அஜித் ரஷ்யாவில் தனது பைக் பயணத்தை 5000 கிலோமீட்டர் பயணம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல்!

157

சென்னை.

எச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்து வரும் அஜித், படப்பிடிப்பு முடிந்தும் இன்னும் ரஷ்யாவில் இருந்து சென்னை திரும்பவில்லை.போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில்  அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, ‘குக் வித் கோமாளி’ புகழ், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இவரது இசையில் சமீபத்தில் ‘நாங்க வேற மாதிரி’ என்ற பாடல் வெளியாகி வைரலானது. இந்நிலையில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு ரஷ்யா சென்றிருந்தது. அதில் அஜித் பங்கேற்கும் மிகப்பெரிய பைக் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன. தற்போது இந்த படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ‘வலிமை’ படக்குழு மாஸ்கோவில் இருந்து சென்னைக்கு திரும்பி விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பி விட்ட நிலையில் அஜித் மட்டும் இன்னும் ரஷ்யாவில் தங்கியிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ரஷ்யாவில் தனது பைக் பயணத்தை அஜித் தொடர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்காக ரஷ்யாவில் ஏற்கனவே பைக் பயணம் செய்தவர்களிடம் அவர் ஆலோசனை கேட்டு வருவதாகவும் விரைவில் அவர் ரஷ்யாவில் 5000 கிலோமீட்டர் பயணம் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ரஷ்யாவில் பைக்குடன் அஜித் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் ஏற்கனவே சிக்கிம் மாநிலம் வரை சுமார் 10,000 கிலோ மீட்டர் பைக்கில் பயணம் செய்தார். அதன் புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.