NMH இண்டநேஷனல் பிக்சர்ஸ் வழங்கும் “முதல் மனிதன்” இசை வெளியீடு!

155

சென்னை.

NMH இண்டநேஷனல் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் உசேன்  தயாரிப்பில், இயக்குநர் ராஜராஜ துரை இயக்கியுள்ள திரைப்படம் முதல் மனிதன். மதத்தின் அரசியல் மனிதத்தை எப்படி அழிக்கும் என்பதை பேசும் படமாக சமூகத்திற்கு அவசியமான திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, திரைபிரபலங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள்  முன்னிலையில்,  இனிதே நடைபெற்றது.

இவ்விழாவில் இயக்குநர் ராஜராஜதுரை பேசியதாவது…

எத்தனையோ தோல்விகளை நான் என் வாழ்வில் சந்தித்துள்ளேன். என் இன மக்களையும், மாற்று சாதியைசேர்ந்தவர்களையும்  வரவேற்கிறேன். அதிர்ச்சியடையாதீர்கள் நான் என் இனம் என சொன்னது மனித இனத்தை, என் சாதி என சொன்னது ஆண் சாதியை, மாற்று சாதி என சொன்னது பெண் சாதியை தான். உலகில் ஆண் சாதி, பெண் சாதி தவிர்த்து வேறு எந்த சாதியும் இல்லை என்பதை நம்புவன் நான். அதைத்தான் இந்தப்படத்திலும் சொல்லியுள்ளேன் இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி…

இயக்குநர் R.V. உதயகுமார் பேசியதாவது…

இந்தப்படத்தில் ஒரு வித்தியாசமான பாடல் இயக்குநரே எழுதியுள்ளார் அருமையான பாடல். ஒரு அற்புதமான படத்தை தந்துள்ள இயக்குநருக்கு என் வாழ்த்துக்கள். இப்போது நிஜத்தில் சாதியை யாரும் பேசுவதில்லை சினிமாவில் தான் சாதியை பற்றி பேசி,  சும்மா இருக்கும் சங்கை ஊதிக்கெடுக்கிறார்கள். அதற்கு தேசியவிருதும் கொடுத்துவிடுகிறார்கள். இதை என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஏற்றதாழ்வு  என்பது பணம், காசில் வருவதில்லை. புகழ்பெற்றவன் மற்றவனை இகழ்வாக நடத்துவதிலேயே அது ஆரம்பித்து விடுகிறது. அதை முதலில் மாற்றுங்கள். அதைத்தான் இந்தப்படம் பேசுகிறது. நாம் தான் ஜாதியை கண்டுபிடித்து நாமே ஏற்றதாழ்வை பிரிவினையை உருவாக்கி, ஜாதி இல்லை என்று இப்போது சொல்லிக்கொண்டிருக்கிறோம். இங்கு வந்துள்ள அரசியல் தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள்,  இனிமேல் பள்ளியில் சேரும்போது, சாதியை சான்றிதழில் போடக்கூடாது என சட்டம் போடுங்கள், என்ன மதம் என்று மட்டும் போடுங்கள் பிரச்சனை தீர்ந்து விடும், இப்படத்திற்கு அனைத்து ஆதரவு தந்து வெற்றிபெறச் செய்யுங்கள் நன்றி.

இயக்குநர் பேரரசு பேசியதாவது…

இந்த மேடையை பார்க்க, மிகவும் சந்தோஷமாக உள்ளது. அனைத்து மதத்தை சார்ந்தவர்களும் இங்கு இருக்கிறார்கள். முதல் மனிதன் படத்திற்கான வெற்றி இங்கேயே ஆரம்பித்து விட்டது. ஜாதி கலவரத்தை தூண்டுவதை இப்போது சினிமாவிலும் ஆரம்பித்து விட்டார்கள். அது நல்ல விசயம் இல்லை. ஜாதி கலவரத்தை தூண்டும் படங்கள் வரும் சமயத்தில் சாதியே இல்லை என இப்படம் வருவது மகிழ்ச்சி. சாதியை வைத்து  இப்போது எல்லோரும் பிழைப்பு நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு ஜாதியை உயர்த்தி இன்னொரு ஜாதியை தாழ்த்தி எடுக்கும் சினிமாவை தடை செய்ய வேண்டும். இந்த மாதிரி படத்தை தயாரிப்பாளர்கள் தயாரிக்க கூடாது. மக்கள் ஆதரவு தராதீர்கள். இந்துவாக பிறந்ததால் நான் இந்துவாக இருக்கிறேன். என் அப்பா காட்டிய தெய்வத்தை நான் வழிபடுகிறேன் இதில் என் தவறு எங்கு இருக்கிறது. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் இந்த முதல் மனிதன் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் நன்றி.

நாயகி சாண்ட் ரா ரோஷ் பேசியதாவது…

இது என் முதல் படம், திரையில் ரிலீஸாவது மிக மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப்படத்தின் கதை அவ்வளவு நன்றாக இருந்தது. இயக்குநர் கேமராமேன் மிக ஆதரவாக இருந்தார்கள். எங்கள் படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் நன்றி.

நடிகர் பாசித் பேசியதாவது…

முதல் மனிதன் எனக்கும் முதம் முறையாக நடிக்கும் வாய்ப்பை தந்தது. நடிகர் மாரிமுத்து சாருடன் முதலில் நடிகும்போது, நிறைய டேக் வாங்கி நான் சரியாக நடிக்க வில்லை என திட்டி விட்டார். ஆனால் அதை எனக்கான பாடமாக எடுத்துகொண்டு, மற்ற காட்சிகளை டேக் வாங்காமல் நடித்தேன். எனக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் தாஜ்நூர் பேசியதாவது…

இந்தப்படம் எனக்கு ஒரு வித்தியாசமான படம் தயாரிப்பாளரிடன் ஏன் இந்தப்படம் எடுக்கிறீர்கள் எனக்கேட்ட போது, சினிமா துறை மூலம் ஒரு கருத்தை சொல்லும் போது பெரியளவில் சென்று சேர்கிறது, அதனால் எடுக்கிறேன் என்றார். மனதுக்கு சந்தோஷமாக இருந்தது.  ஆண்டி இண்டியன் படத்திற்கும் இந்தப்படத்திற்கும் சில ஒற்றுமைகள் இருக்கிறது. ஆனால் கதையில் இல்லை. இப்படத்தில் நாயகி மிக நன்றாக நடித்திருக்கிறார்.  அனைவரும் கடுமையாக உழைத்துள்ளார்கள் வாழ்த்துக்கள்.