்’ உருவாகியுள்ளது.
இப்படத்திற்கு அஷ்வமித்ரா இசை அமைக்க, தேசிய விருது பெற்ற சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பையும், சர்வதேச விருது பெற்ற இலங்கை ஒளிப்பதிவாளர் மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவையும் மேற்கொண்டுள்ளனர். புதியவன் இராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன், தனுவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். விரைவில் திரைக்கு வர இருக்கும் இப்படம், அமேசான், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளத்திலும் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.