’எதற்கும் துணிந்தவன்’ திரை விமர்சனம்!

127

சென்னை.

தென்னாடு என்ற பகுதிக்கும், வடநாடு  என்ற பகுதிக்கும் இடையில்   சுமுகமாக பெண் கொடுத்து பெண் எடுக்கும் பழக்கம் இருந்த சமயத்தில்,  வடநாடு குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட தென்னாடு பெண் தற்கொலை செய்து கொள்ள,  இரண்டு ஊர்களிலும்  பகை ஏற்பட்டு தென்னாடு பெண்களை வடநாட்டில் திருமணம் செய்து கொடுக்கக்கூடாது  என்ற முடிவு செய்கிறார்கள்.  இதனால் இரு ஊர் களிலும் எந்த விழாக்களும் நடைபெறாமல் போகிறது. இந்த சூழ்நிலையில் ஊரில் சில பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். தென்னாடு பகுதியில் வழக்கறிஞராக  இருக்கும் சூர்யா, பெண்கள் கொலை செய்யப்படும் காரணத்தை கண்டுபிடிக்க தீவிரம் காட்டுகிறார்.

இந்த கொலைகளுக்கு காரணமானவர்களை தக்க ஆதாரத்துடன் பிடிக்க தருணம் பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில்,  வடநாடில் உள்ள பிரியங்கா மோகனை காதலித்து பல எதிர்ப்புகளுக்கு பிறகு சூர்யா திருமணம் செய்கிறார். வடநாடு பகுதியில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக இருக்கும் வினய். தன் தொழில் சம்பந்தமாக பல ஒப்பந்தங்களை முடிக்க,  தன் கட்டுப்பாட்டில் ஒரு பெரிய கும்பலை தயார் செய்து பெண்களை காதலிப்பது போல் நயவஞ்சகமாக ஏமாற்றி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வீடியோ எடுத்து மிரட்டி பணிய செய்து, மறுக்கும்  பெண்களை கொலை செய்து தன் அரசியல் அதிகாரத்தால் மூடி மறைத்து காரியத்தை சாதித்து கொள்கிறார். பெண்களை வினய் எதற்காக கொலை செய்கிறார். அதற்கான காரணம் என்ன என்பதை சூர்யா கண்டுபிடித்து வினய்க்கு தண்டனை வாங்கி கொடுத்தாரா? இல்லையா?என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் கண்ணபிரான் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சூர்யா, “ஜெய்பீம்” படத்திற்க்குப்  பிறகு  திரையரங்கில் அவருடைய படத்தை மக்கள் அனைவரும் பார்க்கும் வண்ணம் சமூக அக்கறை கொண்டு கமர்ஷியல் படமாக காதல், ஆக் ஷன் செண்டிமென்ட்  கலந்து, சிறப்பான  நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக சண்டைக்  காட்சிகளில் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி யிருக்கிறார். பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் சொல்லும் விதத்தில் வசனம் பேசும் சூர்யா, ஆண் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும்..என்ற அறிவுரைகள் மூலம் சமூகத்திற்கு சரியான சாட்டையடி கொடுத்திருக்கிறார்.

ஆதினியாக நாயகியாக வலம் வரும் பிரியங்கா மோகன்  வெகுளித்தனமான நடிப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். பிற்பாதியில் நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார்.  துறுதுறு காதலியாக,  வேதனையை வெளிப்படுத்தும் மனைவியாக இரண்டிலும் சரிசமமாக பங்களிப்பை கொடுத்து இருப்பதை பாராட்டலாம்.   இப்படத்தில் இவரது நடிப்பைக் கண்டு தொடர்ந்து பல தயாரிப்பாளர்கள் கால்ஷீட்டிற்காக  காத்திருக்க வாய்ப்பு உண்டு.

வினய் ஸ்டைலிஷ் வில்லனாக மிக கொடூரமான கதாப்பாத்திரத்தின் நடித்திருக்கிறார். எந்தவித  ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு படத்திற்கு பெரிய பலமாக,  அவரது வில்லத்தனம் அமைந்திருக்கிறது. சூர்யாவின் அப்பா, அம்மாவாக நடித்திருக்கும் சத்யராஜ்-சரண்யா பொன்வண்னன் இருவரும் அவர்களது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு  அளவான நடிப்போடு வலு  சேர்த்திருக்கிறார்கள். மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இளவரசு, தேவதர்ஷினி, எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி ஆகியோரது நடிப்பும் சிறப்பு.

சமீபத்தில் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமையை இரண்டு ஊர்களின் பிரச்னையாக மையப்படுத்தி,  அதில் பெண்கள் எவ்வாறு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை,  சமூக  பிரச்சனைகளைப்பற்றி பேசி இயக்கி இருந்தாலும், அதை குடும்பத்தோடு பார்க்க கூடிய முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக கையாண்டிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்,

டி.இமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி இருக்கிறது.. பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு ஏற்றபடி பெரிதும் உதவியிருக்கிறது.

ரத்தினவேலு ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தையும்  பிரமாண்டமாக காண்பித்து பிரமிக்க வைத்தாலும், கண்களுக்கு குளிச்சியை கொடுத்து இருக்கிறார்.

மொத்தத்தில், ’எதற்கும் துணிந்தவன்’ ரசிக்க வேண்டிய படம் மட்டும் இல்லாமல் பெண்களுக்கு முக்கியத்துவம்  வாய்ந்த படம்.

ரேட்டிங் 3.5/5.

BY,

RADHAPANDIAN.