சென்னை.
கொடைக்கானலில் உள்ள காட்டுப் பகுதியில் சுற்றுலா செல்லும் நான்கு நண்பர்கள், அங்குள்ள விருந்தினர் மாளிகை ஒன்றில் தங்குகிறார்கள். விருந்தினர் மாளிகை எதிரில் அதே இடத்திற்கு சுற்றுலாவுக்கு வரும் கணவன், மனைவி அவர்களது மகள் என ஒரு குடும்பத்தினர் அங்கு வந்து தங்குகின்றனர். அந்த குடும்பத்தினர் நான்கு நண்பர்களிடமும் நட்பாக பழகுகின்றனர். அந்த குடும்பத்தினர் சுற்றுலா செல்ல புறப்படும் சமயத்தில் அவர்களது கார் பழுதாகி விடுகிறது. இதனால் அவர்கள் அந்த நான்கு நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுலாப் பகுதிகளை சுற்றிப் பார்த்துவிட்டு அறைக்கு திரும்புகிறார்கள். மறுநாள் காலை, அந்த தம்பதியின் மகளும், நான்கு நண்பர்களில் ஒருவரும் காணாமல் போகிறார்கள். காணாமல் போன மகளும், நான்கு நண்பர்களில் ஒருவரும் கிடைத்தார்களா? அவர்களின் கதி என்ன ஆனது? என்பதுதான் ‘அகடு’ படத்தின் கதை.
பெண் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஞ்சலி நாயர் போதை பழக்கத்தால் காம உணர்வுக்கு அடிமையாகி தனது ஒழுக்கமின்மையால் ஏற்படும் பிரச்சனையை சமாளிக்கும்போது மிக சிறப்பாக எந்தவித அலட்டல் இல்லாமல் நடித்திருக்கிறார். அஞ்சலி நாயரின் மகளாக நடித்திருக்கும் ரவீணா, தனக்கு கொடுத்த பணியை சரியாக செய்திருக்கிறார்.
அஞ்சலி நாயரின் கணவராக நடித்திருக்கும் விஜய் ஆனந்த், நான்கு நண்பர்களாக விஜய் டி.வி.யில் நடித்த சித்தார்த், ஸ்ரீராம் கார்த்திக் மற்ற இரு புதுமுகங்கள் என அனைவரும் கதாபாத்திரத்திற்க்கு தகுந்தவாறு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறனர்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஜான் விஜய், கொலை சம்பவத்தைப்பற்றி விசாரிக்கும்போதும் மற்றும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக அவர் மேற்கொள்ளும் விசாரணைக் காட்சிகளிலும் தனது நடிப்பை அவரது ஸ்டைலில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
திரில், கிரைம், சஸ்பென்ஸ், ஜானர் கதைக்கு ஏற்றவாறு. பின்ணணி இசையை அமைத்திருக்கிறார் ஜான் சிவநேசன். வனப்பகுதியின் இயற்கை அழகை முழுமையாக ரசிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் சாம்ராட்.
ஒரு சில கதாப்பாத்திரங்களை வைத்துக்கொண்டு முழுமையான ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் எஸ்.சுரேஷ் குமார் பெண்கள் போதை பழக்கத்திற்க்கு அடிமையானால் இறுதியில் அவர்களது நிலை என்னாகும் என்பதை சரியான முறையில் சமுதாயத்திற்கான செய்தியை மிக அழுத்தமாக பதிவு செய்திருப்பதுடன் கிளைமாக்ஸ் காட்சியை யாரும் எதிர்ப்பார்க்காத விதத்தில் சொல்லியிருப்பது பாராட்டத்தக்கது.
மொத்தத்தில் ‘அகடு’ படத்தை பார்க்கலாம்.