சென்னை.
ஜி.வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசை மற்றும் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஜெயில்’. இந்த திரைப்படத்தைப் பார்த்து மிகவும் ஈர்க்கப்பட்ட ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார். இப்படத்தை, க்ரிக்ஸ் சினி க்ரியேஷன் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ளார். ‘வெயில்’, ‘அங்காடித் தெரு’, ‘அரவான்’,’காவியத்தலைவன்’ உள்ளிட்ட தரமான படங்களை இயக்கிய ஜி.வசந்தபாலன் தற்போது கதை எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ஜெயில்’.
இந்தத் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடிக்கிறார். ‘தேன்’ திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான அபர்ணதி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ராதிகா சரத்குமார், ‘பசங்க’ பாண்டி, நந்தன் ராம் (இசையமைப்பாளர் சிற்பி அவர்களின் புதல்வன்), ரவி மரியா உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் ஏராளமான நவீன நாடக நடிகர்களும், புதுமுகங்களும் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டராக ரேமண்ட் டெரிக் கிரஸ்ட்டா பணியாற்றியுள்ளார். சண்டைக்காட்சிகளை அமைக்கும் பணியை தேசிய விருது பெற்ற அன்பறிவ் ஏற்றுள்ளனர். நடனக்காட்சிகளை சாண்டி, ராதிகா அமைத்துள்ளனர்.ஜிவி பிரகாஷ் குமாரின் இசையில் கபிலன்,சிநேகன் , கருணாகரன்,தெருக்குரல் அறிவு பாடல்களை எழுதியுள்ளனர்.இப்படத்திற்காக நடிகர் தனுஷ் அவர்கள் பாடிய காத்தோடு காத்தானேன் பாடல் யூடியூப்பில் வெளியாகி இரண்டு கோடி பார்வையாளர்களை ஈர்த்து பெரும் வெற்றியடைந்துள்ளது.
இந்நிலையில் படத்தைத் திரையரங்குகளில் வெளியிடுவதாக அறிவித்துள்ளார். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா. விரைவில் வெளியீட்டுத் தேதி உள்ளிட்ட விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.