சென்னை.
ஒரு பிரபல பத்திரிகையில் நேர்மையான உண்மையான பத்திரிகையாளராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார் ராம்கி. இந்த சூழ்நிலையில் அரசியல்வாதிகள் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டி , உண்மையான செய்தியை அவரது பத்திரிக்கையில் போட்டதற்கு எதிரிகள் அவரை கொன்று விடுகின்றனர். இந்த சூழ்நிலையில் அவரது மனைவியும் கர்ப்பமுற்று குழந்தை பிறக்கும் சமயத்தில் இறந்துவிடுகிறார். தாய் தந்தை இல்லாமல் தனுஷ் தன் தங்கையுடன் தாய்மாமா ஆடுகளம் நரேன் பராமரிப்பில் வளர்கிறார். தன் தங்கையை படிக்க வைத்து காப்பாற்றி, பிறகு தனது தந்தையை போல நேர்மையான உண்மையான பத்திரிகையாளராக பணிபுரிந்து வருகிறார் தனுஷ்.
இந்த சூழ்நிலையில் தனுஷ் அரசியல்வாதியான சமுத்திரகனி செய்யும் அரசியல் குற்றங்களை தனது பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டு அம்பலப்படுத்துகிறார். இதனால் கோபமடையும் சமுத்திரக்கனி தனுஷை பழிவாங்க நினைக்கிறார். சமுத்திரக்கனியின் ஆட்கள் தனுசை கொள்வதற்கு முயல்கின்றனர். இவற்றையெல்லாம் எதிர்த்து நின்று சமுத்திரகனியிடம் இருந்து தனுஷ் வெற்றி பெற்றாரா..அல்லது சமுத்திரக்கனி தனுஷை பழிவாங்கினாரா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் தனுஷ், பத்திரிகையாளர் மாறனாக முதல் பாதியில் இளமை துள்ளலுடன் நடித்தாலும், அவரது நடிப்பில் தெளிவு இல்லாமல் தடுமாற்றத்துடன் இருப்பது ஒன்றும் புரியவில்லை. எந்த கதாபாத்திரம் என்றாலும் சுறுசுறுப்பாக நடிக்கும் தனுஷ், இப்படத்தில் எந்தவித ஆர்ப்பாட்டம் இல்லாமல் சாதுவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தங்கையுடன் பாசமுடன் பழகும் காட்சிகளில் நடிப்பில் பளிச்சிடுகிறார்.
கதாநாயகியாக வரும் மாளவிகாமோகனன் மாடர்ன் பெண்ணாக நடித்தாலும், கொடுத்த பணியை சிறப்பாக செய்து தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். தனுஷின் சகோதரியாக நடித்திருக்கும் ஸ்ம்ருதி வெங்கட் துறுதுறுவென்று தன் நடிப்பால் அனைவரையும் கவர்ந்து விடுகிறார். அரசியல்வாதியாக வரும் சமுத்திரக்கனிக்கு நடிப்பில் பெரிய ஸ்கோர் இல்லை. தாய்மாமாவாக ஆடுகளம் நரேன், தந்தை ராம்கி, ஜெயபிரகாஷ், இளவரசு, யூடியூபர் பிரசாந்த், மாஸ்டர் மகேந்திரன், போஸ் வெங்கட் ஆகியோர் கொடுத்த பணியை சிறப்பாக செய்துள்ளனர்.
அண்ணன், தங்கை பாசம், அப்பா, மகள் பாசம், திரில்லர் என கலந்து கதை இருந்தாலும், ஒரு மோசமான அரசியல்வாதியை எதிர்க்கும் சாதாரண பத்திரிகையாளரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை, மையமாக வைத்து படத்தின் திரைக்கதையை ஷர்பு மற்றும் சுஹாஸ் அமைத்து இருந்தாலும், அதை விறுவிறுப்பு இல்லாமல் காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குனர் கார்த்திக் நரேன்..பழைய கதையை, மெருகுபடுத்தி இருப்பதால் அழுத்தமாக பதிவு செய்ய முடியாமல் தவித்து இருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷின் இசையில் ‘பொல்லாத உலகம்’ பாடல் மனதில் நிற்கிறது. பின்னணி இசையும் மனதில் பதியவில்லை என்றாலும், படத்திற்கு முடிந்தவரை பலம் சேர்த்திருக்கிறது. விவேகானந்த் சந்தோஷம் ஒளிப்பதிவை சிறப்பாக செய்து ரசிக்க வைத்து இருக்கிறார்..
மொத்தத்தில் “மாறன்” படம் தனுஷ் ரசிகர்களை ஏமாற்றி விட்டது.
ரேட்டிங் 3/5
RADHAPANDIAN.