சென்னை.
திரைப்பட விநியோகத்தில் வெற்றிக்கொடி நாட்டிய ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட், இருட்டு, தாராள பிரபு, எம்ஜிஆர் மகன் ஆகிய ஹிட் படங்களை தயாரித்ததன் மூலம் திரைப்படத் தயாரிப்பிலும் தடம் பதித்தது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இடியட், சாணி காயிதம் படங்கள் வெளியீட்டுக்கு தயராகி வருகின்றன. இந்நிலையில், ஜெயம் ரவி நடிப்பில் மூன்று திரைப்படங்களை தயாரிக்கும் ஸ்கிரீன் சீன், அவற்றில் முதல் படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வையை இன்று வெளியிட்டுள்ளது. அகிலன் என்று இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில்’ பூலோகம்’ திரைப்படத்தை இயக்கிய என். கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் இதுவரை ஏற்றிராத வேடத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். பிரியா பவானிஷங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நாயகிகளாக நடிக்கின்றனர். பிரமாண்ட பொருட்செலவில் இப்படம் தயாராகி வருகிறது. துறைமுகத்தை மையமாகக் கொண்ட இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் தூத்துக்குடியிலும், சில முக்கிய காட்சிகள் சென்னை காசிமேட்டிலும் படமாக்கப்பட்டுள்ளன. 80 சதவீதத்திற்கும் அதிகமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் குஜராத்தில் உள்ள மிகப்பெரிய கண்டெய்னர் தளத்தில் நடைபெறவுள்ள படப்பிடிப்புடன் ஷீட்டிங் நிறைவடைகிறது.
முழுக்க துறைமுக பின்னணியில் உருவாகியுள்ள அகிலன், தமிழ் திரையுலகில் புதுமையாக முயற்சியாக இருக்கும் என்றும் ஜெயம் ரவியின் கதாபாத்திரமும், நடிப்பும் பெரிதும் பேசப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். ஜெயம் ரவியின் இருபத்தி எட்டாவது படமான அகிலனுக்கு சாம் சி எஸ் இசை அமைக்கிறார். விவேக் ஒளிப்பதிவை கையாள, விஜய் முருகன் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்றுள்ளார்.
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் என் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் இதுவரை ஏற்றிராத வேடத்தில் ஜெயம் ரவி நடிக்கும் அகிலன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வருட கோடை காலத்தில் படம் வெளியாகிறது.