சென்னை.
நடிகர் சூர்யா ஆரம்பத்தில் பல படங்களில் நடித்து இருந்தாலும் எந்த படங்களும் அவர் எதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றி அடையவில்லை. இதனால் மனம் நொந்து என்ன செய்வதென்று புரியாமல் இருந்த நிலையில் இயக்குனர் பாலா இயக்கத்தில் அவர் நடித்த ‘நந்தா’, ‘பிதாமகன் ஆகிய படங்கள் மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்து ஒரு சிறந்த நடிகன் என்ற பெயரை வாங்கி கொடுத்தது. இந்த வெற்றியில் இயக்குனர் பாலாவுக்கு பெரிய பங்கு உண்டு.
நடிகர் சூர்யா தனது திரையுலக வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய பாலாவுடன் இருபது வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைய உள்ள தகவலை தன்னுடைய சமூக வலைத்தளம் மூலம், புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உறுதி செய்துள்ளார். இதனை சூர்யா ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
இந்த இரு படங்களுக்கு பின், கடந்த 2005 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ‘மாயாவி’ படத்தை பாலா தயாரித்திருந்தார். ஆனால் கடந்த 20 வருடங்களாக சூர்யா மற்றும் பாலா கூட்டணி இணையவே இல்லை. இந்நிலையில் பாலா இயக்கத்தில் மீண்டும் சூர்யா இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாமல் இருந்தது.
தன்னுடைய தந்தை மற்றும் பாலாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சூர்யா போட்டுள்ள பதிவில், “என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்… ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்.. 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்… அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்… அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்…” என்று தெரிவித்துள்ளார்.