விஜய் மில்டன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி- மேகா ஆகாஷ் இணைந்து நடிக்கும் “மழை பிடிக்காத மனிதன்”

174

சென்னை.

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘சலீம்’  திரைப்படம், தமிழ் சினிமாவில் தனிச்சிறப்பான  ஒரு திரைப்படமாகும். விமர்சன ரீதியில் பாராட்டுக்களை குவித்த இந்த திரைப்படம், வசூல் ரீதியிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மிகச்சிறப்பான திரைக்கதை க்காகவும், உணர்வுப்பூர்வமான கதைக்காகவும் பெரும் பாராட்டுக்களை குவித்தது இத்திரைப்படம். விஜய் ஆண்டனியின் அற்புதமான நடிப்பு திரையரங்குகளில் கைதட்டல்களையும், விசில் சத்ததையும் குவித்தது. தற்போது பன்முக திறமை கொண்ட கலைஞரான விஜய் ஆண்டனி அடுத்த படம் “மழை பிடிக்காத மனிதன் “   படத்தில் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளார்.

இப்படத்தை ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய் மில்டன்  எழுதி, இயக்குகிறார். ஆக்சன், கமர்ஷியல் படமாக உருவாகவுள்ள இப்படம், முதல் முறையாக தாமன் & தியூ பகுதியில் படமாக்கப்படும் முதல் தமிழ்படம் ஆகும். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு நடந்து வருகிறது, 2022 ஆம் ஆண்டு மத்தியில் இப்படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. திரையை தன் அழகால் வசியப்படுத்தும் தேவதை, மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கிறார். சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மிக முக்கியமான பாத்திரமொன்றில் நடிக்கிறார். கன்னட திரையுலகின் மிக திறமை வாய்ந்த இரண்டு நடிகர்களான தனஞ்செயா மற்றும் ப்ருத்வி அம்பர் இப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார்கள். இத்திரைப்படம் மூலமாக தமிழ் சினிமா திறமை மிகுந்த நடிகர்களின் அற்புதமான நடிப்பை திரையில் காணவுள்ளது. மேலும் சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல் விஜய், சுரேந்தர் தாகூர் பிரணிதி ஆகியோரும் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இயக்குநர் ரமணா ஒரு வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்கிறார்.

விஜய் ஆண்டனி மற்றும் விஜய் மில்டன்  திரைப்படங்களில் எப்போதும் ஒரு பொதுவான அம்சம் இருக்கும், வித்தியாசமான கதைக்களம் மற்றும் மனதைக் கவரும் ஆக்சன்  காட்சிகள் இவர்கள் படத்தில் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். அந்த வகையில் இந்த இரண்டு அம்சங்களுடன், மழை பிடிக்காத மனிதன் படத்தில், பிரமிக்க வைக்கும்  அதிரடி காட்சிகளோடு  ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளது படக்குழு. தான் நடிக்கும் படங்களில் எப்போதும்  குறைந்த வசனங்கள் கொண்ட கதாபாத்திரத்தில்,  தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி, அசத்தி வருகிறார் பன்முக கலைஞரான  விஜய் ஆண்டனி. எப்போதும் நம்பிக்கையூட்டும் கதைக்களங்களுடன் வரும் விஜய் மில்டன், கதாநாயகனின் வாழ்க்கையில் பத்து அத்தியாயங்களை காலவரிசைப்படி கடந்து செல்லும் ஒரு தனித்துவமான கதைக்களத்தை, மழை பிடிக்காத மனிதன் படத்தில் உருவாக்கியுள்ளார். இந்தத் தலைப்பு வந்தவுடனேயே, மழை பிடிக்காத மனிதன்  படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்குமா ?  என பல கேள்விகள் இயல்பாகவே தோன்றும். அதனை தெளிவுபடுத்தும் விதமாக  இந்தப் படம் சலீம் படத்தின் நேரடித் தொடர்கதை என்றும் தயாரிப்பாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

இப்படத்தை எழுதி இயக்குவது மட்டுமின்றி, ‘மழை பிடிக்காத மனிதன் படத்துக்கு விஜய் மில்டன் ஒளிப்பதிவும் செய்கிறார். விஜய் ஆண்டனி பாடல்களுக்கு இசையமைக்க, அச்சு ராஜாமணி பின்னணி இசையை கவனிக்கிறார். படத்தொகுப்பாளராக லியோ ஜான்பால், கலை இயக்குநராக K.ஆறுசாமி, ஸ்டண்ட் மாஸ்டராக சுப்ரீம் சுந்தர், நடன இயக்குநராக ஸ்ரீதர், ஸ்டில்களை மகேஷ் ஜெயச்சந்திரன், விளம்பர வடிவமைப்பாளராக பவன் (சிந்து கிராபிக்ஸ்), ஆடை வடிவமைப்பாளராக ஷிமோனா ஸ்டாலின். பணிபுரிகின்றனர்.

“மழை பிடிக்காத மனிதன்” கமல் போஹ்ரா, லலிதா தனஞ்செயன், பிரதீப் B, பங்கஜ் போஹ்ரா மற்றும்  S. விக்ரம் குமார் ஆகியோர் இணைந்து INFINITI FILM VENTURES,  தயாரிக்கிறார்கள்.