பொங்கல் பரிசு தொகுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் 4-ந்தேதி காலையில் தொடங்கி வைக்கிறார்.
சென்னை:
பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 4-ந்தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய் உள்ளிட்ட 20 பொருட்களுடன் முழு கரும்பும் வழங்கப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு ரேசன் கடைகளிலும் பொங்கல் தொகுப்பை ‘துணிப்பை’களில் போட்டு தயார்நிலையில் வைத்துள்ளனர். கரும்பு மட்டும்தான் இன்னும் வரவேண்டி உள்ளது.
2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.1088 கோடி செலவில் வழங்கப்படும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் 4-ந்தேதி காலையில் தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக டோக்கன் வழங்கும் பணியும் நடந்து வருகிறது.
எந்த தேதியில் எந்த நேரத்தில் வாங்க வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய டோக்கன் ஒவ்வொரு வீடாக கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பொங்கல் பரிசு வினியோகம் முடியும் வரை இன்று முதல் 2 வாரங்களுக்கு அவசியமின்றி ரேஷன் அங்காடி ஊழியர்கள் விடுப்பு எடுக்க கூடாது என்று கூட்டுறவுத்துறை அறிவுறுத்தி உள்ளது.