‘உத்ரா’ திரை விமர்சனம்!

166

சென்னை.

வட்டப்பாறை என்ற கிராமத்தில் உள்ள  மக்கள்  யாராவது தங்கள் மகனுக்கு அல்லது மகளுக்கு திருமணம் செய்து வைத்தால், அன்று இரவு நடக்கும் முதல் இரவில் ஒரு அம்மானுஷ்ய சக்தியினால் கொல்லப்படுகிறார்கள். இந்த விஷயத்தை தெரிந்துக் கொள்ள தங்கள் பாட திட்டத்துக்காக மூன்று கல்லூரி ஜோடிகள் வட்டப்பாறை கிராமத்திற்கு செல்கிறார்கள். அந்த கிராமத்தில் மின்சாரம் இல்லை, சந்தோஷம் இல்லை, அவ்வளவு ஏன்?  திருமணம் நடந்தே பல வருடங்கள் ஆகிறது.  இதனால் அந்த கிராமத்தின் தலைவரான தவசி,  வட்டப்பாறை  கிராமத்தை விட்டு சென்று விடுமாறு அவர்களை வற்புறுத்துகிறார். இது மூட நம்பிக்கை என்று கல்லூரி மாணவ, மாணவிகள் நிரூபிக்க தங்களுக்குள் ஒரு ஜோடியை தேர்வு செய்து திருமணம் செய்வது போல் நாடகமாடுகிறார்கள். அதன் மூலம் தங்களுக்கு எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்று அந்த ஊர் மக்களை நம்ப வைக்கிறார்கள்.

அதை நம்பும் கிராம மக்கள் தங்கள் ஊர் ஜோடி ஒன்றுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணமான புதுமண தம்பதி அன்றிரவே அம்மானுஷ்ய சக்தியினால் கொல்லப்படுகிறார்கள். கொலை எப்படி, ஏன் நடக்கிறது, கொலையாளி யார்?  என்பதை கல்லூரி மாணவ, மாணவிகள்  கண்டுபிடித்தார்களா? அந்த கிராமத்தில் உள்ளவர்களுக்கு துணையாக இருந்து நல்வழிபடுத்தினார்களா? என்பதுதான் மீதி கதை..

இதில் உத்ராவாக ரக்‌ஷா நடித்திருக்கிறார். இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். உத்ராவையும் அவள் காதலனையும் கொன்ற வில்லன் மாசியை பழி வாங்க துடிக்கும் காட்சியில் மிக சிறப்பாக தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்..

உத்ராவையும் அவள் காதலனையும் கொன்ற வில்லன் மாசியை அந்த ஊர் எல்லைக்குள் கொண்டு வர,  கல்லூரி மாணவ, மாணவிகள் மிக லாவகமாக பேசி கொண்டு வந்து சேர்க்கும் காட்சியில்  கல்லூரி மாணவர், மாணவிகள் நடிப்பு சிறப்பு.  அம்மனாக கெளசல்யா நடித்திருக்கிறார். இறந்த ஆத்மாவான  உத்ராவை தன் சன்னதிக்குள் அனுமதிக்க மறுக்கும் வாக்குவாத காட்சியில் அமைதி சொரூபமாக கெளசல்யா நடித்திருக்கிறார்.

திரைக்கதை எழுதி இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார் நவீன் கிருஷ்ணா. இவர் ஏற்கனவே ‘நெல்லை சந்திப்பு’ என்ற படத்தை இயக்கியவர். ஆவி உருவமான உத்ராவை இன்னும் அதிகமான கிராபிக்ஸ் காட்சிகளில் சிறப்பாக உருவாக்கி இயக்கி இருக்கலாம்.

சாய்தேவ் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். ஒளிப்பதிவு செய்து இருக்கும் ரமேஷ் அந்த கிராமத்தை இயற்கை எழிலுடன் காட்டி இருக்கிறார்.

இந்தப் படத்தை ரேகா மூவிஸ் சார்பாக எம்.சக்கரவர்த்தி தயாரித்துள்ளார்.

மொத்தத்தில் ‘உத்ரா’ படத்தை பாராட்டலாம்.