“மாயோன்” திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !

170

சென்னை.

Double Meaning Production சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்து வழங்க, N. கிஷோர் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ் நடித்துள்ள திரைப்படம்  “மாயோன்”.  புத்தம் புதிய களத்தில் கடவுள் & அறிவியல், சிலை கடத்தல் மற்றும் புதையல் வேட்டை  என பரபர திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள, இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் ஒரு புதுமையாக  இந்தியாவில் முதல் முறையாக, பார்வையற்ற  மாற்றுத்திறனாளிகளுக்காக, அவர்கள் முன்னிலையில் அவர்களுக்காக  ஆடியோ விளக்கத்துடன்  டீசர் வெளியிடப்பட்டது.

இவ்விழாவில் படக்குழுவினர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் கலந்துகொள்ள, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இவ்விழாவில் பேசிய…மாற்றுத்திறனாளி இளங்கோ பேசியதாவது…

இந்த டீசர் ஆடியோ விளக்கத்துடன் வெளியாகவுள்ளது. பொதுவாக இது பரவலாக கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஐநா ஒரு நாட்டை வாழத்தகுதியுள்ள நாடாக வரையறைக்கும்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்ததா என்ற அடிப்படையில் தான் கணக்கிடுவார்கள். அந்த வகையில் எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும். அது எப்படி நடக்கும் என்றால் அனைவரும் ரசிக்கும் சினிமாவை காட்சிகளை மையமாக கொண்டு வரும் மாற்றுத்திறனாளிகளும் ரசிக்க வேண்டும். இந்த படத்தில் டீசரில் வரும் குரலை நான் தான் பேசியுள்ளேன். இந்த வாய்ப்பை வழங்கிய அருண்மொழி மாணிக்கம் அவர்களுக்கு நன்றி. வெளிநாடுகளில் முழுப்படங்களிலும் ஆடியோ விளக்கம் தருகிறார்கள். மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக தனி கருவிகளில் மாற்றுத்திறனாளிகள் மட்டும் ரசிக்கும் படி ஆடியோ விளக்கம் செய்து வருகிறார்கள். அதில் தமிழ்நாட்டில் முன்னோடியாக அருண்மொழி மாணிக்கம் சைக்கோ படத்தில், முழு படத்திற்கும்  ஆடியோ விளக்கத்துடன் உருவாக்கியிருந்தார். அவருக்கு நன்றி. இஸ்ரோ வின் அனைத்து ராக்கெட் லான்ச்சுக்கும்  விளக்கபடத்தில் எனது குரல் பயன்படுத்தப்படுவது எனக்கு பெருமை. அதைத்தாண்டி மாற்றுத்திறனாளிகளுக்காக நம் மக்களுக்காக  குரல் கொடுத்தது மிகவும் மகிழ்ச்சி.

நக்கீரன் கோபால் அவர்கள் பேசியதாவது…

ஒரு பெரிய பேச்சை கேட்டு நாமெல்லாம் பேசனுமா என்று தோன்றிவிட்டது. நமக்கு நிறைய பாடம் எடுத்து விட்டு போய்விட்டார் இளங்கோ. முதலில் இப்படத்தை உருவாக்கிய அருண்மொழிக்கு, குழுவிற்கு நடிகர்களுக்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த புதிய முயற்சி மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது. டீசர் பார்த்தேன் இளங்கோ அசத்தியிருக்கிறார். இளங்கோ அழைத்தார் என  சொன்ன உடனே,  நான் வர ஒப்புக்கொண்டேன். அவர் பலருக்கு முன்னுதாரணமாக இருக்கிறார். இந்தப்படம் ஒரு பெரிய புதிய முயற்சி. டீசர் படத்தை பார்க்க தூண்டுவதாக இருந்தது. டபுள் மீனிங் என்றவுடன் வேறு மாதிரியாக இருக்குமோ என்று நினைத்தேன், ஆனால் இது வேறுமாதிரி இருக்கிறது. இளங்கோவை இவ்வளவு நேரம் மதித்து பேச வைத்தது மகிழ்ச்சி.  மாயோனுக்கு நக்கீரன் துணையிருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

நடிகர் டத்தோ ராதாரவி அவர்கள் பேசியதாவது…

சத்யராஜை எப்போதும் மாப்ள, மாப்ள என்று தான் கூப்பிடுவேன். எனக்கு கொரோனா என்ற போது முதலில் அவன் தான் முதலில் போன் செய்து பேசினான். சிபிராஜ் எனக்கு மருமகன் அவருடன் நடிக்கிறேன் என்றபோது மிக மகிழ்ச்சியாக இருந்தது. சிபிராஜ் அப்படியே அவருடைய அப்பா மாதிரி. வேலையை கச்சிதமாக செய்கிறார். படப்பிடிப்பில் மிக எளிமையாக எல்லோருடனும் இணைந்து தங்கினார். சினிமாவில் மிக நன்றாக வருவார். இயக்குநர் எல்லாம் நடிக்க வந்துவிட்டார்கள் எஸ் ஏ சி, ரவிக்குமார் நன்றாக நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவாளர் ராம் பிரசாத் அற்புதமாக செய்துள்ளார். கலை இயக்குநர் பாலசுப்பிரமணியன் பெருமாளை தத்ரூபமாக உருவாக்கியிருந்தார்.  தயாரிப்பாளர் அருண்மொழி ஸ்பாட்டுக்கு வந்ததே இல்லை, எங்களுக்கு முழு சுதந்திரம் தந்தார். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்முறையாக ஒரு டீசரை வெளியிட்டுள்ளார். அவருக்கு என் நன்றிகள். இளங்கோ செயல்களை பார்த்து பிரமித்து அவரை டப்பிங் யூனியனில் கௌரவ உறுப்பினர் ஆக்கினேன். அவர் மகன் கின்னஸ் ரெக்கார்ட் செய்திருக்கிறான். மாற்றுத்திறனாளிகள் கெடாமல் இருக்க, தமிழ் படங்களில் ஆடியோ விளக்கம் வராமலே இருக்கலாம். டபுள் மீனிங் படங்கள் தான் தமிழில் அதிகம் வருகிறது.  அதனால் சொல்கிறேன். இளங்கோ என அவருக்கு பெயர் வைத்தது கலைஞர் அவர்கள். நான் படமெடுத்தால் நீ தான் பாடுவாய் என்றேன் ஆனால் நான் எப்போது படமெடுக்க போகிறேன் என தெரியவில்லை. இந்த படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கிடைக்கும். சிபிராஜ் படத்தில் இது வித்தியாசமான படமாக இருக்கும். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது…

இது ஒரு நல்ல காலை. இளங்கோவின் பேச்சு அனைவரையும் கவர்ந்துவிட்டது. அருண்மொழிக்கு வாழ்த்துக்கள் இந்தப்படத்தில் திரைக்கதை ஆசிரியராகவும் மிளிர்ந்துள்ளார். அவர் இயக்குநராக வேண்டும். இந்தியாவில் முதல்முறையாக ஆடியோ விளக்கத்துடன் டீசர் வெளியிடுவதாக சொன்னார். எப்போதும் புதுமை செய்யும் மனப்பான்மை தயாரிப்பாளருக்கு இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் அமைப்பு தலைவர் ஜெயஶ்ரீ நிறைய பணிகளை செய்து வருகிறார்.  அவருக்கு என் வாழ்த்துக்கள். நாங்கள் தாண்டவம் படத்தின் சிறப்பு திரையிடலில் கிடைத்த பணத்தை மாற்றுத்திறனாளிகள் அமைப்பிற்கு வழங்கினோம். அதே போல் இப்படத்திலும் செய்ய வேண்டும். சிபிராஜ் இந்த படத்தில் பெரிய அளவில் உழைத்துள்ளார். கிஷோர் நன்றாக இயக்கியுள்ளார். தமிழ் பெண்ணாக தான்யா நிறைய படங்கள் செய்து வருகிறார். இந்தப்படத்திற்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.

மாற்றுத்திறனாளிகள் அமைப்பு தலைவர் ஜெயஶ்ரீ பேசியதாவது…

ஆடியோ விளக்கத்துடன் டீசர் வெளியானது எனக்கு மிக மகிழ்ச்சியை தந்துள்ளது. அருண்மொழி முன்னெடுத்தது போல் அனைவரும் முன்னெடுத்து செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளை மனதில் கொண்டு அனைவரும் இதனை செய்ய வேண்டும். என கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் பேசியதாவது…

இந்தப்பட டீசர் பார்த்தேன் மிக ஆச்சர்யமாக இருந்தது. இந்தப்படத்தின் வெற்றி இங்கு எழுதப்பட்டுவிட்டது. அருண்மொழி மாணிக்கம் மிகச்சிறப்பான பணியை செய்துள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள். இது ஒரு நல்ல தொடக்கம். இளங்கோ அவர்கள் பேச்சை கேட்டு ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் உண்டானது. அவர் என் ரசிகன் என்றார் இன்று அவருக்கு நான் ரசிகனாகி விட்டேன். இந்த குழுவில் உள்ளவர்கள் அனைவரும் கடுமையாக உழைத்துள்ளார்கள். இந்தப்படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் நன்றி

நடிகர் சிபிராஜ் பேசியதாவது…

நாம் டிவியில் படம் பார்க்கும் போது கொஞ்சம் ரெசல்யூசன் குறைந்தாலே கவலைப்படுவோம். ஆனால் ஒரு சாரார் மொத்தமாகவே படம் பார்க்க முடியாமல் இருக்கிறார்கள் எனும் போது கேட்க கவலையாக இருந்தது. அவர்களுக்கு ஒரு புது முயற்சியாக ஆடியோ விளக்கத்துடன் டீசர் வரும் படத்தில், நான் நாயகனாக நடிப்பது பெருமையாக இருக்கிறது. இதை சாத்தியப்படுத்திய தயாரிப்பாளருக்கு நன்றி. இசைஞானி இளையராஜா இசையில் நடிப்பது கனவு, அது இதில் நடந்துள்ளது. இயக்குநர் கிஷோர் மிக சிறப்பாக கதை செய்திருந்தார். ஆனால் அதை திரையில் ராம் பிராசாத் அட்டகாசமாக கொண்டுவந்துள்ளார். அவர் தெலுங்கில் மிகப்பெரிய படங்கள் செய்துள்ளார். இந்தப்படத்தில் என்னை மிக அழகாக காட்டியுள்ளார். தான்யா மட்டும் தான் நான் நடித்ததில் என் உயரத்திற்கு சரியாக இருந்தவர். அவர் சிறப்பாக நடித்துள்ளார். ராதாரவி சார், ரவிக்குமார் சாருடன் நடித்தது மகிழ்ச்சி. இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

இயக்குநர் கிஷோர் பேசியதாவது…

‘மாயோன்’ படத்தின் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளருக்கு நன்றி. இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறேன் என்று சொன்னவுடன் படத்தின் கலர் மாறிவிட்டது. இதில் எல்லா நட்சத்திரங்களும் மிக அற்புதமாக செய்துள்ளார்கள். பாலாவின் ஆர்ட், ராமின் ஒளிப்பதிவு எல்லாமே சூப்பராக வந்துள்ளது. அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. இப்படம் விஷுவலாக சிறப்பான படமாக இருக்கும். இந்தப்படத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இப்படி ஒரு விசயம் செய்த தயாரிப்பாளருக்கு நன்றி. நான் யோசிக்கவே இல்லை ஆனால் அவர்  தனது சைக்கோ படத்திலேயே இதை செய்திருந்தார். இப்போது இந்தப்படத்திற்கு இதனை செய்ததற்கு நன்றி. இந்தப்படம் ஒரு புதுமையான படைப்பாக  இருக்கும்.

தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் பேசியதாவது…

ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தான் இதனை செய்துள்ளோம். இப்படத்தில் அருமையாக உழைத்து படத்தை உருவாக்கி தந்த அனைவருக்கும் நன்றி. இப்படத்தை அற்புதமாக உருவாக்கியுள்ளார்கள் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இளங்கோ, மாற்றுத்திறனாளிகள் அமைப்பு தலைவர் ஜெயஶ்ரீ ஆகியோருக்கும் நன்றி. அனைவருக்கும் நன்றி.

“மாயோன்” திரைப்படத்தில் சிபிராஜ் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, அவரது காதலியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். இப்படத்தை N. கிஷோர்  இயக்கியுள்ளார். Double Meaning Productions  சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ளார். ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.தமிழின் முன்னணி நடசத்திரங்களான K.S. ரவிக்குமார், ராதா ரவி, பக்ஸ், ஹரீஷ் பேரடி மற்றும் பல  முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.