சென்னை:
கடந்த 6 மாத காலமாக தமிழக முதலமைச்சர் மிக அற்புதமாக செயல்பட்டு தமிழக மக்களின் நலனைப் பாதுகாத்து வருகிறார் என கே.எஸ்.அழகிரி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடந்த 1955-ம் ஆண்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடுமையான வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டபோது, அன்றைய முதலமைச்சர் காமராஜர் நேரடியாக அந்தப் பகுதிகளுக்குச் சென்று வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கடுமையாகப் பணியாற்றியதை, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அண்ணா பாராட்டியதை எவரும் மறந்திட இயலாது. அதைப்போல, இன்றைக்கு தமிழக முதலமைச்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருவதைப் பாராட்ட வேண்டிய கடமையும் பொறுப்பும் எதிர்க்கட்சிகளுக்கு இருக்கிறது.
சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய முதலமைச்சரால் அனுப்பப்பட்ட அமைச்சர்கள் குழு அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் சேதம் அடைந்ததற்காக விவசாயிகளுக்கு இழப்பீடாக ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு ரூ.20 ஆயிரம் வழங்குவதாக அறிவித்ததோடு, மறு சாகுபடி செய்திட ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு இருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது.அதேபோல் குறுகிய கால விதைகள், நுண்ணூட்ட உரம் ஆகியவற்றை விவசாயிகளுக்கு வழங்கி, அவர்களது துயரைத் துடைக்கிற பணியில் முதலமைச்சர் ஈடுபட்டு இருக்கிறார். மக்கள் துன்பத்தில் பாதிக்கப்பட்டிருக்கிற போது, எத்தகைய நிவாரணங்களை வழங்க வேண்டுமோ அதை அறிந்து, அதற்கேற்றாற்போல் உதவிகளை அறிவித்து வருகிற முதலமைச்சரின் தொலைநோக்குப் பார்வை அனைவரது பாராட்டையும் பெற்றிருக்கிறது.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் மூலமாக 37 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். கனமழை பெய்த ஒரு வார காலத்துக்கு அம்மா உணவகத்தின் மூலம் 14 லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டிருக்கிறது. இவற்றை எல்லாம் பார்க்கிற போது, கடந்த 6 மாத காலமாக தமிழக முதலமைச்சர் மிக அற்புதமாக செயல்பட்டு தமிழக மக்களின் நலனைப் பாதுகாத்து வருகிறார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய பணிகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக பாராட்டுகிறோம், வாழ்த்துகிறோம். அவரது பணி மேலும் சிறப்பாக தொடர கட்சி எல்லைகளை கடந்து அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினால், தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பீடு நடைபோடுவதற்கான வாய்ப்பு உருவாகும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.