“சினம் கொள்” திரை விமர்சனம்!

153

சென்னை.

ஸ்கை மேஜிக் பட நிறுவனம் சார்பில் காயத்ரி ரஞ்சித் மற்றும் பாக்ய லட்சுமி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் பாக்ய லட்சுமி வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து  தயாரித்துள்ள படம் ” சினம் கொள் ”

ரஞ்சித் ஜோசப் இயக்கியுள்ள இப்படம் ஈழ விடுதலை போருக்கு பிறகு இலங்கை தமிழர்களின் வாழ்வியலை பற்றிய படம். ஈழ தமிழ் மக்களின் நிலை மற்றும் அவர்களை சுற்றி நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள படம்தான் ” சினம் கொள் ” யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற இடங்களில் முழுக்க முழுக்க இலங்கையிலேயே  இப்படத்தை  எடுத்திருக்கிறார்கள்.

இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில் எட்டு வருட சிறை தண்டனை அனுபவித்த  பிறகு விடுதலையாகும்  போராளி அரவிந்தன் சிவஞானம், தனது மனைவியை தேடி அலைகிறார். அப்போது அவரது வீடு மற்றும் நிலங்களை இலங்கை ராணுவம் அபகரித்துக்கொள்ள, தங்குவதற்கு இடம் இல்லாமல்,  மனைவி எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் சுற்றி அலைந்த அவருக்கு சில போராளி நண்பர்கள் ஆதரவு கரம் கொடுக்கிறார்கள். அவர்களின் உதவியோடு தனது மனைவி மற்றும் மகளை கண்டுபிடிக்கும் அரவிந்தன் சிவஞானம், அவர்களோடு இணைந்து மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடங்கும் சமயத்தில், ஒரு பெண்ணை கடத்திய கும்பலுடன் தொடர்பு இருக்கிறது என்று இலங்கை காவல்துறையினர் அவரை தேட, அதிலிருந்து அவர் மீண்டாரா..இல்லையா? என்பதுதான் இப்படத்தின் கதை.

இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அரவிந்தன் சிவஞானம், தன் மனைவி குழந்தையை தேடி அலையும் அகதியாக தனது குடும்பத்தினரின் பிரிவினால் ஏக்கத்துடன், தவிக்கும் காட்சியில், தன் கண்களின் பார்வை மூலமாக கேரக்டரின் தன்மையை உணர்ந்து உன்னதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இரண்டாம் பாதியில், தன்னை சுற்றி நடக்கும் சதியில் இருந்து மீள்வதற்காக ஊர் ஆட்களை திரட்டி கடலுக்கு சென்று கடத்தப்பட்ட பெண்ணை மீட்டு தான் கலங்கமற்றவர் என்று நிரூபிக்கும் காட்சிகளிலும். தனது போராளி குணத்தை வெளிக்காட்டும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அரவிந்தனின் மனைவியாக நடித்திருக்கும் நர்வினி டெரி, எட்டு வருடங்களுக்குப் பிறகு தன் கணவனை சந்திக்கும்போது, அவரை கட்டிப் பிடித்து அழும் காட்சியில் நம்மை உருக வைத்து விடுகிறார்.

நண்பரின் மனைவி யாழினியாக நடித்திருக்கும் லீலாவதி, அவரது நடிப்பில் நம் கண்களில் கண்ணீரை வர வைக்கிறார். பிரேம், தீபச் செல்வன், வெளிநாட்டு வாழ் தமிழராக நடித்திருக்கும் தனசெயன், மதுமிதா (வெளிநாட்டு வாழ் ஈழப் பெண்) பாலா  ஆகிய அனைவரையும் கேரக்டருக்கு ஏற்றவாறு  தேர்வு செய்து இருக்கிறார் இயக்குனர் ரஞ்சித் ஜோசப்.

ஈழத் தமிழர்களின் தற்போதைய வலிகளையும், அவர்களது எதிர்ப்பார்ப்புகளையும் பதிவு செய்து இருக்கும் இயக்குநர் ரஞ்சித் ஜோசப், கடைசி கட்ட காட்சியில் அதிர்ச்சி அடைய வைக்கிறார். இந்த படத்தை மிக சிறந்த முறையில் இயக்கி இருப்பதை பாராட்டாமல் இருக்க முடியாது. ஈழத் தமிழர்களின் உணர்வுகளை மிக சிறப்பாக காட்டி இருக்கிறார்.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற இடங்களில் உள்ல பச்சை பசேலென்ற வயல் வெளிகள்,  செம்மண் நிறைந்த தோட்டங்களையும் ஒளிப்பதிவாளர் எம்.ஆர். பழனிக்குமார் மிக அருமையாக காட்சிப்படுத்தி அனைவரையும் ரசிக்க வைக்கிறார். .என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி இருக்கிறது.

மொத்தத்தில், ’சினம் கொள்’ படம் ஈழத் தமிழர்களின் வாழ்க்கை முறையை சிந்திக்க வைத்தாலும், அனைத்து ரசிகர்களையும் ரசிக்க வைக்கும் படமாக இருக்கும்.

BY

RADHAPANDIAN.