சென்னை.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையின்படி தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 29,976 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகம் முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணிவரை இரவு ஊரடங்கு அமலில் உள்ளது. ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.தொற்று பரவல் தொடர்ந்து குறையும் பட்சத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஏற்கனவே அறிவித்திருந்தார். கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெறுகின்றன. இறுதி பருவத்தேர்வு தவிர அனைத்து பருவத்தேர்வுகளும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் முறையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவில்கள், வழிபாட்டுத்தலங்களில் வெள்ளி, சனி ஞாயிற்றுக்கிழமைகளில் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா தொற்றின் நிலை குறித்தும், தமிழகத்தில் மேலும் தளர்வுகளை அனுமதிக்கலாமா? என்பது பற்றியும் ஆய்வு செய்வதற்காக சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டம், தலைமைச்செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் நடைபெறுகிறது. இதில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்புகளை வெளியிடுகிறார்.