மதியழகன் தயாரிப்பில் சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் “கள்ளன்” திரைப்பட இசை வெளியீட்டு விழா!

152

சென்னை.

Etcetera Entertainment சார்பில் தயாரிப்பாளர் மதியழகன் தயாரிப்பில் இயக்குநர் சந்திரா தங்கராஜ் இயக்கத்தில்,  கரு பழனியப்பன் ஹீரோவோக நடித்துள்ள படம் ‘கள்ளன்’.  கிராமிய தளத்தில் மாறுபட்ட ஒரு படைப்பாக உருவாகியுள்ளது இப்படம். அனைத்து பணிகளும் முடிந்து, மார்ச் -18 அன்று திரையரங்குளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில்  படக்குழுவினர், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்

தயாரிப்பாளர் மதியழகன் பேசியதாவது:

ஒரு பெரிய போராட்டத்திற்கு பிறகு கள்ளன் வெளிவரவுள்ளது, இந்தப்படம் இவ்வளவு நிறைவாக உருவானதற்கு என் குழுவினர் தான் காரணம், அனைவருக்கும் நன்றி. சந்திரா மேடம் பரபரப்பான, நேர்மையான மனிதர். அவரது நேர்மையால் அவருக்கு நிறைய கோபம் வரும், ஆனால் படத்தை நன்றாக எடுத்துள்ளார். நீண்ட நாட்கள் படம் எடுத்துள்ளோம் படம் நன்றாக வந்துள்ளது. ஒரு எழுத்தாளரை இயக்குநராக மாற்றியிருக்கிறேன், இந்த படத்தின் ஆடியோ ரைட்ஸ் 4 லட்சம் ரூபாய்க்கு விற்றது, அதனை  நா முத்துக்குமார் குடும்பத்திற்கு அளிப்பது  பெருமை, எங்களுக்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

இசையமைப்பாளர் கே பேசியதாவது:

கள்ளன் உடைய பயணம் மிக நீண்ட வருடங்களை கடந்துள்ளது, இந்த இடைவெளியில் நாங்களே நிறைய வளர்ந்திருக்கிறோம், இதில் வித்தியாசமாக நிறைய முயற்சிகள் செய்துள்ளோம். இந்தபடத்தில் வாய்ப்பு தந்த சந்திரா மேடம் மற்றும் என்னுடன் பணிபுரிந்த குழுவினருக்கு நன்றி. உங்களுக்கு கண்டிப்பாக படம் பிடிக்கும்.

நடிகர் நமோ நாரயணன் பேசியதாவது:

‘கள்ளன்’ படம் நிறைய போராட்டத்தை தாண்டி வந்துள்ளது என்றார்கள், கொரோனாவையே தாண்டி வந்துள்ளோம் எல்லா போராட்டத்தையும் தாண்டி தான் வரவேண்டும். சந்திரா மேடம் எல்லாவற்றையும் தாண்டி அற்புதமான படத்தை எடுத்துள்ளார் அவருக்கு தூணாக சுந்தர் சார் பின்னால் இருந்துள்ளார். கரு பழனியப்பனும் நானும் நண்பர்கள் அவருடன் இந்தப்படத்தில் நடித்தது சந்தோசம், இது ஒரு பீரியட் படம் என்பதால் இந்த படம் தாமதமான உணர்வை தராது. இந்தப்படம் வர இதுவே சரியான தருணம் என நான் நினைக்கிறேன். அனைவரும் இந்தப்படத்தில் நன்றாக உழைத்துள்ளார்கள், இந்தப்படம் பெரு வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

இயக்குநர் ராஜு முருகன் பேசியதாவது:

ஒரு சின்ன படத்திற்கும் பெரிய படத்திற்கும் ஒரே ஒரு ஷோ தான் வித்தியாசம், அந்த இடைவேளையில் சின்ன படம் பெரிய படமாகிவிடும், பெரிய படம் சின்ன படமாகிவிடும், இந்தப்படம் கண்டிப்பாக பெரிய படமாக மாறும், சந்திரா மேடத்தை பத்திரிக்கையில் வேலை பார்த்த நாள் முதல் தெரியும், அவரின் சினிமா கனவும், அவரது போராட்டமும் எனக்கு தெரியும். அவர் படத்தில் பாடல் எழுத வாய்ப்பு தாருங்கள் என்று கேட்டிருக்கிறேன். அவர் ஒரு காதல் படம் எடுப்பார் என தான் நினைத்து கொண்டிருந்தேன், ஆனால் அவர் எழுதிய திரைக்கதையே என்னை அதிர்ச்சியடைய வைத்தது, மிக வித்தியாசமான ஒரு படைப்பாக இதை உருவாக்கியிருந்தார். பெண்களால் முடியாது எனும் பொதுபுத்தி இன்னும் மாறவில்லை, அதை இந்தப்படம் மாற்றும் என நான் நம்புகிறேன். இந்தப்படம் நான் பார்த்துவிட்டேன். சந்திராவின் கோபம் ஒரு அர்த்தமுள்ள படைப்பாக மாறியுள்ளது இப்படம் கண்டிப்பாக பெரிய வெற்றியை பெறும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

இயக்குநர் சீனு ராமசாமி பேசியதாவது:

ஒரு நாள் டெல்லியில் ஒரு பயணத்தில் தயாரிப்பாளர் மதியழகன் சந்திரா ஒரு அருமையான கதை செய்துள்ளார் அதை தயாரிக்கலாம் என்று நினைத்துள்ளேன் என்றார். உடனே  அவர் எழுதிய சிறுகதையின் தரத்தை சொல்லி முதலில் அந்தப்படத்தை கமிட் செய்யுங்கள் என்றேன். இந்தப்படத்தின் விஷுவல்கள் ரத்தமும் சதையுமாக புதிதாக இருக்கிறது. ஒரு பெண் எழுத்தாளர் இயக்குநராவதை எழுத்தாளர்களாகிய நீங்கள் தான் ஆதரிக்க வேண்டும், பெரிய படங்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் சிறிய படங்களுக்கு கிடைப்பதில்லை, கள்ளன் வெளியாகும் நாள் தான் பொன்னான நாள்.  கரு பழனியப்பன் இங்கு வந்திருக்க வேண்டும், நன்றாக நடித்துள்ளார். திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து ஒரு அமைச்சரை அழைத்திருந்தால் கரு பழனியப்பன் வந்திருப்பார். ஒரு நியாயமான மனிதர் கோபத்தால் வரவில்லை என்பது சரியில்லை அவர் முன்னின்று இந்தப்படத்தை தூக்கியிருக்க வேண்டும். பீஸ்ட் வெற்றி பெறும் ஏனெனில் அது பெரிய ஹீரோ நடித்த படம் ஆனால் கள்ளன் வெற்றி பெறுவதில் தான் ஒரு நாகரீகம் இருப்பதாக நான் கருதுகிறேன். கள்ளன் படம் சிறப்பான வெற்றியை பெற வேண்டும் வாழ்த்துக்கள்

நடிகர் ஆரி அர்ஜுனன் பேசியதாவது:

இந்த படவிழாவுக்கு வருவதற்கு மிக முக்கிய காரணம் சந்திரா மேடம் தான். இங்கு இந்தப்படத்தை குறிப்பிடும் போது, விடுதலை என்றார்கள், விடுதலை என்பது யாருக்கு எதிலிருந்து விடுதலை என்பது முக்கியம். என்னை சினிமாவுக்கு என் இயக்குநருக்கு அறிமுகப்படுத்தியது சந்திரா அவர்கள் தான். அவரின் கோபம் குறித்து எனக்கு நிறைய தெரியும், கிராமத்திலிருந்து வந்து, எதிலும் புரட்சியை புதுமையை தேடும் நபர். ஆண் மட்டும்தான் கமர்ஷியல் படம் எடுக்க முடியுமா என சொல்லி அழுத்தமான கதையை தான் நினைத்ததை எடுத்துள்ளார். இந்தப்படத்தில் அமீர் அண்ணன் அல்லது நான் தான் நடித்திருக்க வேண்டியது. கரு பழனியப்பன் அண்ணன் வரவில்லை என்பது எனக்கு வருத்தம் தான். சந்திரா அவர்களின் பல வருட போராட்டம். ஒரு பெண்ணின் பார்வைக்கு மரியாதை தந்த தயாரிப்பாளர் மதியழகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். எல்லோரும் படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் சந்திரா தங்கராஜ் பேசியதாவது:

என்னுடைய தயாரிப்பாளருக்கு முதல் நன்றி. இவருக்கு முன்னால் நூறு பேருக்கு கதை சொல்லியுள்ளேன். எல்லோரும் நீங்கள் எப்படி இந்தப்படம் செய்வீர்கள் என மறுத்து விடுவார்கள் ஆனால் மதியழகன் சார் கதை கேட்ட மாலையிலேயே படம் செய்யலாம் என சொல்லிவிட்டார். என் நண்பர்கள் தான் எனக்கு துணையிருந்தனர், ராஜு முருகன் எனக்காக தயாரிப்பாளர் பார்த்துள்ளார் ஆரியும் நானும் நிறைய சண்டை போட்டுள்ளோம், ஆரி தான் முதலில் நடிக்க வேண்டும் என நினைத்தோம் ஆனால் அந்த நேரத்தில் நெடுஞ்சாலை வந்ததால் செய்ய முடியவில்லை. நான் தொடர்ந்து தொந்தரவுக்குள்ளா க்கியது ஜெயராணியைதான். என்மேல் அக்கறை அதிகம் கொண்டவர் தமயந்தி. இருவருக்கும் நன்றி. படத்தில் நடித்த அனைவரும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். நமோ நாராயணா ஒன் டேக் ஆர்டிஸ்ட். எடிட்டரை மிகவும் தொந்தரவு செய்துள்ளேன். இசையமைப்பாளர் கே மட்டும் தான் நான் கோப்படாத நபர்.  இந்த படத்திற்கு வருட கணக்காக இசையமைப்பாளர் வேலை செய்துள்ளார். தமிழ் சினிமாவில் புதுமையான ஒரு முயற்சியாக இந்த படத்தின் இசை இருக்கும். கரு. பழனியப்பன் தான் இந்த படத்தில் முதல் பிரதி தயாரித்தார். படத்தின் நடிகர்கள் அனைவரும் அசிஸ்டண்ட் டைரக்டர் போல் வேலை பார்த்தனர். குறைந்த செலவில் தான் படத்தை எடுத்து முடித்தோம். சாதாரண நிர்வாக சிக்கல்கள் தான் எனக்கும் கரு.பழனியப்பன் அவர்களுக்கும் இடையில் இருப்பது அது மறைந்து விடும். அவர் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கலாம். இந்த படம் இவ்வளவு நாட்கள் ஆனது விதி போல் உள்ளது. இது எல்லாம் தான் என் கோபம். ஒரு நீண்ட நெடிய போராட்டம் எனக்குள் இருந்தது. என் திரைப்பட நிகழ்ச்சிக்கு தான் வருவேன், அதுவரை எந்த சினிமா நிகழ்ச்சிக்கும் செல்ல மாட்டேன் என என் மகள் கூறினாள். இந்த படம் கண்டிப்பாக லாபகரமான ஒன்றாக இருக்கும். நன்றி