வித்தியாசமான சவாலான கதாபாத்திரத்தில் லட்சுமி மேனன் நடிக்கும் படம் ‘ஏஜிபி’

160

சென்னை.

தமிழில் விஷால், ஜெயம் ரவி, அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான லட்சுமி மேனன், தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். விக்ரம் பிரபுவுடன் கும்கி படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் லட்சுமி மேனன். ‘சுந்தரபாண்டியன்’, ‘பாண்டியநாடு’, ‘நான் சிவப்பு மனிதன்’, ‘மஞ்சப்பை’, ‘வேதாளம், ‘மிருதன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். 2016-ல் விஜய் சேதுபதியுடன் ‘ரெக்க’ படத்தில் நடித்து விட்டு கல்லூரி படிப்பை தொடர்ந்தார். அதன்பிறகு சில வருடங்கள் படங்களில் நடிக்கவில்லை. பின்னர் புலிக்குத்தி பாண்டி படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த அவர், தற்போது ‘ஏஜிபி‘ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இது திகில் கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. இதுவரை கமர்ஷியல் படங்களில் நடித்த லட்சுமி மேனன், தற்போது முதல் தடவையாக இந்த படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் சவாலான மனநோயாளி கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இந்த படத்தை ரமேஷ் சுப்பிரமணியன் இயக்க உள்ளார்.

நடிகை லட்சுமி மேனன் இதுவரை ஒரு வணிகரீதியிலான கதாநாயகியாகப் படங்களில் வலம் வந்தவர். இப்போது புதிய பாத்திரங்களில் நல்ல கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். வித்தியாசமான சவாலான இதுவரை ஏற்றிராத ,யாரும் கற்பனை செய்ய முடியாத மாதிரியான கதாபாத்திரங்களுடன் கதை சொல்பவர்களுக்கு முன்னுரிமை தருகிறார் .அவ்வகையில்  கதையும் பாத்திரமும் கவர்ந்து நடிக்கும் தமிழ்ப்படம்தான் ‘ஏஜிபி’.

‘ஏஜிபி’ என்றால் அஞ்சலி , கெளதம், பூஜா என்கிற மூன்று பிரதான பாத்திரங்களின் முதல் எழுத்தை வைத்துப் படத்தலைப்பு உருவாகியுள்ளது. இந்த மூவர் தவிர, இன்னொரு முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரமும் உண்டு. இப்படி நான்கு முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றிக் கதை செல்கிறது.

லட்சுமிமேனன் முகம் தெரிந்த நடிகை.  பரதன் பிலிம்ஸ் ஆர்.வி.பரதன், சாய் ஜீவிதா என்கிற குழந்தை நட்சத்திரம், மோத்தீஸ்வர் ஆகிய நான்கு பேர் நடிக்கிறார்கள். மற்றும் பலர் தன் பங்களிப்பை கொடுத்துள்ளனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவு  சந்தோஷ் பாண்டி. இவர் ‘நிஷா ‘ என்கிற வெப்சீரிஸ் ஒளிப்பதிவு செய்தவர். அதற்காக விருதுகளையும் பெற்றவர். இசை ஜெய்கிரிஷ் .இவர் பல குறும்படங்களுக்கு  இசையமைத்தவர். கலை இயக்கம் சரவண அபிராமன், எடிட்டிங் -சந்திரகுமார் .ஜி.

கே.எஸ்.ஆர் ஸ்டுடியோ சார்பில் கே.எஸ்.ஆர்.இந்த படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை  திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள்  வெளியிட்டார்கள். நடிகர்கள் விஜய்சேதுபதி ,ஆர்யா, விமல், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர்கள் சக்தி சௌந்தர்ராஜன் இயக்குநர் சிம்புதேவன் , ஆகிய 6 பேர் இந்தப் படத்தின்  பர்ஸ்ட் லுக்கை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர் .