சென்னை.
நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஆதார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தமிழர் திருநாளான பொங்கலன்று வெளியிடப் பட்டிருக்கிறது. இதனை இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஆதார்’. இதில் நடிகர்கள் கருணாஸ், அருண்பாண்டியன், ‘காலா’ புகழ் திலீபன், ‘பாகுபலி’ புகழ் பிரபாகர், நடிகைகள் ரித்விகா, இனியா. உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருக்கிறார். பாடல்களை கவிஞர் யுரேகா எழுத, ‘அசுரன்’ புகழ் ராமர் படத்தை தொகுத்திருக்கிறார். தேசிய விருது பெற்ற கலை இயக்குநரான சீனு படத்தின் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். ‘ஆதார்’ படத்தை வெண்ணிலா கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. சசிகுமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,
“எளிய மனிதர்களின் வலியை பேசும் யதார்த்த சினிமாவாக ‘ஆதார்’ உருவாகியிருக்கிறது,” என்றார்.
‘ஆதார்’ தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு நகர்த்தும் என்ற நம்பிக்கையை பட குழுவினர் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதற்கு சான்றாக ‘ஆதார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் முன்னர், உலக அளவில் யதார்த்த சினிமா படைப்பாளியாக போற்றப்படும் இந்திய திரை சிற்பி சத்யஜித்ரேயின் உருவப்படத்தை வெளியிட்டு பெருமைப்படுத்தியிருக்கின்றனர். ‘ஆதார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் பொங்கல் திருநாளான இன்று தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார். ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் கருணாஸின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்து வருவதால் இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
‘திண்டுக்கல் சாரதி’, ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் – நடிகர் கருணாஸ் மீண்டும் ‘ஆதார்’ படத்தில் மூன்றாவது முறையாக இணைந்திருப்பதால், ‘ஆதார்’ ஹாட்ரிக் வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் திரை உலகில் ஏற்பட்டிருக்கிறது. .