சமுத்திரக்கனி நடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கத்தில் ‘சித்திரைச் செவ்வானம்’ ஜீ5 OTT தளத்தில் வெளியீடு!

135

சென்னை.

‘லாக்கப்’ ‘க.பெ.ரணசிங்கம்’ ‘மதில்’  ‘ஒரு பக்க கதை’ ‘மலேஷியா டு அம்னீஷியா’ ‘டிக்கிலோனா’ , ‘விநோதய சித்தம் ‘ உள்ளிட்ட தரமான படங்களை ஜீ5 வழங்கி ரசிகர்களை மகிழ்வித்தது. இந்த வரிசையில் ஜீ5 தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. “சித்திரைச் செவ்வானம்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  பூஜா கண்ணன் மற்றும் ரீமா கல்லிங்கல் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பூஜா, சாய் பல்லவியின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு சாம் CS இசையமைப்பாளராகவும், பிரவீன் KL படத்தொகுப்பாளராகவும்,  ஒளிப்பதிவாளர்களாக மனோஜ் பரமஹம்சா மற்றும்  K.G . வெங்கடேஷ் பணிப்புரிந்துள்ளனர். பிரபல இயக்குனர் விஜய் அவர்கள் இப்படத்தை எழுதி வெளியிடுகிறார். A.L அழகப்பன் மற்றும் P. மங்கையர்க்கரசி இணைந்து தயாரித்துள்ளனர்.

இயக்குநர், நடிகர் சமுத்திரகனி கூறியதாவது…

‘சித்திரைச் செவ்வானம்’ ஒரு அழகான திரைப்படம். என் தம்பி ஃபைட் மாஸ்டர் சில்வா திடீரென ஒருநாள் வந்து, என்னிடம் ஒரு கதை சொன்னார். அவரிடமிருந்து இப்படி ஒரு கதையை நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு அப்பா,  பொண்ணு இருவருக்குமிடையிலான உணர்வுப்பூர்வமான பந்தம், அவர்களின் வாழ்க்கை பயணம், அதில் நடக்கும் பிரச்சனைகள் தான் கதை. இப்படி மனதை உருக்கும் ஒரு உணர்வுபூர்வமான கதையை, என் தம்பி சொல்வார் என நான் சுத்தமாக எதிர்பார்க்கவேயில்லை. கேட்டதுமே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. உடனே ஷூட்டிங் போகலாம் என்றேன். மிக அற்புதமான படமாக உருவாக்கிவிட்டார். இம்மாதிரியான ஒரு மிகச்சிறந்த படத்தில் என்னையும் பங்கேற்க வைத்ததற்கு சில்வாவுக்கு நன்றி. இது நம் சமூகத்திற்கு அவசியமான திரைப்படம். அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் திரைப்படமாக இருக்கும்” என்றார்.

பிரபல சண்டைப் பயிற்சி இயக்குநர், “சித்திரைச் செவ்வானம்” திரைப்பட இயக்குநர் ஸ்டண்ட் சில்வா கூறியதாவது…

“இயக்குநர் விஜய் என்னிடம் ஒரு கதை சொன்னார். அட்டகாசமாக இருந்தது. இந்தக் கதையை நீங்கள் இயக்குங்கள் நன்றாக இருக்கும் என்றார். எனக்கும் அந்தக்கதையை இயக்கலாம் என்று தோன்றியது. உடனடியாக அந்த கதையை நிறைய மேம்படுத்தி, முழு திரைக்கதையாக மாற்றினோம். பின் சமுத்திரகனியிடம் இந்தக் கதையை சொன்னேன். சொன்ன மறுநொடியே ‘தம்பி சூப்பரா இருக்கு எப்ப ஷீட்டிங் போகலாம்’ என்று கேட்டார். அப்படி உருவானது தான் ‘சித்திரைச் செவ்வானம்’ திரைப்படம். நான் ஃபைட் மாஸ்டர் என்பதால் இது ஆக்சன் படம் என்று நினைத்து விடாதீர்கள், நெஞ்சை தொடுவது போன்ற உணர்வு பூர்வமான படம் தான் இது. ஒரு அப்பாவுக்கும் மகளுக்குமான அன்பான உறவு தான் கதை.  சமூகத்தில் ஏற்படக்கூடிய சிக்கல், அதை அவர்கள் கடப்பது தான் கதை. இந்தப்படத்தின் முக்கியமான மகள் பாத்திரத்திற்கு நடிகை சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் சரியாக இருப்பார் என இயக்குநர் விஜய் கூறினார். எங்களுக்கும் அவர் பாத்திரத்தில் சரியாக பொருந்துவார் என தோன்றியது. மிக அற்புதமாக மகள் பாத்திரத்தை செய்து அசத்திவிட்டார். படத்தில் இன்னொரு முக்கியமான பாத்திரத்தை, கேரளாவில் புகழ்பெற்ற நடிகையான ரீமா கலிங்கல் செய்திருக்கிறார். நானும் இயக்குநர் விஜய்யும் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறோம். நினைத்ததை விட மிக அழகான திரைப்படமாக வந்திருக்கிறது. தற்போது ZEE5 தளத்தில் டிசம்பர் 3 ஆம் தேதி வெளிவருகிறது.   எல்லா தரப்பினரும் பார்த்து ரசிக்க கூடிய படமாக இப்படம் இருக்கும். அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி’ என்றார்.

நடிகை ரீமா கலிங்கல் கூறியதாவது…

‘முதலில் மாஸ்டர் சில்வாவும், இயக்குநர் விஜய்யும், ‘சித்திரைச் செவ்வானம்’ படத்திற்காக என்னை அணுகி, போலீஸ் பாத்திரம் என்று சொன்ன போது, நானும் இதை ஒரு ஆக்சன் திரில்லர் படம் என்று தான் நினைத்தேன். அப்பா மகளுக்கான ஆழமான உணர்வை சொல்லும் கதையை சொல்லி, என்னை ஆச்சரியப்படுத்தி விட்டார் மாஸ்டர். தமிழ் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடுவதை காண பெரும் ஆவலுடன் காத்திருக்கிறேன். இயக்குநராக தன் திரைப்பயணத்தை துவங்கும் ஸ்டண்ட் சில்வா சாருக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும், எதிர்காலத்தில் மிகப்பெரிய இயக்குநராக வாழ்த்துக்கள். நன்றி’ என்றார்.

‘சித்திரைச் செவ்வானம் ’ டிசம்பர் 3 அன்று நேரடியாக ஜீ5 OTT தளத்தில் வெளியாகவுள்ளது.