‘அரண்மனை 3’ திரைவிமர்சனம்!

169

சென்னை.

‘அரண்மனை’ முதல் பாகத்தைப் போலவே இந்த மூன்றாம் பாகத்தின் கதையை ஆவி பேய் என ஒரே மாதிரியாக படத்தை இயக்கி இருக்கிறார் சுந்தர் சி. ஆனால் புதிய கதை போல இப்படத்தை அனைவரையும் பிரமிப்புடன் பார்க்க வைத்து இருக்கிறார்.

 அந்த அரண்மனையின் ஜமீன்தார் சம்பத்ராஜ், இவரது தலைமையில் ஒரு சாமியாரின் மகளுக்கு திருமணம்  செய்து வைக்க செல்கிறார். திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைக்க சென்ற சம்பத்ராஜ் மணப்பெண் ஆண்ட்ரியாவை கண்டதும், அவரது  அழகில் மயங்கி மணமகனை அடித்து தள்ளி  விட்டு ஆண்ட்ரியாவின் கழுத்தில் தாலி கட்டுகிறார். இவர்கள் இருவருக்கும் ஒரு  பெண் குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தை பிறந்ததும் ஆண்ட்ரியாவை  சம்பத்ராஜின்  அடியாட்கள் சாகடித்து விடுகிறார்கள்.  மனைவி ஆண்ட்ரியாவை இழந்ததால் மகள் ராஷி கன்னா மீது அதிக பாசம் இல்லாமல் இருக்கிறார் சம்பத்ராஜ். ஜமீன்தார் சம்பத்ராஜின் அரண்மனையில் இருக்கும் பேய், அவரது மகளான நாயகி ராஷி கண்ணாவை கொலை செய்ய முயற்சிக்கிறது. தன்னுடைய அரண்மனையில் பேய் இருப்பதாகச் சொல்லும் தனது மகளை ஹாஸ்டலில் தங்கிப் படிக்க வைக்கிறார் ஜமீன்தார் சம்பத்ராஜ். படிப்பு முடிந்த பிறகு தன்னுடைய அரண்மனைக்கு திரும்பும் ராஷி கண்ணா,  அரண்மனையில் எலக்ட்ரிக்கல் வேலை பார்க்க வரும்  ஆர்யாவை காதலிக்கிறார்.

ஜமீன்தாரின் உறவுக்காரர் சுந்தர் சி. யும் அந்த அரண்மனைக்கு வருகிறார். இந்த சூழலில்  அரண்மனையில் அமானுஷ்ய சக்தி இருப்பதையும்,  இரண்டு பேய்கள் இருப்பதையும் ஆர்யாவும், சுந்தர் சி. யும் கண்டுபிடிக்கிறார்கள். அந்த அரண்மனையில் இருக்கும் ஆவிகள் யார்… எதற்காக  அரண்மனையில் அந்த ஆவிகள் இருக்கின்றன? ஆர்யாவும், சுந்தர் சி. யும் அந்த ஆவிகளை விரட்டினார்களா? என்பதுதான் இப்படத்தின் கதை.

இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆர்யா, வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தாலும், மிக முக்கியமான காட்சிகளில் அவர் காணாமல் போவது சற்று ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால், ஆர்யா இல்லாவிட்டாலும் படம் பார்ப்பவர்களை, மற்ற நட்சத்திரங்கள் படத்தை நகர்த்தி செல்கிறார்கள்.

இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் சுந்தர்.சி, தனது வேலையை மிகச் சரியாக செய்திருக்கிறார். அவர் பேய் இருப்பதை உணரும் காட்சிகள், அந்த ஆவிகளை விரட்ட சாமியார்களுடன் பூஜை செய்யும் காட்சிகளும்  மிரட்டலாக இருக்கிறன.

நாயகியாக வரும் ராஷி கண்ணா, அழகு பதுமையாக  வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். ஆண்ட்ரியா தனது கதாபாத்திரத்திற்கு தகுந்தவாறு கதையில் முக்கியத்துவம் இருப்பதால்   வஞ்சகமில்லாமல் தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். தனது நடிப்பினை காட்சிக்குக் காட்சி சிறப்பாக வித்தியாசமாகக் காட்டியிருக்கிறார் ஆண்ட்ரியா. தன் குழந்தையைக் கொன்றுவிட வேண்டாம் என்று துடிக்கும் அந்தக் காட்சியில் ஆண்ட்ரியாவின் நடிப்புத் திறமையை பாராட்டலாம்.

 யோகி பாபு மற்றும் விவேக்கின் கூட்டணி ரசிகர்களை சிரிக்க வைக்கும் வேலையை மிகச் சரியாக செய்திருக்கிறார்கள். இவர்களுடன் இணைந்து மனோபாலா, நளினி, மைனா ஆகியோரது கூட்டணிஇணைந்து  கூடுதலாக சிரிக்க வைக்கிறார்கள். கல்யாணமாகி 15 வருடங்களாகியும் கன்னி கழியாமல் இருக்கும் தனது சோகத்தைச் சொல்லும் காட்சியிலும். அடுத்தடுத்து தான் இருக்கும் காட்சிகளிலெல்லாம் நம்மை சிரிக்க வைத்து விடுகிறார்  விவேக்.

சம்பத்ராஜ், வேல ராமமூர்த்தி, மதுசூதன ராவ், சாக்‌ஷி அகர்வால், வின்செண்ட் அசோகன் ஆகியோரும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு தங்களது நடிப்பை கொடுத்து மனதில் நிற்கிறார்கள்.

சி.சத்யாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்தான். அதிலும் ஷங்கர் மகாதேவனும், ஹரிஹரனும் திரையிலும் தோன்றிப் பாடியிருக்கும் முருகன் பாடல்  மிகச் சிறப்பாக இருக்கிறது. யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவில் அரண்மனையும், காடுகளும், இறுதிக் காட்சியின்  அரங்க  அமைப்புகளும் , துர்கா தேவி சிலையின் பிரம்மாண்டமும்  நம்மை ஆச்சரியபட வைக்கிறது. துர்கா தேவி சிலையின் அடியில் அமர்ந்து இருக்கும் சிங்கம் எழுந்து வரும் கிராபிக்ஸ் காட்சிகள் மிக அருமை.

 அதிகமான நடிகர், நடிகைகள் பட்டாளம் இருந்தாலும், அவர்களை எப்படி சரியான முறையில் பயன்படுத்தி, திரைக்கதைக்கு  ஏற்றவாறு காட்சிகளை வடிவமைக்கும் திறன் படைத்தவர் இயக்குநர் சுந்தர்.சி, ஏற்கெனவே வந்த ‘அரண்மனைபாகங்களில் இருந்து இந்தப் பாகத்தை வேறுபடுத்திக் காட்ட கடும் முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி

மொத்தத்தில், ‘அரண்மனை 3’ பேய் பட ரசிகர்களுக்கு விருந்து.