சென்னை.
ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவுலகில் அடுத்தடுத்து பல ஆச்சர்யமான படைப்புகளை அறிவித்து வருகின்றனர். உலகமெங்கும் விருதுகளை அள்ளி குவித்து வரும் “கூழாங்கல்” மற்றும் இரத்தமும் சதையுமாக, அதிர்ச்சி மிகுந்த படைப்பாக உருவாகியுள்ள “ராக்கி” ஆகிய படங்கள் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் வெளியீட்டுக்கு தயராகி வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் தனது புதிய படைப்பாக “ஊர்குருவி” படத்தினை அறிவித்துள்ளது. ஒரு புறம் மெலோ டிராமாவாக உருவாகியுள்ள ‘கூழாங்கல்’ இன்னொரு புறம் க்ரைம் திரில்லராக உருவாகியிருக்கும் ‘ராக்கி’ என இரு வித்தியாசமான படைப்புகளை வெளியிடும் இந்நிறுவனம் முழுக்க முழுக்க காமெடி டிராமாவாக “ஊர்குருவி” படத்தினை உருவாக்கவுள்ளது. சமீபத்திய வெளியீடான “லிப்ட்” படம் மூலம் மிகச்சிறந்த நடிகர் என பாரட்டுக்களை குவித்து, வெற்றி பெற்றிருக்கும், நடிகர் கவின் இப்படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவனின் உதவியாளராக ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திலும், இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் ‘டிமாண்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகள்’ படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய அருண் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இது குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறியதாவது…
அருண் என்னிடம் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். அவரது ஐடியாக்களும் அவரின் தெளிவான சிந்தனையும் என்னை எப்போதும் ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருக்கும். ரவுடி பிக்சர்ஸ் சார்பில், “ஊர்குருவி” படம் மூலம் அவரை இயக்குநராக அறிமுகம் செய்வது மகிழ்ச்சியாக உள்ளது. இப்படத்தில் நடிக்க தமிழின் முக்கியமான பெரிய நட்சத்திரங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் இது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும். இப்படம் முழுமையாக தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது. நேர்த்தியான, தரமான கதைகளின் மீது ரவுடி பிக்சர்ஸ் எப்போதும் பெரும் நம்பிக்கை கொண்டிருக்கிறது. ஊர்குருவி ரசிகர்களுக்கு இன்பயமான ஒரு அனுபவத்தை தரும் என்றார்.