முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்ன ஜனாதிபதி, பிரதமர், மற்றும் கட்சித் தலைவர்கள்!

182

சென்னை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, “தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நீங்கள் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உங்களுக்கு நீண்ட பொதுவாழ்வு அமைய வேண்டும்” என்று வாழ்த்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.“தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நீங்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்” என்று தமது விருப்பத்தை மோடி தெரிவித்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “தங்களின் ஒத்துழைப்புடன் நான் தொடர்ந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைப்பேன்” என உறுதியளித்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தொலைபேசியில் தொடர் கொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அதில் “தாங்கள் இளமையாக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறி, தமிழில் தனது வாழ்த்துக்கள்” என்று தெரிவித்தார். டெல்லியில் இருக்கும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். பூங்கொத்தும், வாழ்த்து கடிதமும் கொடுத்து அனுப்பி இருந்தார்.

தெலங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி துணை நிலை ஆளுனருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், “கேரள-தமிழக உறவினை மேலும் மேம்படுத்த வேண்டும்” என்று கூறி மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மு.க.ஸ்டாலினிடம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு டுவிட்டரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மக்களுக்கு சேவை செய்ய இறைவன் அருள் புரியட்டும்” என்று கூறியுள்ளார்.

திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகரான’ நமது முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று 69-ம் ஆண்டு பிறந்த நாள். இந்த ‘69’ என்பது ஒரு தனித்தன்மையானது.இந்தியா முழுவதிலும் சமூகநீதிக்கான களமாக ஆக்கிட அவர் எடுத்த முயற்சிகள் வெல்லட்டும்! ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரலாய் என்றும் திகழட்டும். திராவிடர் பாரம்பரியம் எனது என்றும், பெரியார் ஆட்சிதான் தனது ஆட்சி என்றும், என்றென்றும் அண்ணாவும், கலைஞரும் தான் தனது வழிகாட்டி ஆசான்கள் எனவும் பிரகடனப்படுத்தத் தயங்காத திராவிடத்துத் தீரர் அவர்” என்று கூறி உள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் தெரிவித்தனர். நடிகர் ரஜினி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “இன்று பிறந்தநாள் காணும் இனிய நண்பரான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தியில், “மனதிற்குகந்த நண்பர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் காண்கிறார். எதிர்ப்போர் கருத்துக்கும் இடமளித்து, தன் எண்ணத்துக்கும், செயலுக்கும் வலு கூட்டி செயல்படும் அவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்து. நீடு வாழ்க” என்று தெரிவித்துள்ளார்.

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் 69-வது பிறந்த நாளில் அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பொது வாழ்க்கை சிறக்க வேண்டும். அவர் நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரனும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.