காதலின் வலிமையை இசையால் உணர்த்தும் சிங்கிள் ஆல்பம் ‘அமோர்’

139

சென்னை.

சுயாதீன இசை கலைஞர்கள் பிரணவ் ஆதித்யா மற்றும் சஞ்சய் பிரசாத் ஆகியோரின் இசையில் உருவான ‘அமோர்’ எனும் வீடியோ இசை ஆல்பத்தை திரையிசை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களான அனிரூத் மற்றும் ஜிப்ரான் இன்று வெளியிட்டனர்.

சரிகம நிறுவனத்திற்காக பி ரெடி பிலிம்ஸ் சார்பில் டோங்லி ஜம்போ தயாரித்திருக்கும் வீடியோ இசை ஆல்பம் ‘அமோர்’. இந்த வீடியோ இசை ஆல்பத்தில், சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் அனிரூத்துடன் பாடிய இசைக்கலைஞர் ஆதித்யா ஆர். கே. மற்றும் நடிகை ஆலியா ஹயாத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சஞ்சய் பிரசாத்தின் இளமை ததும்பும் வரிகளை நாயகனாக நடித்திருக்கும் ஆதித்யா ஆர்.கே சொந்தக்குரலில் பாடியிருக்கிறார். சங்கர்ராஜா மற்றும் எஸ். நவீன் குமார் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். இதனை எஸ் பி என் சத்திய நாராயணன் இயக்கியிருக்கிறார்.

‘அமோர்’ வீடியோ இசை ஆல்பம் குறித்து இயக்குநர் எஸ் பி என். சத்யநாராயணன் பேசுகையில், ” ‌இளைஞர்களின் கனவு உலகத்தில் எப்பொழுதும் காதல் பற்றிய சிந்தனை சிறகடித்துக் கொண்டே இருக்கும். ‘அமோர்’ என்றால் காதல். இந்த இசை ஆல்பத்தில் காதலன் காதலியை சந்தித்து தன் காதலை ஏற்றுக் கொள்ளும்படி தெரிவிக்கிறான். நாயகனின் காதலை ஏற்றுக் கொண்ட காதலி, அவனுடைய நேர்த்தியான நேர்மையால், பேரன்பு கொண்டு, காதலனை தன்னுடைய உடைமையாக கருதுகிறாள். இதனால் காதலர்களிடையே பிரிவு ஏற்படுகிறது. அதன்பின் அவர்கள் காதலின் வலிமையால் மீண்டும் இணைந்தார்களா? இல்லையா? என்பதை இனிமையான இசையின் பின்னணியில், அழகான காட்சிகளின் ஊடே  சொல்லி இருக்கிறோம். காதலைப் பற்றிய எங்களது கற்பனை படைப்பை பார்வையாளர்களிடத்திலும், ரசிகர்களிடத்திலும் சென்றடைய செய்த சரிகம நிறுவனத்தின்  அனந்தராமன் மற்றும் சிவபாலன் ஆகியோருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

இதனிடையே இந்த வீடியோ இசை ஆல்பத்தை தயாரித்திருக்கும் பி ரெடி பிலிம்ஸ் நிறுவனம், தொடர்ந்து வீடியோ இசை ஆல்பங்களை தயாரித்து வெளியிடுவதிலும், ஆதித்யா ஆர்.கே போன்ற இசை கலைஞர்களையும், பின்னணி பாடகர்களையும் நடிகர்களாக வீடியோ இசை ஆல்பத்தில் அறிமுகப்படுத்துவதையும் இலக்காகக் கொண்டு இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.