தமிழக கவர்னராக பதவியேற்ற ஆர்.என்.ரவிக்கு மு.க.ஸ்டாலின், எடப்பாடி நேரில் வாழ்த்து!

220

சென்னை:

தமிழகத்தில் கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநிலத்துக்கு முழு நேர கவர்னராக சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டார்.இதையடுத்து பீகார் மாநிலத்தை சேர்ந்த  ஆர்.என்.ரவி தமிழகத்தின் புதிய கவர்னராக அறிவிக்கப்பட்டார். நாகாலாந்து மாநில கவர்னராக கடந்த 15-ந் தேதி வரை பொறுப்பு வகித்த இவர் தமிழகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். புதிய கவர்னராக அறிவிக்கப்பட்ட ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் இரவு டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தார். விமான நிலையத்தில் அவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். அதன்பிறகு ஆர்.என்.ரவி கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்றார். அங்கு அவருக்கு தமிழக காவல் துறையின் குதிரைப்படை சார்பில் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. அதன் பிறகு அவர் கிண்டி கவர்னர் மாளிகையில் தங்கினார்.

இன்று (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கிண்டி கவர்னர் மாளிகையில் தர்பார் மண்டபம் அருகே உள்ள திறந்தவெளி புல்வெளி அரங்கில் ஆர்.என்.ரவி பதவி ஏற்கும் விழா நடந்தது. 10.30 மணிக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் ஆர்.என்.ரவியை அழைத்து வந்தனர். விழா மேடையில் ஆர்.என்.ரவி, அவரது மனைவி, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் அமர்ந்து இருந்தனர். இதையடுத்து 10.33 மணிக்கு காவல்துறையின் இசைக்குழு இசைத்த தேசிய கீதத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. பின்னர் தலைமை செயலாளர் இறையன்பு, “இந்திய அரசியலமைப்பு சட்டப்படி தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி ஜனாதிபதியால் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்” என்ற குறிப்பை வாசித்தார்.இதைத் தொடர்ந்து அவர் புதிய கவர்னராக ஆர்.என்.ரவியை பதவி ஏற்க வரும்படி அழைத்தார். 10.35 மணிக்கு தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி பதவி ஏற்றுக்கொண்டார்.

தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவி பிரமாணத்தை வாசிக்க வாசிக்க அதையே ஆர்.என்.ரவி வாசித்து பதவி ஏற்றுக்கொண்டார். பின்னர் ஆர்.என்.ரவியும், சஞ்சீவ் பானர்ஜியும் கோப்புகளில் கையெழுத்திட்டனர். பதவி ஏற்பு முடிந்ததும் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி கைகுலுக்கி வணக்கம் செலுத்தி வாழ்த்து தெரிவித்தார்.கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகம் பரிசு வழங்கி வாழ்த்தினார். ஆர்.என்.ரவியின் மனைவிக்கு மு.க.ஸ்டாலின் பொன்னாடையை பரிசாக வழங்கினார். தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மலர் கொத்துகளை ஆர்.என்.ரவிக்கும், அவரது மனைவிக்கும் வழங்கினார்.

இதையடுத்து பெண்கள் தேசிய கீதம் பாடினார்கள். அத்துடன் புதிய கவர்னர் பதவி ஏற்பு விழா நிறைவு பெற்றது. 10 நிமிடங்களில் மிக எளிமையாக விழா நடைபெற்று முடிந்தது. விழாவில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன், தங்கம் தென்னரசு, சாமிநாதன், செந்தில்பாலாஜி, சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், காந்தி, கண்ணப்பன் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, வேலுமணி, வைத்திலிங்கம், தங்கமணி, தனபால் ஆகியோரும் பங்கேற்றனர்.

ஐகோர்ட்டு நீதிபதிகள், தூதரக அதிகாரிகள், தமிழக உயர் அதிகாரிகளும் விழாவில் பங்கேற்றனர். விழாவுக்கு வந்திருந்த அனைவரும் அரங்கில் சமூக இடைவெளி விட்டு இருக்கைகளில் அமர வைக்கப்பட்டு இருந்தனர்.புதிய கவர்னராக பதவி ஏற்றுள்ள ஆர்.என். ரவி பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்தவர். இயற்பியலில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். பத்திரிக்கைத் துறையில் சிறிது காலம் பணியாற்றிய பிறகு 1976-ம் ஆண்டில் இந்திய காவல் பணியில் சேர்ந்தார். கேரள மாநிலப் பிரிவில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பல்வேறு முக்கியப் பதவிகளில் பணியாற்றினார். மத்திய புலனாய்வுப் பிரிவில் பணியாற்றிய போது, ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். மத்திய அரசின் உளவுத்துறையில் பணியாற்றிய போது, வடகிழக்குப்பகுதிகளில் பெருமளவில் காணப்பட்ட வன்முறைக்கு எதிராக முக்கிய பங்காற்றினார். பல பயங்கரவாத குழுக்களை அமைதி நிலைக்கு திரும்ப வழி வகுத்தார்.

2012-ம் ஆண்டு அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, பிரதமர் அலுவலகத்தில் இணை புலனாய்வு குழுவின் தலைவராக செயல்பட்டு வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 1-ந்தேதி முதல் கடந்த 15-ந்தேதி வரை நாகாலாந்தின் கவர்னராக பொறுப்பு வகித்தார்.