புளூ சட்டையை போட்டுட்டு வந்து உன் படத்தை என்ன பண்றேன் பார்..மாறனை அலறவைத்த பாரதிராஜா!

156

சென்னை.

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குநர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஆன்டி இண்டியன்’.  இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா   பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குநர் புளூ சட்டை மாறன், தயாரிப்பாளர் ஆதம் பாவா, இணை தயாரிப்பாளர் மகேஷ், ஒளிப்பதிவாளர் கதிரவன், இயக்குநர் வேலு பிரபாகரன், நடிகர்கள் ஆடுகளம் நரேன், பசி சத்யா, விஜயா மாமி, சண்டைப் பயிற்சியாளர் ஹரி தினேஷ், இணை இசையமைப்பாளர் வில்லியம்ஸ் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர்.

தயாரிப்பாளர் ஆதம் பாவா பேசும்போது,

“குறைந்த நாட்களில் படத்தை எடுத்துள்ளோம் என சொன்னதுமே சின்ன பட்ஜெட் என நினைத்து விடாதீர்கள்.. அத்தனை நாட்களிலும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை வைத்து படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். படத்தின் முன் தயாரிப்புக்கும் நிறைய செலவு செய்துள்ளோம். பின்னர் சென்சார் சான்றிதழ் பெறுவதற்கான போராட்டத்திலும் நிறைய செலவு செய்துள்ளோம். விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் அதனை மனதில் வைத்துக்கொண்டு வியாபாரம் பேச வாருங்கள்.

இந்தப் படத்திற்கான சென்சார் சான்றிதழ் பெருகின்ற போராட்டத்தில், பல விஷயங்களை புரிந்து கொண்டோம். சென்சார் சான்றிதழுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களது படத்திற்கு யு அல்லது  யு/ஏ அல்லது ஏ என எந்த சான்றிதழ் பொருந்தும் என நீங்களே தீர்மானித்து அதற்கேற்ற சான்றிதழுக்கு விண்ணப்பியுங்கள்.. எந்த சிக்கலும் இன்றி எளிதாக கிடைத்து விடும்.. நாங்கள் எங்கள் படத்திற்கு யு சான்றிதழ் கேட்டதால் தான் இத்தனை சிக்கல்கள் எழுந்தது என்பதை பின்னர் தான் தெரிந்துகொண்டோம். நிச்சயம் இந்தப்படத்தை தியேட்டர்களில் தான் வெளியிடப் போகிறோம்..

எல்லோருடைய படங்களையும் விமர்சித்த மாறன் படத்தை நீங்கள் விமர்சிக்க போவதற்கு முன் இந்தப்படத்தில் ஹீரோ, ஹீரோயின், வில்லன், காமெடியன், ஒரே அடியில் பத்து பேர் பறக்கும் மாஸ் ஃபைட் என எதுவும் கிடையாது. ஒரு புதிய களத்தில் இப்படத்தை இயக்கியுள்ளார் என்பதையும் நினைவில் வைத்துகொண்டு விமர்சியுங்கள். சொன்ன தேதிக்கு முன்பாகவே சொன்ன பட்ஜெட்டில் தரமான படம் எடுத்துக் கொடுத்துள்ளார். உண்மையிலேயே இவர் தயாரிப்பாளர்களின் இயக்குநர். ரசிகர்களின் இயக்குநர். இருவரையுமே அவர் ஏமாற்ற மாட்டார்.” எனக் கூறினார்.

இயக்குநர் புளூ சட்டை (இள)மாறன் பேசும்போது,

“இந்தக் கதையை தயார் செய்ததும் அதை பதிவெல்லாம் செய்யவில்லை. அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. நடிகர் ஆர்கேவை சந்தித்து படம் பண்ணப் போகிறேன் எனக் கூறியபோது உனக்கெதுக்குய்யா இந்த வேண்டாத வேலை..?? நீ எப்படி படம் எடுத்தாலும் கழுவி ஊத்தத்தான் போறாங்க என அறிவுறுத்தினார்.  இதனால் படப்பிடிப்பு எண்ணத்தை தள்ளிவைத்துவிட்டு எனது கதையை பலரிடம் கூறி அபிப்ராயம் கேட்க ஆரம்பித்தேன். கதையையும் மெருகேற்ற ஆரம்பித்தேன். ஒருகட்டத்தில் என்னுடன் கூடவே உறுதுணையாக இருந்த இயக்குநர் சுப்ரமணிய சிவா, குழந்தையை குளிப்பாட்டி அழகாக்கலாம்… ஆனால் அதுக்காக குளிப்பாட்டி குளிப்பாட்டி கொன்னுடக்கூடாது… அபிப்ராயம் கேட்டது போதும் படத்தை உடனே ஆரம்பியுங்கள் என அறிவுரை கூறினார். அப்படித்தான் இந்தப்படம் துவங்கியது.

படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் வேலு பிரபாகரனை அழைத்தபோது மறுக்காமல் ஒப்புக்கொண்டார். அந்த சமயத்தில் வேலு பிரபாகரன் என்னிடம் ஒரு கதை சொன்னார். அவரிடம் நைஸாகப் பேசி அந்த கதையை உடனே விலைகொடுத்து வாங்கிவிட்டேன்.. ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க 65 வயது நடிகை ஒருவர் தேவைப்பட்டார். ஆனால் பல நடிகைகள் பாட்டி கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்து விட்டார்கள். அப்போதுதான் பலவருடங்களாக சினிமாவில் நடனமாடி வந்த விஜயா மாமி பற்றி தெரியவந்தது.

அவர் அந்த ரோலுக்கு சரியாக இருந்தார். அவரை  நடிக்க வைத்தோம். அவருக்கு உதவி செய்யும் குப்பத்து கதாபாத்திரத்தில் பசி சத்யா அற்புதமாக நடித்துள்ளார். படத்தின் இன்னொரு முக்கிமான கதாபாத்திரத்தில் நடிக்க மான்ஸ்டர் படத்தில் நடித்த அனில்குமாரை அழைத்து நடிக்க வைத்தோம். எங்கள் படத்தில் நடிக்க அவரை அழைத்தபோது, தனது மனைவி பொன்னியின் செல்வன் படத்தின் ஆடிசனில் கலந்துகொள்ள சென்னை வரும்போது, உங்களை வந்து சந்திக்கிறேன் என்றார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் பொன்னியின் செல்வன் படத்திற்கு ஆடிசனில் கலந்துகொண்ட அவர் மனைவி செலக்ட் ஆகவில்லை. கூடவே துணைக்கு வந்த இவர் செலக்ட் ஆகிவிட்டார். அப்படியே எங்கள் படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டார்.

அதேபோல வேறு ஒரு படத்திற்காக பேசி வைத்திருந்த ஷான் என்பவரை இந்தப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறேன்.. குறுகிய காலத்தில் மிகப்பெரிய நடிகராக அவர் வருவார் பாருங்கள்..இந்தப்படத்திற்கு முக்கிய தூணாக ஆடுகளம் நரேன் நடித்துள்ளார். இடைவேளைக்கு பின் பதினான்கு நிமிடங்கள் கொண்ட ஒரே காட்சியை ஒற்றை ஆளாக தாங்கிப்பிடித்து நடித்துள்ளார். இத்தனைக்கும் 60 பேர் காம்பினேஷன் கொண்ட அந்த காட்சியை அவரது அற்புதமான நடிப்பால் ஒரே நாளில் படமாக்க முடிந்தது. பதினான்கு நிமிட காட்சியா, போரடித்து விடாதா என நினைப்பீர்கள்.. ஆனால் படம் பார்த்த அனைவரும் அந்த காட்சியைத்தான் ஹைலைட்டாக கூறி பாராட்டினார்கள்.

இந்தப்படத்தில் ஒரு அரசு கட்டிடத்தில் பாம் பிளாஸ்ட் பண்ணுகிற மாதிரி ஒரு காட்சியை படமாக்க வேண்டும். சென்னையில் அப்படி ஒரு இடத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதியும் கிடைத்தது. ஆனால் ஒரு தீக்குச்சியை கூட உரசக்கூடது என்கிற அளவுக்கு கண்டிசன் போட்டார்கள். இந்த விஷயத்தை அறிந்த ஹரி தினேஷ் மாஸ்டர், யாரும் வந்து படப்பிடிப்பை நிறுத்துவதற்குள் ஒரு அரைமணி நேரத்தில் இந்த காட்சியை நீங்கள் நினைத்தபடி எடுத்துக் காட்டுகிறேன். அதன்பின் வருவது வரட்டும் பார்த்து கொள்ளலாம் என எனக்கு தைரியம் சொன்னதுடன் சொன்னபடி பாம் பிளாஸ்ட் காட்சிகளை நேர்த்தியாகவும் எடுத்துக் கொடுத்தார். இந்தப்படத்திற்கு நான் இசையமைப்பாளர் என்றாலும் இசைப்பணிகளை எல்லாம் வில்லியம்ஸ் தான் கவனித்துக்கொண்டார். சில பேர் பாங்காங் போனால் தான் இசையமைக்க மூடு வரும் எனச் சொல்வார்கள்.. ஆனால் நாங்கள் ஆம்னி வேன் சைஸில் உள்ள ரூமில் உட்கார்ந்துகொண்டு இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளோம்.

படம் எடுத்து முடித்த பின்னர்தான் தயாரிப்பாளர் ஆதம் பாவா படம் பார்த்தார். அவருக்கு ரொம்பவே பிடித்து விட்டதால், படம் நிச்சயம் வெற்றி பெறும்.. அந்த வெற்றியை இன்னும் முழுமையாக்க வேண்டும் என்றால் நீங்கள் மீண்டும் ஏதாவது காட்சிகளைப் படமாக்கி இணைக்க விரும்பினால் கூட அதற்கு எத்தனை லட்சங்களையும் செலவு செய்யத் நான் தயார் எனக் கூறினார். ஆனாலும் தேவையானவற்றை நாங்கள் சரியாக படமாக்கி விட்டதால் அவரிடம் வேண்டாம் எனக் கூறிவிட்டேன். படம் முடிந்தவுடன் ஒருமுறை இயக்குநர் பாரதிராஜாவை சென்று சந்தித்தபோது, “டே சாட்டை.. உன் படம் முடிஞ்சிருச்சுன்னு கேள்விப்பட்டேன்.. உன் படத்தை போடு.. நான் ஒரு புளூ சட்டையை போட்டுட்டு வந்து உன் படத்தை என்ன பண்றேன் பாரு என்றார். வருடத்திற்கு வெளியாகும் நூறு படங்களில் பத்து படங்கள் தான் நல்ல படங்களாக இருக்கின்றன. இந்த கொரோனா காலகட்டத்தால் கிட்டத்தட்ட இருநூறு படங்கள் தேங்கி கிடக்கின்றன. அவையெல்லாம்  இனி தான் வரப்போகின்றன.. எல்லா படத்தையும் உடம்பை இரும்பாக்கிக்கொண்டுதான் பார்க்கவேண்டும். ஆனால் நிச்சயம் ஆன்டி இண்டியன் உங்கள் அனைவரையும் கவரும் விதமாக இருக்கும் என்றார்