ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒமைக்ரான் சிறப்பு வார்டில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

181

சென்னை:

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ அதிகாரிகளுடன் ஒமைக்ரானை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். தமிழகத்தில் கடந்த 2-ந்தேதி ஒமைக்ரான் வைரஸ் முதல் பாதிப்பு ஏற்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவிவருவதை அடுத்து அதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது. ஒமைக்ரானை கட்டுப்படுத்த சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு 136 படுக்கைகள் உள்ளன. மேலும் ஒமைக்ரானை கட்டுப்படுத்துவதற்கான கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆக்சிஜன் சிலிண்டர்கள், மற்றும் மருந்து பொருட்களும் தயாராக உள்ளன. இங்குள்ள தனி வார்டில் ஒமைக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக தனி மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்றார்.அங்கு 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கலனை பார்வையிட்டார். பின்னர் ஆஸ்பத்திரி மாடிக்கு சென்று ஒமைக்ரான் சிறப்பு வார்டை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்குள்ள மருத்துவ அதிகாரிகளுடன் ஒமைக்ரானை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

அங்குள்ள மருத்துவர்களிடமும் ஆலோசித்தார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளும் சென்றிருந்தனர். ஆஸ்பத்திரியில் செய்யப்பட்டு இருந்த சிறப்பு வசதிகளை மு.க.ஸ்டாலினுக்கு எடுத்துக் கூறினார்கள். பின்னர் மு.க.ஸ்டாலின் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்திற்கு சென்றார். அங்கு அமைக்கப்பட்டுள்ள கொரோனாவுக்கு எதிரான கட்டுப்பாட்டு அறைக்கு சென்றார். அங்குள்ள வசதிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறையையும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். ஆம்புலன்சில் முதல் உதவி சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு வசதிகள் அமைக்கப்பட்டிருந்ததையும் அவர் பார்வையிட்டார்.