யோகி பாபு, ஓவியா நடிக்கும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ படப்பிடிப்பு துவக்கம்!

153

சென்னை.

அன்கா புரொடக்‌ஷன்ஸ் முதல் தயாரிப்பில் யோகிபாபு, ஓவியா நடிப்பில் உருவாகும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. நடிகர் யோகிபாபுவும், நடிகை ஓவியாவும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகிவந்த நிலையில், அந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.. யோகிபாபு, ஓவியா கூட்டணியில் தயாராகும் படத்திற்கு ‘கான்ட்ராக்டர் நேசமணி’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அத்துடன் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

‘கான்ட்ராக்டர் நேசமணி’ என்ற கதாபாத்திரம் வடிவேலு நடித்ததால் பிரபலமானது. அதேவேளையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ட்விட்டரில் இந்தப் பெயர் அடிபட, #PrayforNesamani என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு உலகளவில் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ ட்ரெண்டானது. அந்த சமயத்திலேயே, கான்ட்ராக்டர் நேசமணி தலைப்பில் தமிழில் படமெடுக்க பலரும் விருப்பம் தெரிவித்தனர்.

இப்போது அதற்கு அறிமுக இயக்குநர் ஸ்வாதீஷ் எம்.எஸ். வடிவம் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தை ஸ்வாதீஷ் எம்.எஸ். இயக்க, அன்கா மீடியா சார்பில் ‘வால்டர்’ படத்தின் இயக்குநர் யு.அன்பு, ‘பகைவனுக்கு அருள்வாய்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் கார்த்தி கே தில்லை ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். அன்கா மீடியாவின் முதல் படைப்பாக  தயாராகிறது.  இயக்குநர்  ஸ்வாதீஷ் எம்.எஸ்., ‘வால்டர்’ திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

இப்படத்திற்கு. ‘வால்டர்’ பட இயக்குநர் யு.அன்பு கதை எழுதியிருக்கிறார். தர்மபிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு, சுபாஷ் தண்டபாணி, ஒளிப்பதிவு செய்கிறார். ‘மிருதன்’ பட புகழ் வெங்கட் ரமணன் படத்தை தொகுக்க, ஏ.ஆர்.மோஹன் கலை இயக்கத்தை கவனிக்கிறார். சண்டைக் காட்சிகளை ‘ராட்சசன்’ படப் புகழ் விக்கி அமைத்திருக்கிறார். ‘சார்பட்டா பரம்பரை’ படப் புகழ்  மெட்ராஸ் மீரான் பாடல்களை எழுதியுள்ளார்.

இந்த படத்தின் எக்ஸிக்யூடிவ் தயாரிப்பாளராக எஸ்.சரவணக்குமார் செயல்படுகிறார். புரொடக்‌ஷன் கன்ட்ரோல் பணிகளை பாலா தில்லை, எஸ்.ஏ.தாஸ் மேற்கொள்கின்றனர். ஆடைவடிவமைப்பு செய்துள்ளார் ரெபேக்கா மரியா. ஸ்டில்ஸ் எஸ்.சக்தி ப்ரியன், டிசைன் தினேஷ் அசோக் செய்துள்ளனர். இப்படத்திற்கு மக்கள் தொடர்பாளராக யுவராஜ் பணியாற்றுகிறார்.

படம் குறித்து கதாசிரியரும், தயாரிப்பாளர்களுள் ஒருவருமான யு.அன்பு கூறுகையில், “இத்திரைப்படம் முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான சயின்ஸ் ஃபிக்‌ஷ்ன் ஜானரைச் சேர்ந்தது. இந்தப் படத்தில் யோகிபாபு முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். யோகிபாபு நடிப்பில் இதுவே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம் என்று சொல்லலாம். இந்தப் படம் சென்னை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் படமாகவுள்ளது. படத்திற்காக கொடைக்கானலில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

படத்தின் தொடக்கவிழாவில் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், தேனப்பன், அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, சக்திவேல், சி.வி குமார், சதீஷ் ,ஸ்ரீதர், ‘அடிதடி’ முருகன், முன்னணி திரைப்பட இயக்குனர்கள் விருமாண்டி, தாஸ் ராமசாமி, நவீன், தங்கம் சரவணன், முத்துக்குமரன், மனோஜ் இவர்களுடன் நடிகர் சிபி சத்யராஜ், நடிகை ஷனம் ஷெட்டி  உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.