சென்னை.
தற்போது ஆங்கில மருந்து தயாரிக்கும் தொழிலில் இருப்பவர்கள், நோயாளிகளை குணப்படுத்த மருந்து தயாரிப்பதை விட, பலவித கிருமிகளை பரப்பிவிட்டு, அதற்கான மருந்துகளை தயாரிக்க முயற்சி செய்கிறார்கள் என்பதால் ஆங்கில மருத்துவம் மீது அதிக நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார் நாயகன் செந்தில்நாதன். இதனால் அவர் தனது கிராமத்தில் இயற்கை மருத்துவம் சிறந்தது என்று இயற்கை உணவகம் நடத்தி வருகிறார்.
அதே ஊரில் வசிக்கும் சாண்ட்ரா நாயரை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட செந்தில்நாதன். பிரசவத்தின் போது மனைவி சாண்ட்ரா இறந்துவிடுகிறார். மனைவியை இழந்தாலும். தனக்கு பிறந்த பெண் குழந்தையை அதிக பாசத்துடன் வளர்த்து வருகிறார் செந்தில்நாதன்.
தனது கிராமத்தில் நடந்த திருவிழாவில், அங்கு விளையாடிக் கொண்டிருந்த, செந்தில்நாதனின் ஆறு வயது மகள் மர்ம நபர்களால் கடத்தப்படுகிறார். இதனால் அதிச்சியடைந்த, செந்தில்நாதன் தனது மகளை கடத்தியவர்களை விரட்டி செல்கிறார். எதற்காக தனது மகளை கடத்தினார்கள் என்று புரியாமல் தவிக்கும் செந்தில்நாதன் கடத்தியவர்களை கண்டுபிடித்தாரா? என்பதுதான் இப் படத்தின் மீதிக்கதை.
இப் படத்தில் நாயகனாக நடித்திருக்கும் செந்தில்நாதன், படம் முழுவதும் வேட்டியுடன் சிறப்பாக நடித்திருந்தாலும், சில இடங்களில் நடிப்பில் தொய்வு ஏற்படுகிறது. நாயகியாக வரும் சாண்ட்ரா நாயர் அழகாக அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் அர்ச்சனா சிங் நடிப்பில் பிரகாசிக்கிறார். நாயகனின் தாத்தாவாக நடித்திருக்கும் கவிஞர் விக்ரமாதித்யன், குள்ளப்பள்ளி லீலா, செல்லத்துரை ஆகியோர் கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு சிறப்பாக நடித்து இருக்கிறனர்.
கிராமத்து பின்னணியில் அப்பா மகள் பாசம், இயற்கை மருத்துவத்தின் மகிமை, காதல், கிரைம் என கலந்துக் கொடுத்து இருந்தாலும் பணத்திற்காக ஆங்கில மருத்துவத்துறை மக்களை எப்படி ஏமாற்றுகிறது என்பதை மிக தெளிவுடன் சொல்லி அதிர வைத்திருக்கிறார். இயக்குனர் சபரிநாதன் முத்துப்பாண்டியன்.
பாண்டியன் கருப்பனின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் அழகாக இருக்கிறது. காதல் காட்சிகளில் கையாண்டிருக்கும் கோணங்கள் ரசிக்க வைக்கிறது. மஸ்தான் காதரின் இசையில் பாடல்களும்,. பின்னணி இசையும் சிறப்பு.
இப்படம் பல விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளை குவித்துள்ளது. இயற்கை மருத்துவத்தின் அவசியத்தையும் பேசியிருக்கிறது.
மொத்தத்தில் இப்படத்தில் அப்பா மகள் பாசத்தை உருக்கமாக சொல்லியிருப்பதால் கண்டிப்பாக பார்க்கலாம்.