‘கள்ளன்’ திரை விமர்சனம்!

172

சென்னை.

மதுரைக்கு அடுத்த தேனி அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் வசிக்கும் வேல. ராமமூர்த்தி. தன் மகன் கரு பழனியப்பனுக்கு காட்டுக்குள் இருக்கும் மிருகங்களை எப்படி வேட்டையாடுவது என்பதை கற்றுக் கொடுக்கிறார். பணத்திற்காக எந்த உயிரையும் கொல்லக் கூடாது என்றும் அறிவுரை கூற்கிறார்.  இந்த சூழ்நிலையில் அவரது தந்தை வேல. ராமமூர்த்தி ஒரு மிருகத்தை வேட்டையாடும் போது அந்த மிருகம் அவரை கொன்று  விடுகிறது இதனால் தன் தந்தைக்குப் பிறகு  கரு பழனியப்பன் காட்டுக்கு சென்று தனது வேட்டைத் தொழில் செய்ய ஆரம்பிக்கிறார். ஆனால் காட்டில்  உள்ள எந்த மிருகங்களையும் வேட்டையாடக் கூடாது என்று வனத்துறையினர் தடை போடுகின்றனர்.  இந்நிலையில் என்ன செய்வது என்று புரியாமல் தவித்துக்கொண்டிருந்த கரு பழனியப்பன்,  கேரளாவில் உள்ள ஒரு நபர் மூலம் கள்ளத் துப்பாக்கிகளை தயார்செய்து விற்கிறார்.

ஒருகட்டத்தில் இந்த விஷயம் காவல்துறையினருக்கு தெரியவர, அதனால் வேறு தொழில்களில் ஈடுபடலாம் என்று நண்பர்களுடன் கலந்து ஆலோசிக்கிறார். இவர்களுடன் இருந்த ஒரு நண்பன் திருட முயற்சிக்கலாம் என்று சொல்ல,  அதன் பிறகு தன் நண்பர்களுடன் திருட்டுத் தொழிலில் ஈடுபடுகிறார் கரு பழனியப்பன். இவர்கள் திருட்டு தொழிலில் ஈடுபடும் போது எதிர்பாராத விதமாக சில கொலைகள் நடக்கின்றது.  அப்போது அவர்கள் காவல் துறையினரிடம் சிக்கிக் கொள்ள அனைவரும் சிறைக்குச் செல்கின்றனர். சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும்போது திருந்தாமல் மேலும் மேலும் குற்றங்களை செய்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் காவல் துறையினரிமிருந்து தப்பிக்க முயற்சிக்கும்போது நாயகி நிகிதாவை சந்திக்கிறார் கரு பழனியப்பன். நிகிதா தன் இரண்டாவது தந்தையின் பாலியல் தொல்லையிருந்து தப்பித்துக் கொள்ள முயற்சி செய்கிறார்.  அப்போது கரு பழனியப்பன், நிகிதா மீது அனுதாபப்பட்டு தன்னுடன் அழைத்து செல்கிறார். இதனால்  கரு பழனியப்பன் மீது நிகிதாவுக்கு  காதல் உண்டாகிறது.  இந்நிலையில் காவல்துறையினர்  கரு பழனியப்பன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து கைது செய்கின்றனர். பிறகு நீதிமன்றத்தில் கரு பழனியப்பனுக்கு தூக்கு தண்டனை கிடைக்கிறது. தூக்கு தண்டனை கைதியான இவர் சிறைச்சாலையில் இருக்கும் போது எப்படியாவது சிறையை  விட்டு தப்பி ஓட வேண்டும் என்று , நமோ நாராயணன்மற்றும் சிறையில் உள்ள  நண்பர்களுடன் இணைந்து  திட்டம் தீட்டுகிறனர். இறுதியில் சிறையில் இருந்து அவரும், அவரது நண்பர்களும் தப்பித்தார்களா?  தன் காதலியை திருமணம் செய்து கைப்பிடித்தாரா? என்பதுதான் படத்தின் மீதி கதை.

இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் கருபழனியப்பன் எந்தவித அலட்டல் இல்லாமல் தன் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.  நாயகியாக நடிக்கும் நிகிதா தனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.  நமோ நாராயணா இந்த படத்தில் ஒரு சிறைக் கைதியாக நல்ல கேரக்டரில் நடித்திருக்கிறார். அவரது தம்பியாக  வரும் சௌந்தரராஜன் தன் நடிப்பில் மெருகூட்டி நடித்திருக்கிறார். இன்னொரு கதாநாயகியாக நடிக்கும் மாயா சிறந்த வில்லியாக தன் நடிப்புத்திறமையை அனைவரையும் மிரள வைத்திருக்கிறார்.

1980களில் நடக்கின்ற காலகட்டத்தில் நடக்கும் ஒரு கதையை சிறப்பாக திரைக்கதையாக்கி அனைவரும் ரசிக்கும் விதத்தில் இயக்கியிருக்கிறார் சந்திரா தங்கராஜ்.  இவர் இயக்குனர்கள் அமீர், ராம் போன்றவர்களிடம்  உதவியாளராக பணியாற்றியவர்.  இவர் இயக்கும் முதல் படம் இது. படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களையும் மிகவும் திறம்பட கையாண்டு நடிக்க வைத்திருக்கிறார். படத்தின் இரண்டாம் பாதியில் பல திருப்பங்களுடன் மிகவும் சுவாரஸ்யமாக இயக்கியிருக்கிறார்.

எம்.எஸ்.பிரபு மற்றும் கோபி ஜெகதீஸ்வரன் இருவரது ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப காட்சிகள் பயணித்திருப்பதோடு படம் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கிறது. கே. இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படியாக இருக்கிறது. பின்னணி இசையின் மூலம் கதாப்பாத்திரங்களின் உணர்வுகளை கதைக்கு தகுந்தவாறு மிக கச்சிதமாக அமைத்து இருக்கிறார். படத்தொகுப்பாளர் எஸ்.பி.அகமதுவின் பணி படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில், ‘கள்ளன்’  படத்தை அனைவரும் பார்க்கலாம்.

ரேட்டிங் 3.5/5

BY

RADHAPANDIAN.