‘இசைமேதை’ எம். எஸ். சுப்புலட்சுமியின் வாரிசுகளின் குரலில் ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்!

161

சென்னை:

கர்நாடக இசையை ஆன்மாவோடு கலந்து கொடுத்த மாபெரும் இசைக் கலைஞர், மறைந்த பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமி. பக்தி பாடல்களை பாடி நம் கண் முன்னே இறைவனை கொண்டு வந்து நிறுத்திய தெய்வீக குரலுக்கு சொந்தக்காரர். இவர், திருமலை கோவிந்தனுக்கு வெங்கடேச சுப்ரபாதத்தை பாடிய இசைத்தட்டு 1963 ஆம் ஆண்டு வெளியானது. திருமாலின் புகழைப் பாடும் வெங்கடேச சுப்ரபாதம்; திருப்பதி தேவஸ்தானத்தில் ஒலிபரப்பு செய்தது மட்டுமின்றி 1975 ஆம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாக எம்.எஸ். சுப்புலட்சுமி நியமிக்கப்பட்டார்.

இத்தகைய சிறப்புமிக்க வெங்கடேச சுப்ரபாதத்தை இன்றைய தலைமுறையினர் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு செல்லும் நோக்கில் டாப் தமிழ் நியூஸ் யூட்யூப் சேனல் புதிய அத்தியாயத்தை தொட்டுள்ளது. ஏற்கனவே கந்த சஷ்டி கவசத்தை சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா குரலில் வெளியிட்டு 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்த  டாப் தமிழ் நியூஸ் நிர்வாகம், தற்போது ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதத்தை எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின்  கொள்ளு பேத்திகள் எஸ்.ஐஸ்வர்யா மற்றும் எஸ். சௌந்தர்யா ஆகியோர் பாட, மாண்டலின் கலைஞர் ராஜேஷ் இசையில் புதுப்பொலிவுடன் வெளியிட்டுள்ளது.  இசைஞானி இளையராஜா,  ‘ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்’ ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், மாண்டலின் ராஜேஷ், பாடகிகள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா கூறியதாவது:-

“சங்கீத  உலகத்திலேயே மிகவும் உயர்ந்த பேரும் புகழும் பெற்ற எம்.எஸ்.அம்மா அவர்கள் பாடிய வெங்கடேச சுப்ரபாதத்தை  அவரது தலைமுறையாக எம்.எஸ்.அம்மாவின் பேத்திகள் பாடியிருக்கிறார்கள். திரு. ராஜேஷ் அதற்கு இசைக்கருவிகளை இசைத்து அதை மென்மேலும் அழகுப்படுத்தி இருக்கிறார். இதை நான் எப்படி பார்க்கிறேன் என்றால்… எம்.எஸ். அம்மா பாடிய காலத்திலே அவர்களின் குரலை கேட்பதற்காகவே , உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அவரை ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து அவரைப் போற்றிப் புகழ்ந்தார்கள்  என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  ஆனால் இந்த தலைமுறைக்கு,  அவர்களின் சந்ததியிலேயே எம்.எஸ்.அம்மாவின் பேத்திமார்கள்  பாடியிருப்பதும்,  ராஜேஷ் அதற்கு உதவி செய்ததும்,  இந்தத் தலைமுறையினருக்கும்,  தலைமுறை தலைமுறையாக சங்கீதம் செல்ல வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் இருப்பதாகதான், நான் பார்க்கிறேன்.  வருங்கால சந்ததியினருக்கு நாம் கொடுக்காமல் சங்கீதத்தை கையிலேயே  எடுத்துக்கொண்டு போனால், இதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது? அந்த  பணியை செவ்வனே செய்து வரும் எம்.எஸ். அம்மாவின் பரம்பரைக்கு என்னுடைய வாழ்த்தையும், அவர்கள் மென்மேலும் உயர வேண்டும் என்ற பிரார்த்தனையையும்  இறைவனிடம் வைத்துக்கொண்டு,  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள என்னை அழைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொண்டு முடித்து கொள்கிறேன். நன்றி.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பேசும் போது: –

“மிக சிறந்த  எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா பாடிய ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதத்தை தெரியாதவர்கள் இந்த உலகத்தில் யாரும் இருக்க மாட்டார்கள்.  அப்படிப்பட்ட இந்த லெஜெண்டரி சுப்ரபாதத்தை மீண்டும் என்னுடைய நண்பரும், சகோதரருமான ராஜேஷ் ரீஅரேஞ்ச் செய்தது மிகவும் மகிழ்ச்சி. அதில் ஐஸ்வர்யா –  சௌந்தர்யா இருவரும் அழகாக பாடி உள்ளார்கள். இசைஞானி இளையராஜா அவர்கள் சொன்னது போல்  சுப்ரபாதத்தின் இந்த புதிய பரிமாணம் வருகிற தலைமுறைக்கும் செல்ல ஒருவழியாக இருக்கும் என்று நானும்  நம்புகிறேன். இந்த அழகான நிகழ்ச்சியில் நானும் பங்கு கொண்டேன் என்பது மகிழ்ச்சியாக உள்ளது.  ராஜா சார் ஆசியுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆல்பம் மிகப்பெரிய வெற்றியை அடைய வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.  அதேபோல் எங்கள் குரு மாண்டலின் சீனிவாசன் அவர்களின் ஆசியும் எங்களுடன் எப்போதும்  இருக்கிறது”

இசைக்கலைஞர் மாண்டலின் ராஜேஷ் கூறியதாவது: –

“ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்.  சந்தோஷம் என்பதை விட மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக நினைக்கிறேன். எம்.எஸ்.அம்மா பாடிய பாடலில் பணியாற்ற  எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதில் நானும் ஒரு பங்கு வகித்துள்ளேன் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா இருவரும் மிக சிறப்பாக பணியாற்றி உள்ளார்கள்.  அதுமட்டுமில்லாமல் இசைஞானி இளையராஜா அவர்கள் இந்த பாடலை வெளியிட்டது, அவரின் ஆசி கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.  அதேபோல் இசையமைப்பாளர், என் சகோதரர்  தேவிஸ்ரீ பிரசாத் இங்குவந்து நிகழ்ச்சியில் பங்கு கொண்டது எனக்கு மகிழ்ச்சி தருகிறது.  அவர் கூறியது போல  மாண்டலின் சீனிவாசன் அண்ணனின் ஆசீர்வாதம் இங்கு நிறைந்துள்ளது. நன்றி வணக்கம்