சென்னை.
மதுரைக்கு அடுத்த உசிலம்பட்டியில் உள்ள அய்யனார்பட்டி கிராமத்தில் வாழும் விவசாயி நல்லாண்டி. அவரது மகன் விஜய்சேதுபதி. தனது முறைப்பெண் இறந்ததை தாங்க முடியாமல் மனஉளைச்சல் ஏற்பட்டு, அவளது நினைவாக எதை சாப்பிட்டாலும் இரண்டு பங்காக வைத்து இரண்டு பைகளை கையில் சுமந்துக் கொண்டு முருக கடவுளை வணங்கி மன உளைச்சல் ஏற்பட்டு ஊர் சுற்றுகிறார் விஜய் சேதுபதி. என்றாதாவது ஒரு நாள் தன் தந்தையை பார்க்க வந்து செல்வார். நல்லாண்டிக்கு வயதானாலும் அதைப்பற்றி கவலை படாமல், விவசாயம்தான் முக்கியம் என்று தனது இரண்டு மாடுகளை ஓட்டிச் சென்று தனது நிலத்தில் ஏர் உழுது நெல் பயிர்செய்து தனி ஆளாக அனைத்து வேலைகளையும் செய்து ஊரில் நல்ல மனிதராக, யார் வம்புக்கும் செல்லாமல் நல்லாண்டி தன் பணிகளை செவ்வனே செய்து வாழ்ந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் அந்த கிராமத்தில்ஒரு ஆலமரம் இடி, மின்னல் தாக்கி கருகி போகிறது.
இதனால் அந்த கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து பதினைத்து வருடங்களாக தங்களது குலசாமி கோயில் திருவிழா நடக்காததால்தான் ஆலமரம் கருகி விட்டது என் கருதி ஊர் பெரியவர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்கின்றனர். இதற்காக சுற்று வட்டார கிராம பெரியவர்களிடம் திருவிழாவிற்கு தேவையான விவசாயத்தால் விளைந்த பொருட்களை சாமிக்கு படைக்க தருமாறு வேண்டுகின்றனர். இந்த சூழலில் விவசாயி நல்லாண்டியிடம் கிராம பெரியவர்கள் கோயில் திருவிழாவுக்கு நெற்மணிகளை விளைவித்து படைக்க கொடுக்குமாறு சொல்ல, அவரும் அதற்காக தன் நிலத்தில் பயிரிட முற்படுகிறார். நல்லாண்டி தனது நிலத்தில் ஏர் உழுது நாற்றை நட்டு காத்திருக்கிறார். இச்சமயத்தில் அவரது நிலத்திற்கு அருகில் மூன்று மயில்கள் இறந்து கிடப்பதை பார்த்து, பரிதாபப்பட்டு அந்த மயில்களை தன் நிலத்தின் அருகே புதைத்து விடுகிறார். இந்த தகவல் போலீசிற்கு தெரிய, போலீஸ் நல்லாண்டியை விசாரணைக்காக அழைத்து செல்கிறது.
அந்த மயில்களை நல்லாண்டி தான் கொன்றார் என்று காவல் நிலையத்தில், அவர் மீது வழக்கு போட்டு விடுகின்றனர். இந்த வழக்கு நீதிபதி ரேய்சலிடம் விசாரணைக்கு வருகிறது. நீதிபதிக்கு நல்லாண்டி எந்த தப்பும் செய்யவில்லை என்பதை தெரிந்தாலும் வழக்கை பதிவு செய்து இருப்பதால், பதினைந்து நாள் காவலில் வைக்க உத்திரவிடுகிறார். இந்த சூழ்நிலையில் நிலத்தில் விளையும் பயிரை நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று போலீஸ் ஏட்டுவுக்கு கட்டளையிடுகிறார். சிறையில் இருக்கும் நல்லாண்டி தன் உறவினர்களிடம் நெற்பயிர்கள் நன்கு வளர இயற்கை முறையில் உரம் தயாரித்து தெளிக்க சொல்கிறார். ஆனால் அவர்கள் கடையில் செயற்கை உர மருந்தை கலந்து அடிக்க, பயிர்கள் நாசமாகிவிடுகிறது. சிறையிலிருந்து விடுதலை பெறும் நாளில் பயிர்களை பார்க்க வரும் நல்லாண்டி பயிர்கள் வாடி நாசமாகிவிட்டதை அறிந்து வருந்துகிறார். அதன் பிறகு நல்லாண்டி கோயில் திருவிழாவிற்கு நெற்மணிகளை அறுவடை செய்து கொடுத்தாரா? குலதெய்வ திருவிழா சிறப்பாக நடந்ததா? என்பதே மீதிக்கதை.
விவசாயி மாயாண்டி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் நல்லாண்டி என்ற முதியவவர் உண்மையில் மிகவும் பாராட்டக் கூடியவர். மிக தத்ரூபமாக தன்னிடம் உள்ள இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மதுரை கிராமத்து மொழியில் பேசும் வசனங்கள், தன் மகனிடம் மனம் விட்டு பேசுவது, நீதிபதிடம் எப்பொழுதும் வீட்டுக்கு போகலாமா? என்று கேட்பது, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் கோயில் திருவிழாவிற்கு நெற்பயிர் வாடி விட போகிறது என்ற கவலை கொள்ளும் என ஒவ்வொரு சொல்லும் செயலும் யதார்த்தமாக மதுரை கிராமத்து மொழியில் வசனம் பேசி நடித்து இருக்கிறார்.
ராமையாவாக விஜய்சேதுபதி இப்படத்தில் நடித்து இருந்தாலும், அவரது நடிப்பை ரசிக்க முடியவில்லை. அதே போல் யோகிபாபு யானை உரிமையாளராக வரும் காட்சியை தேவையில்லாமல் புகுத்தி இருக்கிறார்கள்.
நீதிபதி மங்கையர்கரசியாக ரேய்ச்சல் ரெபேக்கா, அவரது கதாபாத்திரத்திற்க்கு பொருத்தமான தேர்வு. அவரது வசன உச்சரிப்பு, போலீசிடம் கண்டிப்புடன் கட்டளையிடுவது, அக்கறையாக நல்லாண்டியிடம் பேசுவது, இறுதிக்காட்சியில் உதவி செய்வது என்று நம் மனதில் பதிந்து மிகச் சிறப்பாக நடித்துள்ளார். உப்பு தோசையாக டி.முனீஸ்வரன், சொட்டையனாக ஜி.காளிமுத்து, மூக்கனாக சாப்ளின் சுந்தர், ஏட்டாக காளைப்பாண்டியன் என்ற ஒவ்வொருவரும் அவரவர் கிராமத்து கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன், ரிச்சர்ட் ஹார்லி இசையை ரசிக்கலாம்.கலை இயக்குநர்-தோட்டாதரணி கிராம சூழ்நிலையை நம் கண் முன் நிறுத்தியுள்ளார்.
கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் மணிகண்டன். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிகச் சிறப்பாக தேர்வு செய்து செதுக்கியிருக்கிறார். அந்த கிராமத்தில் உள்ல இயற்கை எழிலையும், மலைகளையும், கிராமத்து வீடுகளையும், ஆடு, மாடு, மயில், யானை என தனது ஒளிப்பதிவு மூலம் பல கோணங்களில் ரசிக்க வைத்து இருக்கிறார் மணிகண்டன். இப்படம் அனைவராலும் பேசப்படும் படமாக இருக்கும். இவரின் கடின உழைப்பிற்கும், முயற்சிக்கும் கண்டிப்பாக பல விருதுகள் கிடைக்கும் என்பது உறுதி.
மொத்தத்தில் “கடைசி விவசாயி” அனைத்து ரசிகர்களும் பார்த்து ரசிக்க வேண்டிய படம்.
இதற்கு ரேட்டிங் 4/5.
By:
RADHAPANDIAN.