சென்னை.
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘மோகன் தாஸ்’. ‘களவு’ என்ற படத்தைத் தொடர்ந்து இயக்குநர் முரளி கார்த்திக் இயக்கத்தில் தயாராகிவரும் ‘மோகன்தாஸ்’ படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இந்திரஜித் சுகுமாரன், ஷாரீக் ஹாஸன், லல்லு, பிரகாஷ் ராகவன், பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, கே. எஸ். சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். எடிட்டர் கிருபாகரன் படத்தொகுப்பு பணியை கவனிக்கிறார்.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முழுமையாக நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து படத்தின் தொகுப்பு மற்றும் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு கோடையில் ‘மோகன் தாஸ்’ படத்தை வெளியிடுவதற்கான பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ஏற்கனவே வெளியாகி ஏராளமான பாராட்டுகளைக் குவித்த நிலையில், தற்போது ‘மோகன்தாஸ்’ படத்தின் செகண்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் நாயகன் விஷ்ணு விஷால் புதிரான- அழுத்தமான- அர்த்தத்துடன் கூடிய சிரிப்புடன் இருக்க, அவரது கையில் ரத்தம் தோய்ந்த ஆயுதம் ஒன்றும் இருக்கிறது. அத்துடன் மூன்று குரங்குகள் பொம்மைகளாக தொங்கிக் கொண்டிருக்கிறது. நான்காவதாக ஒரு குரங்கு வீழ்த்தப்பட்டுள்ளதைப் போல் அமைந்திருப்பதால் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.