சயின்ஸ் ஃபிக்‌ஷன் கலந்த அம்மா-மகன் பாசம் மிகுந்த ‘கணம்’ படத்தின் டீஸர் வெளியீடு!

166

சென்னை.

வித்தியாசமான கதைகளங்கள் எப்போதுமே ரசிகர்களை வசீகரிக்கத் தவறியதில்லை. அப்படி வித்தியாசமான கதைகளங்களை எப்போதுமே ரசிகர்களுக்கு விருந்தாக்கி வரும் நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். அந்நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக திரைக்கு வரவுள்ளது ‘கணம்’. இந்தப் படத்தின் டீஸரை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளத்தில் வெகுவாக கவனம் ஈர்த்துள்ளது. பல்வேறு திரையுலகினரும் படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

இயக்குநராக அறிமுகமாகியுள்ள ஸ்ரீகார்த்திக் இப்படத்தை குறித்து சொன்னதாவது.

“அம்மா பாசத்தை மையமாக வைத்து ஒரு அழகான சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் தான் ‘கணம்’. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்கியுள்ளேன். சின்ன பட்ஜெட் படமாக தொடங்கப்பட்டு, தற்போது சயின்ஸ் ஃபிக்‌ஷன் மற்றும் இரண்டு மொழிகளின் படபிடிப்பு செலவு உள்ளிட்டவைகளால் பெரும் பொருட்செலவு கொண்ட படமாக மாறியிருக்கிறது. இதில் அம்மா வேடத்தில் தென்னிந்திய சினிமாவில் கனவுக்கன்னியாக விளங்கிய அமலா மேடம் நடித்துள்ளார். இந்தக் கதையை அவரை மனதில் வைத்தே எழுதினேன். 25 வருடங்களாக நடிக்காமல் இருந்தவர், இந்தக் கதையைக் கேட்டவுடன் ஒப்புக் கொண்டார். படம் பார்ப்பவர்கள் அனைவரது மனதிலும், அவரவர்களின் நிஜ அம்மாவை நினைவு கூர்வார்கள். ‘கணம்’ படத்தின் சிறப்பே அம்மா பாசத்துக்குள் சயின்ஸ் ஃபிக்‌ஷன் கலந்திருப்பது தான்.  இந்தப் படம் அம்மாவை இழந்தவர்களுக்கு மீண்டும் அம்மாவை ஞாபகப்படுத்தும். படம் முடிந்ததும் அம்மாவிடம் பேசத் தோன்றும். அம்மாவை நேரில் பார்த்துக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கத் தோன்றும்.

அவருடன், சர்வானாந்த்,ரீத்து வர்மா, நாசர், சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதைக்கு மிக முக்கியமான கதாபாத்திரங்களில் ஹித்தேஷ், ஜெய், நித்யா என மூன்று சிறுவர்கள் நடித்துள்ளார்கள். தமிழில் சதீஷ், திலக் ரமேஷ் நடித்த கேரக்டரில், தெலுங்கில் வெண்ணிலா கிஷோர், பிரியதர்ஷி ஆகியோரும் நடித்துள்ளனர். இதர கதாபாத்திரங்கள் இரண்டு மொழிகளிலும் ஒன்று தான்.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சயின்ஸ் ஃபிக்‌ஷன் என்பதால் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மிகவும் மெனக்கிட்டு வருகிறோம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள், அது போல் இந்தப் படத்தில் என்ன இருக்கிறது என்பதற்கு ஒரு சின்ன முன்னோட்டமே இந்த டீஸர். இன்னும் பல ஆச்சரியமூட்டும் விஷயங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. விரைவில் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள அம்மா பாடலொன்றை வெளியிடவுள்ளோம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் கலக்கி வரும் நம் சித் ஸ்ரீராமின் மயக்கும் குரல் இப்படத்தில் அம்மா பற்றிய பாடல் மூலமாக கண்டிப்பாக மேலும் உங்கள் மனதில் நீங்காத இடம்பிடிக்கும். தமிழ் சினிமாவில் அம்மாவைப் பற்றிய பாடல்கள் வரிசையில் மிக முக்கியமான இடத்தை இந்தப் பாடல் இருக்கும்” என்று தெரிவித்தார்.

தமிழில் ‘கணம்’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘ஒகே ஒக ஜீவிதம்’ என்ற பெயரிலும் அடுத்த ஆண்டு பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.