ரவுடி பிக்சர்ஸ் சார்பில் குஜராத் மொழியில் தயாரிப்பாளர்களாக தங்கள் பயணத்தை துவங்கும் நயன் தாரா & விக்னேஷ் சிவன்!

134

சென்னை.

ரவுடி பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்கள் நிறுவனம் மூலம் தரமிக்க படங்களை வழங்கி  பெரும் பாராட்டுக்களை குவித்து  வருகின்றனர். ‘நெற்றிக்கண்’, ‘கூழாங்கல்’, ‘ராக்கி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து  தமிழ்த் திரையுலகில் மேலும்  படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இப்போது இந்த தயாரிப்பு நிறுவனம், மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் ரித்திகா சிங் முக்கிய வேடங்களில் நடித்த, ‘ஆண்டவன் கட்டளை’  என்ற தமிழ் திரைப்படத்தை அதிகாரப்பூர்வ ரீமேக்கான ‘சுப் யாத்ரா’ என்ற பெயர் மூலம் குஜராத்தி சினிமாவில் அதன் பயணத்தை துவங்கவுள்ளது. இந்த ரீமேக் திரைப்படத்தில் குஜராத்தி சூப்பர் ஸ்டார் மல்ஹர் தாக்கர் மற்றும் மோனல் கஜ்ஜர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.

இத்திரைப்படத்தை  குஜராத்தி திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குநர் மனிஷ் சைனி இயக்குகிறார். தயாரிப்பாளர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இப்படம் மூலம் ஒரு புதிய பயணத்தைத் தொடங்குவதில் மகிழ்ச்சி என்றும், மேலும் குஜராத்தி திரையுலகில் தொடர்ந்து திரைப்படங்களைத் தயாரிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள். தற்போது, ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம், தமிழ் சினிமாவில் பல முக்கிய திரைப்படங்களின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது, அவை தயாரிப்பின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன. அவர்களின் தயாரிப்பில்  விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ‘கூழாங்கல்’ (Pebbles) ஏற்கனவே ஆஸ்கார் விருதுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவு உட்பட சர்வதேச அங்கீகாரங்களை பெற்றுள்ளது.  இத்தயாரிப்பு நிறுவனத்தின் மற்றொரு திரைப்படமான ‘ராக்கி’ அதன் மாறுபட்ட  அழுத்தமான கதை சொல்லலுக்காக பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிறுவன தயாரிப்பில்  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் ஏப்ரல் 28, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் நயன்தாரா, சத்யராஜ், அனுபம் கெர் ஆகியோர் நடிப்பில்  அஷ்வின் சரவணன் இயக்கத்தில் பரபர திகில் படமான  ‘கனெக்ட்’,  மற்றும் சூரரைப் போற்று புகழ் கிருஷ்ண குமார், பின்னணிப் பாடகி ஜோனிதா காந்தி, பிரபல கிரிக்கெட் வீரர் தீபக் சாஹரின் சகோதரி மால்தி சாஹர் ஆகியோர் நடிக்க, அறிமுக இயக்குனர் விநாயக் இயக்கும் “வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்” என்ற ரோம்-காம் திரைப்படமும் தயாரிப்பில் உள்ளது. மேலும் அறிமுக இயக்குனர் அருண் இயக்கத்தில் கவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ஊர்குருவி’ படமும் பரபரப்பாக உருவாகி வருகிறது.