சென்னை.
தமிழ் சினிமாவில் ஒரு வருடத்திற்க்கு எத்தனையோ படங்கள் வருகின்றன. ஆனால் அத்தனை படங்களும் வெற்றி அடைகின்றதா..என்பது கேள்வி குறிதான். சமீப காலமாக ஜாதியை, மதத்தை அடிப்படையாக பல படங்கள் வந்தாலும் எந்தப் படமும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பதில்லை என்பதுதான் உண்மை. . தற்போது இருளர் இனத்தினரின் வாழ்வியலை மையமாக வைத்து நடிகர் சூர்யா ‘ஜெய் பீம்’ என்ற படத்தை 2 டி என்டர்டயின்ட்மென்ட் சார்பில் சொந்த செலவில் தயாரித்து மிக சிறந்த நேர்த்தியான ஒரு படைப்பாக கொடுத்து இருப்பது மிகவும் பாராட்ட த்தக்க, விஷயம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த படம் தீபாவளி அன்று திரையங்குகளில் வெளி வந்து இருந்தால் கண்டிப்பாக மிக பெரிய வெற்றிப் படமாக அமைந்து இருக்கும். 1990-1995களில் தமிழ்நாட்டில் நடந்த சில உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளார் தா.செ.ஞானவேல்.
கோணமலை பகுதியில் வசிக்கும் இருளர் பழங்குடியைச் சேர்ந்தவர் ராஜாக்கண்ணு. இவர் மனைவி செங்கேணி மற்றும் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் ஊர் தலைவர் வீட்டில் பாம்பு புகுந்து விட்டதால், அந்த பாம்பை பிடிக்க ராஜாக்கண்ணுவை அழைத்து செல்கிறார்கள். அந்த பாம்பை பிடித்து காட்டிற்குள் விட்டு விடுகிறார் ராஜாக்கண்ணு. அதன்பின் தன் மனைவி இரண்டாவதாக கர்ப்பம் தரித்து இருப்பதால், பணம் சம்பாதிப்பதற்காக வெளியூரில் உள்ள ஒரு செங்கல் சூளைக்கு வேலைக்கு செல்கிறார். இந்த சூழ்நிலையில் ஊர் தலைவர் வீட்டில் இருக்கும் நகைகள் திருடுபோகிறது. இதற்கு காரணம் பாம்பை பிடிக்க வந்த ராஜாக்கண்ணுதான் என்று ஊர் தலைவர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்கிறார், போலீஸ் அவரை வலை வீசி தேடுகிறது.
ஆனால் அவர் வீட்டில் இல்லாததால், அவரது மனைவி செங்கேணியையும் மற்றும் உறவினர்களையும் போலீஸ் அழைத்து சென்று கொடுமை படுத்துகிறார்கள். ஒரு கட்டத்தில் ராஜாக்கண்ணு போலீஸாரிடம் சிக்கி விட, ஊர் தலைவர் வீட்டில் நகைகள் திருடியதை ஒப்புக்கொள்ள சொல்லி போலீஸார், அவரை அடித்து துன்புறுத்துகிறார்கள். இந்நிலையில், ராஜாக்கண்ணு மற்றும் உறவினர்கள் லாக்கப்பில் இருந்து தப்பித்து ஓடிவிட்டதாக போலீஸ் சொல்கிறார்கள். இதனால் சந்தேகம் அடைந்த மனைவி செங்கேணி, வழக்கறிஞர் சூர்யாவின் உதவியை நாடுகிறார். சூர்யாவுடன் இணைந்து, அவரது மனைவி செங்கேணி ராஜாக்கண்ணுவை கண்டுபிடித்தாரா? லாக்கப்பில் இருந்த ராஜாக்கண்ணுக்கு என்ன ஆனது? அந்த நகைகளை திருடியது யார்.. என்பதை போலீஸார் கண்டுபிடித்து கொடுத்தார்களா? என்பதுதான் இப்படத்தின் கதை.
இருளர் பழங்குடிப் பெண்ணுக்கு நீதியை வழங்குவதற்காக படத்தில் வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் சூர்யா. போலீஸார் சட்டத்திற்கு புறம்பாக சில வழக்குகளை மலை அடிவாரத்தில் வாழும் சமூகத்தினரின் மீது சுமத்தி வழக்குகளை எப்படி முடிக்கிறார்கள் என்பதை போலீஸ் ஆபிஸர் பிரகாஷ்ராஜிடம் விவரிக்கும்போதும், அந்த மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதியை சட்ட ரீதியாக போராடும் காட்சிகளிலும், எந்தவித ஆர்ப்பாட்டம் இல்லாமல் சூர்யாவின் நடிப்பு அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறது. அடிதடி. வில்லன்களுடன் சண்டை என்றில்லாமல் வேறொரு சூர்யாவின் நடிப்பு இப்படத்தில் பார்க்க முடிகிறது. இந்த படம் மூலம் இருளர், குறவர் சமுதாயத்திற்க்கு மிக பெரிய அந்தஸ்தை கொடுத்து இருக்கிறார் சூர்யா.
மணிகண்டன் பல படங்களில் நடித்து இருந்தாலும், இப்படத்தில் ராஜாக்கண்ணு என்ற கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு மிக கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். உண்மையை ஒப்புக் கொள்ளச் சொல்லி போலீசாரிடம் லத்தியடி வாங்கும்போது நம்மை கண்கலங்க வைத்து விடுகிறார். இவரது சிறந்த நடிப்புக்கு கண்டிப்பாக விருது கிடைக்கும்.
இவரது மனைவியாக வரும் லிஜோமோல் ஜோஸ், செங்கேணி கதாபாத்திரத்திற்கேற்றவாறு, நிறைமாத கர்ப்பிணியாக நடித்து அனைவரது மனதிலும் பதிந்து விடுகிறார். கணவனை தேடுவது, போலீசாரிடம் அடிவாங்குவது என தன் நடிப்பை சிறப்பாக வெளிப் படுத்தி இருக்கிறார்.
போலீஸ் அதிகாரியாக வரும் பிரகாஷ் ராஜ் தனது அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார். எஸ்.ஐ.யாக வரும் தமிழரசன் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ரஜிஷா விஜயன், ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம், எம்.எஸ்.பாஸ்கரன் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
பழங்குடியினர் காவல்துறையால் எப்படிபட்ட கொடுமைகளை அனுபவிக்கிறார்கள் என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் தா.செ.ஞானவேல்..மிக சிறந்த ஒரு படைப்பாளி என்பதை இப்படத்தின் மூலம் நிருபித்து காட்டியுள்ளார். ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அச்சு அசலாக சிறந்த முறையில் தேர்வு செய்து திறமையாக நடிப்பை வாங்கி இருக்கிறார் இயக்குனர்.
ஒளிப்பதிவாளராக எஸ்.ஆர்.கதிர், இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் இருவரும் தங்களது பணியை மிகச் சிறப்பாக செய்து உள்ளனர்.
மொத்தத்தில் ‘ஜெய் பீம்’ படம் எல்லா தரப்பினரும் பார்க்க வேண்டிய ஒரு சிறந்த படம்.
ராதாபாண்டியன்.