பாடகர் உன்னிகிருஷ்ணன் நடிகை சொர்ணமால்யா இருவரும் இணைந்து வெளியிட்ட ‘காற்றிலே’ லிரிகல் வீடியோ!

305

சென்னை.

‘காற்றிலே: தனிப்பாடலின் லிரி கல்வீடியோவைப்  பாடகர் உன்னிகிருஷ்ணனும்  நடிகை சொர்ணமால்யாவும் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். மேலை நாடுகளைப் போல இங்கேயும் சுதந்திரப்பாடல்கள், ஆல்பங்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

ஹாலிவுட் திரையுலகில் திரை நுழைவிற்கான ஒரு முன்னோட்டமாக குறும்படங்களும் ஆல்பங்களும் இருப்பது போல் இங்கேயும் அந்தப் போக்கு தொடங்கியுள்ளது. அந்த வகையில் தனது திறமைக்கு ஒரு முன்னோட்டமாக பிரகலாத் ராகவேந்திரன் இசையமைத்துள்ள தனிப் பாடல்தான் ‘காற்றிலே’.

ஒரு பாடகராக இவர்  பல இசையமைப்பாளர்களிடம் பாடியிருக்கிறார். இப்போது  பாடகரிலிருந்து இசையமைப்பாளராக மாறியிருக்கிறார்.அது மட்டுமல்லாமல்  குறும்படங்கள், வெப் சீரிஸ், விளம்பரங்கள்  போன்றவற்றிற்கு இசையமைத்துவருகிறார்.

அவரது ‘காற்றிலே’ தனிப்பாடலை முகுந்தன் ராமன் எழுதியிருக்கிறார். பிரதீப் குமார் பாடி இருக்கிறார். இப்பாடல் ரீதிகௌளை ராகத்தை ஆதாரமாகக் கொண்டு இனிய காதல் கீதமாக உருவாகியுள்ளது. இது மியூசிக் மேஜிக் நிறுவன ஸ்டுடியோவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன் இவரது இசையில் உன்னிகிருஷ்ணன் ‘கலர் கனவே’ என்ற  பாடல் பாடிவெளியாகி இருக்கிறது .உன்னி கிருஷ்ணன் தன் மகள் உத்ராவுடன் அப்பா மகள் பாசத்தைப் பற்றிய பாடலான ‘என் மகளே’ என்கிற பாடலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்தடுத்து பாடல்கள் வெளிவர உள்ளன.

இந்தக் ‘காற்றிலே’  பாடல்  13ஆம் தேதி உலக மக்கள் செவிகளுக்கு  விருந்தாக  வெளியாகி இருக்கிறது. ‘காற்றிலே’தனிப்பாடலின் லிரி கல் வீடியோவைப்  பாடகர் உன்னிகிருஷ்ணனும்  நடிகை சொர்ணமால்யாவும் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். பாடலைக் கேட்டு ரசித்துப் பாராட்டி இசையமைப்பாளர் பிரகலாத் ராகவேந்திரனை  வாழ்த்தியுள்ளனர். ‘காற்றிலே’ தனிப்பாடல் இப்போது காற்று மண்டலத்தில் கலந்து  அலையடிக்க ஆரம்பித்துள்ளது.