சென்னை.
சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் வழங்க, அர்ஜுன் தியாகராஜன் மற்றும் செந்தில் தியாகராஜன் இருவரது தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அஸ்வின் ராம் இயக்கத்தில், ஹிப் ஹாப் தமிழா ஆதி இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் ‘அன்பறிவு’. இப்படத்தின் கதையை பொறுத்தவரையில் மதுரையில் உள்ள ஒரு கிராமத்தில் அனைவரும் மதிக்கும் விதத்தில் மக்கள் செல்வாக்கோடு வாழ்ந்து வருகிறார் நெப்போலியன். அவரிடம் உதவியாளராக பணிபுரியும் விதார்த், அரசியலில் தனக்கு பதவி கிடைக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். இதனிடையே விதார்த்தும், சாய் குமாரும் நண்பர்களாக பழகும் சமயத்தில் நெப்போலியனின் மகளை காதலிக்கிறார் சாய் குமார். இந்த காதல் விஷயம் நெப்போலியனுக்கு தெரிய வர, முதலில் வெகுண்டெழுந்தாலும், தன் மகள் ஆசைப்பட்ட காரணத்தால் மறுப்பு எதுவும் சொல்லாமல் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார்.
அந்த இளம் தம்பதியருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கின்றது. அவர்களது இரு குழந்தைகளுக்கு அன்பு-அறிவு என பெயர் வைக்கின்றனர். இந்த சூழலில் விதார்த்திற்க்கு கிடைக்க கூடிய அரசியல் பதவி சாய் குமாருக்கு கிடைக்கிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விதார்த், இருவருக்கும் இடையில் செய்யும் சூழ்ச்சியால் நெப்போலியன் குடும்பத்தில் குழப்பம் செய்து சாய் குமாரை பிரிக்கிறார். இதனால் இரு குழந்தைகளும் தனித்தனியே வளர்கிறது. அன்பு என்ற ஒரு குழந்தையை நெப்போலியன் வளர்க்கிறார். சாய் குமார் தன் மனைவியை பிரிந்து ஒரு குழந்தையை எடுத்துக் கொண்டு கனடாவிற்கு சென்று பிசினஸ் செய்து பெரிய ஆளாகிறார். சாய் குமாரிடம் வளரும் குழந்தையான அறிவு மதுரைக்கு வந்து எப்படியாவது இந்த இரு குடும்பத்தையும் ஒன்று சேர்க்கவேண்டும் என்று முயற்சி எடுக்கிறார். கடைசியில் பிரிந்த இரு குடும்பமும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே இப்படத்தின் மீதிக்கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் ஹிப் ஹாப் ஆதி முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருக்ககிறார். அன்பு- அறிவு என இரு வேடங்களில் நடித்திருக்கும் ஆதி, நடிப்பில் எந்த வித்தியாசத்தையும் காட்டவில்லை. ஆட்டம் பாட்டம் என்று எப்போதும் போல இளசுகளை துள்ள வைத்து அசத்தியிருக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் விதார்த்தின் கதாப்பாத்திரமும், நக்கல் கலந்த நடிப்பை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
கமல் நடித்த “தூங்காதே தம்பி தூங்காதே’ சூர்யா நடித்த ‘வேல்’ ஆகிய திரைப்படங்களைப் போன்று கதாபாத்திரங்கள் இருப்பதால், கதையில் அந்த நினைவுகளை நிராகரிக்கும் வகையில் திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி சென்று இருக்கிறார் இயக்குநர் அஸ்வின் ராம்,. தமிழ் சினிமாவில் தொடர்ந்து இடம் பெறும் கதைகளை போன்று இக்கதையும் அமைந்து இருக்கிறது.
ஹிப் ஹாப் ஆதியின் தாத்தாவாக நடித்திருக்கும் நெப்போலியன் முனியாண்டி என்ற கதாபாத்திரத்தில் காட்டும் முரட்டுத்தனமும், கடைசியில் தான் முட்டாள் ஆக்கப்பட்டதை உணர்ந்து வருத்தபடும் காட்சிகளிலும், சிறப்பான, இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மற்றும் இப்படத்தில் ஆதியின் அப்பா வேடத்தில் நடித்திருக்கும் சாய்குமார், அம்மாவாக நடித்திருக்கும் ஆஷா சரத், அர்ஜெய், ரேணுகா, ஆடுகளம் நரேன் என அனைவரும் தங்களது பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.,
ஹிப் ஹாப் ஆதி படத்திற்கு இசையமைத்து இருந்தாலும், பாடலில் அதிக கவனம் செலுத்தவில்லை. ஆனால் பின்னணி இசையை மிக சிறப்பாக அமைத்துள்ளார். இரட்டையர்கள் ஒன்றாக தோன்றும் காட்சியில் நேர்த்தியாக கேமராவை கையாண்டிருக்கும் ஒளிப்பதிவாளர் மகேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலத்தை சேர்த்து இருக்கிறது
மொத்தத்தில் ‘அன்பறிவு’ படம் இளம் ரசிகர்களுக்கு விருந்து.
By,
ராதாபாண்டியன்.
.