சென்னை.
விஜய்சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் 7c ஸ் என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘லாபம்’. ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நடிகை சுருதிஹாசன், ஜெகபதி பாபு, கலையரசன், நடிகை சம்பிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் ஒன்பதாம் தேதியன்று வெளியாக இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, மறைந்த இயக்குனர் எஸ்பி ஜனநாதன் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வாக சென்னையிலுள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் ஆறுமுக குமார், பெப்சியின் தலைவர் ஆர் கே செல்வமணி, இயக்குனர் ஆர் வி உதயகுமார் உள்ளிட்ட திரைப்பட இயக்குனர் சங்கர் நிர்வாகிகள், பெப்சி நிர்வாகிகள் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மறைந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதனின் உதவியாளரான ஆலயமணி விழாவிற்கு வருகைத்தந்தவர்களை நெகழ்ச்சியுடன் வரவேற்றார். முன்னதாக மறைந்த இயக்குனர் எஸ்பி ஜனநாதன் அவர்களுக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மவுன அஞ்சலி செலுத்திய பிறகு மக்கள் செல்வன் விஜய்சேதுபதி பேசுகையில்,
‘இங்கு வருகை தந்து சிறப்பித்த அனைவரும், மறைந்த இயக்குனர் ஜனநாதனின் நினைவுகளை வார்த்தைகளாக மாற்றி பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. வரவேற்புரை பேசத் தொடங்கி, உணர்வு மிகுதியால் தொடர்ந்து பேச இயலாத ஆலயமணி அவர்களின் உணர்வுதான் அனைவருக்கும். ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக வாய்ப்பு தேடிய காலகட்டத்திலிருந்து அவரை சந்தித்தது முதல் அவரது மறைவு வரையிலான இந்த காலகட்டம் மறக்க முடியாது. அவருக்கும் எனக்கும் இடையிலான உறவையும் வார்த்தைகளால் குறிப்பிட இயலாது. அவரின் மறைவிற்குப் பிறகு அவரைப் பற்றி கூடுதலாக அறிந்து கொள்ளும் ஆவல் ஏற்பட்டது.
எனக்கும் அவருக்குமான உறவு தந்தை-மகன் போன்றதொரு உறவு. அருகில் இருக்கும் பொழுது அதன் அருமை தெரியாது. தூரத்திலிருந்து நான் அவரை நேசித்துக் கொண்டே இருந்தேன். காலம் எப்படி படு பாதகமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அவரைப் பற்றி தெரிந்திருந்தால்… புரிந்து கொண்டிருந்தால்.. அவருடன் நிறைய நேரம் செலவிட்டிருப்பேன். அவருடன் நன்றாக பழகத் தொடங்கிய இந்த ஐந்து ஆண்டுகளில் இன்னும் அதிகமாக அன்பு பரிமாற்றம் நடந்திருக்க வேண்டும் என தற்போது நினைக்கிறேன். சில நேரங்களில் மனிதர்கள் மீது அன்பு செலுத்துவதை பயன்படுத்தி இருக்கலாம். நான் அதை தவற விட்டிருக்கிறேன். யாராவது உங்கள் மீது அன்பு பாராட்டினால், அவர்களை நீங்கள் புரிந்து கொண்டால்.. அவரிடம் சென்று நிறைய நேரத்தை செலவிடுங்கள் அன்பை பயன்படுத்தி உறவை மேம்படுத்துங்கள்.
இந்தப் படத்தில் பணியாற்றியது அற்புதமான அனுபவம் என அனைவரும் தெரிவித்துவிட்டனர். இதை கடந்து என்னிடமும் இதை பற்றி கூற புதிய வார்த்தை எதுவும் இல்லை. இந்தப் படம் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்றால், அது அதன் முழு பொறுப்பும் தலைவர் ஜனநாதனையே சேரும்.
இங்கு பேசும்பொழுது ஆர்கே செல்வமணி, ஜனநாதனின் தஞ்சாவூர் பெரிய கோயில் பற்றிய கதையை படமாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால் என்னுடைய அனுபவத்தின் படி ஜனநாதன் ஒரு கதையை எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமென்றாலும் மாற்றி மாற்றி யோசித்து எழுதக்கூடிய படைப்பாளி. ஒவ்வொரு படத்திலும் பெரும் மாற்றங்களை செய்துகொண்டே இருப்பார். படத்திற்காக உழைத்துக் கொண்டே இருப்பார். புதிய புதிய செய்திகளை தெரிந்துகொண்டு அதனை படைப்பில் இணைத்துக் கொண்டே செல்வார். அதனால் அவர் எழுதிய தஞ்சாவூர் கோயில் பற்றிய கதையை படமாக்குவதற்கான திட்டம் எதுவும் என்னிடம் இல்லை. ஏனென்றால் அவர் பணியாற்றும் ஸ்டைல் எனக்கு தெரியும்.. தினமும் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருப்பார். அதனால் இதுதான் கிளைமாக்ஸ்… இதுதான் இடைவேளை காட்சி… இதுதான் வசனம்… என்று எந்த வரையறையும் அவரிடம் இருக்காது. அவருடன் இரண்டு படங்களில் பணியாற்றியிருக்கிறேன். படப்பிடிப்பில் ஒரு வசனம் பேசியிருப்போம் அதனை பின்னணி பேசும் பொழுது மாற்றி பேச வைத்து காட்சியின் சுவையை மேம்படுத்தியிருப்பார். அதனால் அவரை எளிதில் கணிக்க முடியாது.
இப்படத்தின் தயாரிப்பாளரான ஆறுமுகக்குமாரை எனக்கு 12 ஆண்டுகளாக தெரியும். இதுவரை நான் நான்கு படங்களை தயாரித்திருக்கிறேன். ஒவ்வொரு படத்தின் பட்ஜெட் என்ன என்று எனக்கு தெரியாது. அதைத் தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் இல்லை. ஏனெனில் அதை தெரிந்து கொள்வதில் அக்கறை காட்டினால், என்னுள் இருக்கும் கலை இறந்துவிடும் என்ற பயம் எனக்குள் இருக்கிறது. இது என்னுடைய சொந்தப் பிரச்சனை. இதனால் பண வரவு விஷயத்தில் நஷ்டத்தை எதிர்கொள்ளலாம். ஆனால் தொழில் பலவீனம் அடைந்தால்.. என்னால் தாங்கிக் கொள்ளவே இயலாது. அத்துடன் என்னால் ஒருபோதும் என்னை இழக்க முடியாது. என்னுடன் என்னுடைய பள்ளிக்கூடத் தோழன் சந்திரசேகர் இருக்கிறார். அவர்களிடம் இந்த பொறுப்பை விட்டு விடுகிறேன். இந்தப்படத்தில் நான் சம்பளமாக எதையும் பெறவில்லை. எடுக்கவும் இல்லை. இந்த திரைப்படம் நல்லபடியாக வெளியாக வேண்டும். என்னுடைய தாய் தந்தையர், தாத்தா பாட்டி போன்றவர்கள் செய்த புண்ணியத்தால் ‘லாபம்’ படத்தில், ஜனநாதன் சார் இயக்கத்தில் நடித்திருக்கிறேன்.
ஜனநாதன் சார் ‘ஒரு திரைப்படத்தை பொழுதுபோக்கு’ என்று சொல்வதை ஒப்புக் கொள்ள மாட்டார். திரைப்படம் என்பது பொழுதுபோக்கு என்ற எல்லையும் கடந்து, பார்வையாளர்களை ஏதேனும் ஒரு விஷயத்தில் சிந்திக்கத் தூண்டுகிறது. அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை திரைப்படத்தைப் பார்க்கும் பலரும் பல தருணங்களில் இந்த காட்சி என்னை மாற்றியது. இந்தக் காட்சி என்னை யோசிக்க தூண்டியது… இந்த காட்சி என்னை மனிதனாக்கியது.. என சொல்வதை கேட்டிருக்கிறோம். அது எந்த மொழி படமாக இருந்தாலும் பரவாயில்லை. திரைப்படம் ஏதோ ஒரு வகையில் நம்மில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. உலகம் முழுவதும் மனிதனின் உணர்வுகள், ஒரே வகையான தாக்கத்தை ஏற்படுத்தி நம் மனதை தொடுகிறது. அதனால் திரைப்படம் சாதாரண பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது அதையும் கடந்து ஏதேனும் ஒரு பாதிப்பை மனிதர்களுக்குள் ஏற்படுத்துகிறது. மக்கள் சிந்திக்க வேண்டியவற்றை பிரதானமாக எடுத்துச் சொல்வது கலை வடிவங்கள்தான். ஒரு நகைச்சுவை காட்சி கூட ரசிகர்களை யோசிக்க வைக்கும். அதனால் கலையை சாதாரண பொழுது போக்கு அம்சம் என்ற கோணத்தில் மட்டும் அணுகாதீர்கள்.
கலை என்னை சிந்திக்க வைத்தது. அதனால் இத்துறையில் அடி எடுத்து வைத்தேன். இதுதான் என்னுடைய வாரிசுகளுக்கும் கற்றுக் கொடுக்கிறேன். அதனால் ஒரு படத்தைப் பார்த்துவிட்டு நன்றாக இல்லை என்று மட்டும் விமர்சிக்காதீர்கள். அதிலிருக்கும் எந்த சிந்தனை சிறந்தது? எது பலவீனமாக இருக்கிறது? என்பதை உணர்ந்து, திறனாய்வு செய்ய பழகிக் கொள்ளுங்கள். என்னுடைய வாரிசுக்கு இதைத்தான் நான் கற்றுக் கொடுக்கிறேன். ஒரு விஷயத்தை குறை சொல்வதன் மூலமாக நம்மை நாமே புத்திசாலிகள் என்று நம்பிக் கொண்டிருக்கின்றோமோ என எண்ணத் தோன்றுகிறது. இங்கு ஒருவரை குறை சொன்னால் நான் புத்திசாலி ஆகி விடுகிறேன். கலை மனிதனை சிந்திக்க வைக்கிறது அதனால் தான் பல கோடி ஆண்டுகளுக்கு பிறகு அது இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது.
மேலும் இந்தப் படத்தைப் பற்றி நான் சொல்வதை விட, மறைந்த இயக்குனரும் என்னுடைய தலைவருமான இயக்குனர் ஜனநாதன் பல்வேறு பேட்டிகளில் சொன்னதை நான் இங்கு குறிப்பிடுகிறேன்.
‘ சேத்துல கால் வச்சாதான் சோத்துல கை வைக்க முடியும் என விவசாய பத்தி சொல்லி சுருக்கிட்டாங்க. நான் விவசாயத்தை எப்படி பார்க்கிறேன்னே.. பிரிட்டிஷ்காரன் இந்தியாவுக்கு வந்தததே.. இந்த கிராம பகுதியில் நடக்கிற விவசாயத்தை பார்த்துதான். தங்கம் மாதிரி பொருளாய் இருந்தா.. அவன் எப்பவோ எடுத்துட்டு போய் இருக்கலாம். ஆனா இந்த மண்ணுல முன்னூறு நானூறு வருஷமா பருத்தியை எடுத்து கிட்டே இருக்காங்க. கரும்பை எடுத்துகிட்டே இருக்காங்க. இதுக்கு உலக அளவுல மார்க்கெட் இருக்கிறதால.. இன்னும் கூட எடுத்துகிட்டு இருக்காங்க. இந்தியா முழுக்க சுமார் 2000 சர்க்கரை ஆலை இருக்கு.. இவை அனைத்தும் கரும்பை மூலப்பொருளாக வைத்துதான் இயங்குது இந்த கரும்பிலிருந்து வர்ற சர்க்கரை, சர்க்கரையிலிருந்து வர்ற மொலாசஸ், மொலாசஸிருந்து வர்ற ரம், ஜின், பிராந்தி, பால் கலந்த சாக்லேட், இதுல வர்ற மின்சாரம், அத தொழிற்சாலைக்கு பயன்படுத்திய பிறகு மீதமுள்ள மின்சாரத்தை விற்பனை செய்வது, கரும்பு சக்கையிலிருந்து பேப்பர் தயாரிப்பது என எல்லாமே விவசாயத்தில் இருந்து தான் கிடைக்கிறது.’
‘பஞ்சாலை, கரும்பாலை என விவசாயத்திலிருந்து வர்ற எந்த பொருளாக இருந்தாலும் சரி வேஸ்டேஜ் அப்டின்னு ஒன்னும் இல்ல. பல நாடுகள் தங்களுடைய வேஸ்டேஜ் கொட்றதுக்குன்னு சில நாட்ட செலக்ட் பண்ணி பயன்படுத்தறாங்க. நம்ம நாட்டுக்கும் கன்டெய்னர் கன்டெய்னரா ஏராளமான வேஸ்ட் அனுப்புறாங்க..அதனால விவசாயத்தை நம்பி பல தொழிற்சாலைகள் இயங்கி கொண்டிருக்கு. கோடிக்கணக்கான பணம் புழங்கிக் கொண்டிருக்கு. சோத்து பிரச்சனை இல்லை. வெளவிச்சு பயிரிட்ட விவசாயி, அதுல உருவான பாட்டில வாங்கி குடிக்க சாய்ந்தரம் ஆனதும் க்யூவுல போய் நிற்கிறான். இது என்னுடைய உற்பத்தி செஞ்சு வர்ற பொருளிலிருந்து தான் பீராவும், பிராந்தியாவும் இங்க வித்து லாபம் சம்பாதிக்கிறாங்கன்னு விவசாயிக்கு தெரியல அதைதான் இந்த படம் சொல்லுது.’ என்றார்.
அனைத்தையும் கடந்து தமிழகம் முழுவதும் திரையரங்குகளை திறக்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி. இது ‘லாபம்’ படம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. திரைத் தொழில் என்பது பல லட்சம் குடும்பங்களின் உழைப்பை உள்ளடக்கியது. இவர்களின் அனைவரின் சார்பாகவும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மேலும் திரையரங்குகளுக்கு வரவிருக்கும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வருக! வருக! என மனமார வரவேற்கிறேன்.’ என்றார்.