எதையாவது பேச வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க. தொடர்ந்து தி.மு.க. மீது குற்றம்சாட்டி வருகிறது… திருநாவுக்கரசர் எம்பி பேச்சு!

144

சென்னை:

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் அடங்கியுள்ள வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருநாவுக்கரசர் எம்.பி. இன்று பிரசாரம் செய்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய முதல்-அமைச்சர்களுக்கு எல்லாம் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறார். ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டு கூட ஆகவில்லை அதற்குள் நாட்டிலேயே சிறந்த முதல்-அமைச்சர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். அவரது மக்கள் சேவைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யுங்கள். எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தால் வெளிநடப்பு, கூச்சல், குழப்பம், போன்றவை தான் நடக்கும். ஆனால் காரியம் நடக்க வேண்டுமென்றால் திமுக கூட்டணியின் வேட்பாளர்களை தேர்வு செய்யுங்கள்.

இன்னும் நாலரை ஆண்டு காலம் ஆட்சி உள்ளது. ஆட்சியின் துணை கொண்டு மக்கள் பணிகளை நிறைவேற்ற நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறுவது மு.க.ஸ்டாலின் நல்லாட்சிக்கு கொடுக்கும் அங்கீகாரமாகும்.

தேர்தல் நேரத்தில் எதையாவது பேச வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க. தொடர்ந்து தி.மு.க. மீது குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் ஆட்சி பீடத்தில் இருந்து அ.தி.மு.கவை அகற்றி நல்லாட்சியை கொண்டு வந்த தமிழக மக்கள் எல்லாவற்றையும் அறிவார்கள். 2024 பாராளுமன்ற தேர்தலுடன் சட்ட மன்றத் தேர்தலும் சேர்ந்தே வரும் என்று ஓபிஎஸ் சொல்வது தேர்தலுக்காக தான்.இப்போதைக்கு அவ்வாறு ஒரே நேரத்தில் தேர்தல் வருவதற்கான சாத்தியம் இல்லை. எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் செயல்களை தான் மத்தியில் ஆளும் பா.ஜ.க. செய்து கொண்டிருக்கிறது. மேற்குவங்காளத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி நடக்கிறது. அங்குள்ள சட்டமன்றத்தை முடக்கி வைத்திருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் இவை எல்லாவற்றிற்கும் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.